வெளியூர்களுக்கு சென்றால் ஹோட்டலில் தங்குவது பலருக்கு இனிமையான அனுபவமாக இருந்தாலும், சிலருக்கு மறக்க முடியாத கசப்பான அனுபவங்களை தரும். பெரும்பாலான ஹோட்டல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கவே முயற்சிக்கின்றன.
ஆனாலும் ஒருசில சந்தர்ப்பங்களில் சேவைகளில் பெரிய குறைபாடுகள் ஏற்பட்டு விடும். ஹோட்டல் ரூமில் தங்கி இருந்த போது ஏற்பட்ட அசம்பாவிதம் ஒன்றுக்கு எதிராக, நபர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஹோட்டலில் நடந்த ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தினால் ஒரு காதில் கேட்கும் திறனை இழந்துள்ளதாக கூறி ஓஹியோவின் க்ளென்மாண்ட் நகரை சேர்ந்த டோட் வான்சிகில் (Todd VanSickle), தான் தங்கி இருந்த ஒரு ஹோட்டலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு மார்ச் இறுதியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நீதிமன்ற ஆவணங்களின்படி ஹோட்டலில் அவர் தூங்கி கொண்டிருந்த போது, அங்கிருந்த கரப்பான் பூச்சி தனது காதுக்குள் ஊர்ந்து சென்றதால், குறிப்பிட்ட ஒரு காதில் கேட்கும் திறனை இழந்துள்ளதாக டோட் வான்சிகில் குற்றம்சாட்டி உள்ளார். இதனை தொடர்ந்து வாடிக்கையாளர் சேவையில் அலட்சியம் காட்டி விட்டதாக சாண்ட்ஸ் ஓஷன் கிளப் ஹோம் ஓனர்ஸ் அசோசியேஷன் மற்றும் மைர்டில் பீச்சில் (Myrtle Beach) சாண்ட்ஸ் ஓஷன் கிளப் ரிசார்ட்டை நடத்தும் ஓஷன் அன்னிஸ் ஆபரேஷன்ஸ், இன்க் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார்.
கடந்த ஜூலை 2021 -ல் ஹோட்டலில் தங்கியிருந்த போது தனது காதில் கரப்பான்பூச்சி ஊர்ந்து சென்றதால் ஏற்பட்ட கடும் வலியுடன் எழுந்தாக மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தனக்கு செவித்திறன் இழப்பை ஏற்படுத்தியதோடு வீடு மற்றும் அலுவலகத்தில் தனது இயல்பான வழக்கத்தை சீர்குலைத்ததாகவும் மனுவில் டோட் கூறி இருக்கிறார்.
Also read... இளைஞரின் முதுகில் வால் போல வளர்ந்துள்ள முடி - கடவுளின் அவதாரம் என கூறும் பொதுமக்கள்!
தனக்கு குறிப்பிட்ட ரூமை தங்குவதற்காக கொடுக்கும் முன் அங்கு கரப்பான் பூச்சிகள் அல்லது வேறு பூச்சிகள் உள்ளனவா, அறை தூய்மையாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யாமல் சுகாதாரத்தை பேணுவதில் நிர்வாகம் காட்டிய அலட்சியம் காரணமாக, கரப்பான் பூச்சி காதுக்குள் சென்றதால் வலி மிகுந்த மற்றும் நிரந்தர காயங்களுக்கு ஆளாகியுள்ளதாகவும், அதிக மருத்து செலவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக அந்த காதில் கேட்கும் திறனை இழந்துள்ளது தனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாகவும் மனுவில் டோட் வான்சிகில் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த பிரச்சனையால் தனது வாழ்வில் ஊதியம் மற்றும் சம்பாதிக்கும் திறனை இழந்துள்ளதாகவும் டோட் வான்சிகில் குறிப்பிட்டு உள்ளார். எனவே தனக்கு நஷ்ட ஈடு தர உத்தரவிட வேண்டும் என்றும் டோட் வான்சிகில் நீதிமன்றத்தை கேட்டு கொண்டுள்ளார். இதனிடையே Amerisleep-ன் ஆய்வின்படி, சராசரியாக சுமார் 15 % ஹோட்டல்ஸ், மோட்டல்ஸ் மற்றும் லாட்ஜ்கள் பூச்சி பிரச்சனைகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.