ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ராஜராஜ சோழன் இந்துவா? வரலாற்றில் இருப்பது என்ன?

ராஜராஜ சோழன் இந்துவா? வரலாற்றில் இருப்பது என்ன?

ராஜராஜ சோழன்

ராஜராஜ சோழன்

Rajaraja Cholan History | ராஜராஜ சோழனின் மதம் குறித்து சமூகவலைதளங்கள் தொடங்கி, திரும்பும் திசையெல்லாம் தீவிரமாக விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவர் யார் என்பதை விளக்குகிறது இந்த தொகுப்பு.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தஞ்சையை தலைநகராக கொண்டு, இந்தியா உள்பட பல நாடுகளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்த மாமன்னன் ராஜராஜ சோழன். இந்திய நிலப்பரப்புடன், இலங்கை, மாலத்தீவு, சிங்கப்பூர், மலேசியா, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளையும் வெற்றிக் கொண்ட மாமன்னன். சோழநாட்டின் தலைநகரான தஞ்சையில் அவன் கட்டி எழுப்பிய திருக்கோயில்தான், உலக அதிசயங்களில் ஒன்றான தஞ்சை பெரிய கோயில். தீவிர சிவபக்தனான மாமன்னன் ராஜராஜ சோழன் சைவ சமயத்தை பின்பற்றியதாக கூறுகின்றன கல்வெட்டுகள்.

சைவம், வைணவம், கௌமாரம், சௌரம், காணாபதியம், சாக்தம், சமணம், பவுத்தம் ஆகியவையே ராஜராஜ சோழன் வாழ்ந்த காலத்தில் பின்பற்றப்பட்ட சமயங்கள். சிவனை முதன்மையாக கொண்டு வழிபடுவது சைவம் என்றும், விஷ்ணுவை வழிபடுவது வைணவம் என்றும் வழங்கப்பட்டது. அதேபோல், முருகனை வழிபடுவது கௌமாரம், கணபதியை வழிபடுவது காணாபதியம், சக்தியை வழிபடுவது சாக்தம், சூரியனை வழிப்படுவது சௌரம் என வழங்கப்பட்ட காலம் அது. பவுத்தமும், சமணமும் அழிவை நோக்கிச் சென்ற அக்காலத்தில், கடவுளை வணங்காமல் சித்தர்கள் வாழ்ந்ததாகவும் கல்வெட்டுகள் உண்டு.

இவற்றைத் தவிர வேறு மதங்களின் பெயர்கள் எதுவும் ராஜராஜ சோழனின் காலக் கல்வெட்டுகளில் இல்லாத நிலையில், அவரது காலத்தில் இந்து என்ற சொல்லாடல் பயன்பாட்டில் இல்லை என்பது உறுதி. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் எதிலும் இந்து என்ற சொல் நேரடியாக மதத்தை குறிக்கும் வகையிலான ஆதாரங்கள் இல்லை என்பதும் கல்வெட்டு அறிஞர்களின் ஆணித்தரமான கருத்து. சிவனை முழு முதற்கடவுளாக வணங்கும் சைவ சமயமே தழைத்தோங்கிய அந்த காலத்தில், ராஜராஜ சோழன் பின்பற்றியது, சைவ சமயத்தின் உட்பிரிவான பாசுபத சைவம். சிவன் மீது அவன் கொண்ட பெரும்பற்றின் காரணமாகவே, உருவாக்கப்பட்டது, தஞ்சை பெருவுடையார் கோயில்.

Also Read : திருச்சி சிவா மகன் சூர்யாவுக்கு கைலாசாவின் தர்மரட்சகர் விருது - நித்யானாந்தா அறிவிப்பு

ராஜராஜ சோழன் காலத்தில் சிவன் கோயில்களில் மட்டுமல்லாமல், தேவாரம், திருமுறை பாடல்களிலும் இடம்பெற்ற சமயம், சைவம் தான். பவுத்தமும், சமணமும் பெரும் அழிவைச் சந்தித்த ஒன்பதாம் நூற்றாண்டில், ஷன்மதம் என சங்கரர் குறிப்பிட்டது 6 சமயங்களை மட்டும்தான். ஷன்மதம் எனக் கூறிய சங்கரர் கூட இந்து மதம் என்ற சொல்லை பயன்படுத்தவில்லை என்பது உறுதியான வரலாற்று உண்மை. வடமேற்கு திசையில் இருந்து இந்தியாவுக்கு வந்த பாரசீகர்களும், கிரேக்கர்களும், இந்திய நாட்டை குறிப்பிட அப்போது பயன்படுத்திய பெயர் சிந்து.

சிந்து நதி பகுதியில் வசிப்பவர்கள் என்ற பொருளுடன் அவர்கள் வழங்கிய பெயர், சிறிதுசிறிதாக மருவி இந்து என மாறிவிட்டதாக கூறுகிறார்கள் வரலாற்று அறிஞர்கள். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை குறிப்பிட பயன்படுத்திய சொல்தான் இந்து என்கிறார்கள் பலர். வெவ்வேறு கடவுள்களை வணங்கும் மக்களை ஒரே பிரிவாக சேர்த்து, இந்து என பெயர் வைத்தவர் சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர் என்பது பல அறிஞர்களின் ஆணித்தரமான கருத்து.

Also Read : தென்னிந்தியாவில் இந்தி படிப்பவர்களில் தமிழகம் முதலிடம்!

1790ஆம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் சட்டங்களை தொகுத்தபோது, பல்வேறு சமயங்களை சேர்த்து தொகுக்கப்பட்ட பெயர்தான் இந்து என்கிறார்கள். இதன் அடிப்படையிலேயே ராஜராஜ சோழனை இந்து அடையாளத்திற்குள் திணிப்பதாக கூறியுள்ளார், இயக்குநர் வெற்றிமாறன். இந்த கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தீவிர சிவபக்தனான ராஜராஜ சோழன், இந்து இல்லையா? என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே, ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயரே இல்லை என விளக்கம் அளித்துள்ளார், நடிகர் கமல்ஹாசன். ஆனால், இதை ஏற்க மறுத்துள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், இந்து மதங்களின் அடையாளங்களை யாரும் மறைக்க முயற்சிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

ஆனால், சைவம், வைணவம் மதங்களில் உள்ளதுபோல, இந்து என்ற மதத்திற்கு தனியாக ஒரு வழிபாட்டு முறையோ, முழு முதற்கடவுளோ கிடையாது என்பது அறிஞர்களின் விளக்கம். கர்நாடகாவில் இன்றும் சிவலிங்கத்தை மட்டும் வணங்கும் லிங்காயத்துகள், தாங்கள் இந்துக்கள் இல்லை என்று சொல்வதற்கு இதுவே காரணம் என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்து.

செய்தியாளர் : பெரிய பத்மநாபன்

First published:

Tags: Rajarajacholan, Tanjore