கேரளாவின் கொச்சி நகரில் மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்ட இதயம், சுமார் 65 நிமிடங்களில் அதாவது 1 மணிநேரம் 5 நிமிடங்களில் சென்னை விமானநிலையம் கொண்டுவரப்பட்டு, சென்னை மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 51 வயது ஆண் நபருக்கு பொருத்தப்பட்டு உள்ளது. முன்னதாக கடந்த 19-ம் தேதி கொச்சியை சேர்ந்த 30 வயது இளைஞர் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
இதனை அடுத்து சிகிச்சைக்காக அங்கிருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் அந்த இளைஞர் மூளைச்சாவு அடைந்து விட்டார்.
மூளைச்சாவு அடைந்து விட்டதால் விபத்தில் சிக்கிய அந்த இளைஞர், உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்பதை மருத்துவர்கள் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எடுத்து கூறினர். அதே சமயம் அவரது சில முக்கிய உடல் உறுப்புகள் நன்கு வேலை செய்து கொண்டிருப்பதால், உடலுறுப்பு தானம் செய்ய சம்மதிதால் அதன் மூலம் பலர் புது வாழ்வு பெற முடியும் என்பதையும் மருத்துவர்கள், மூளைச்சாவு அடைந்த நபரின் உறவினர்களிடம் எடுத்து கூறினர்.
தங்கள் மகன் பிழைக்காவிட்டாலும் அவர் மூலம் பலர் உயிரோடிருக்கும் வாய்ப்பை வழங்க குறிப்பிட்ட இளைஞரின் பெற்றோர் கடும் மன வேதனையிலும் சம்மதம் தெரிவித்தனர். உறவினர்களின் சம்மதத்தை தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த நபரின் இதயம் சென்னை குரோம்பேட்டையில் அமைந்திருக்கும் ரேலா மருத்துவமனைக்கும், அவரின் மற்ற முக்கிய உடல் உறுப்புகள் கேரள மாநில மருத்துவமனைகளுக்கும் வழங்கி உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் பலரது வாழ்வை காப்பாற்ற முடிவு செய்யப்பட்டது.
நிலையான பதிவு நெறிமுறையின்படி மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் கேரள மருத்துவமனைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழகத்தின் ரேலா மருத்துவமனைக்கு மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் ஒதுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் ஆறுமுகம் தலைமையிலான நால்வர் குழு கொச்சிக்கு விரைந்தது.
Also read... 100 வயது அடைந்த தாத்தாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன பேத்தி - வைரலாகும் ட்வீட்!
அங்கு மூளைச்சாவு அடைந்த நபரிடமிருந்து எடுக்கப்பட்ட இதயத்தை வெறும் 65 நிமிடங்களில் காவல்துறை உதவியுடன் விமானத்தில் சென்னைக்கு கொண்டு வந்தது. சென்னை விமான நிலைய பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் சென்னை காவல்துறை உருவாக்கிய சிறப்பு வழித்தடத்தின் வழியே ரெலா மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு 5 நிமிடங்களுக்குள் இதயம் அதிவிரைவாக கொண்டு செல்லப்பட்டது.
மருத்துவமனைக்கு குறித்த நேரத்திற்குள் சரியாக கொண்டு செல்லப்பட்ட இதயம், டைலேட்டட் கார்டியோ மயோபதி ( Dilated Cardio Myopathy)என்ற நோயால் பாதிக்கப்பட்டு இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக கடந்த பிப்ரவரியில் பதிவு செய்து உறுப்புக்காக காத்திருந்த சென்னை ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 51 வயதான ஆணுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.