Home /News /trend /

அரசே அறிமுகப்படுத்தப்போகும் புதிய வீடியோ கேம் பற்றி தெரியுமா? 

அரசே அறிமுகப்படுத்தப்போகும் புதிய வீடியோ கேம் பற்றி தெரியுமா? 

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Ashadhi quest game | ஆன்லைன் வீடியோ கேம் பிரியர்களை குஷியில் ஆழ்த்தும் விதமாக மத்திய அரசே புதிய வீடியோ கேமை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India
  இன்றைய தலைமுறையில் ஆன்லைன் வீடியோ கேமிற்கு அடிமையாகாதவர்களே இல்லை என சொல்லலாம். அந்த அளவிற்கு ஸ்கூல் குழந்தைகள் வரை அலுவலகம் செல்லும் ஆண்கள் வரை உலகம் முழுவதும் வீடியோகேமிற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பணம் கட்டி விளையாடுவது, பெற்றோரின் செல்போனில் விளையாடும் போது அவர்களது அக்கவுண்ட்டில் உள்ள சேமிப்பை ஆன்லைன் கேமில் தொலைப்பது, கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்வது போன்ற சம்பவங்கள் அதிக அளவில் அரங்கேறி வருகின்றன.

  மேலும் பப்ஜி, ஃப்ரீ பயர் போன்ற ஆன்லைன் கேமில் காண்பிக்கப்படும் ஆயுதங்கள், வன்முறை சம்பவங்கள், ரத்தம் தெறிக்கும் கொடூர காட்சிகளால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதோடு, அவரது குண நலனிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கிறது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு தான் பப்ஜி, ஃபுளூவேல் போன்ற விளையாட்டுக்களை அரசு தடை செய்தது. தற்போது ஆன்லைன் வீடியோ கேம் பிரியர்களை குஷியில் ஆழ்த்தும் விதமாக மத்திய அரசே புதிய வீடியோ கேமை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை மத்திய அரசு மிகவும் விமர்சையாக கொண்டாடியது. வீடு தோறும் மூவர்ண கொடி ஏற்றுதல், சோசியல் மீடியாக்களில் தேசியக்கொடியை டி.பி.யாக வைப்பது என பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு கோடிக்கணக்கான மக்கள் செவி சாய்ந்தனர். தற்போது இந்திய சுதந்திரம் பெற போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக ‘ஆசாதி குவெஸ்ட்’ என்ற புதிய மொபைல் கேம் குறித்த அறிவிப்பை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டுள்ளார்.

  Read More : நிலவில் செடிகளை பயிரிடும் திட்டம்: நாசாவுடன் கைகோர்க்கும் ரெட் வயர் நிறுவனம்


  இந்திய சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ இயக்கத்துடன் பெங்களூருவைச் சேர்ந்த ஜிங்கா இந்தியா என்ற வீடியோ கேம் டெவலப்பர் நிறுவனத்துடன் இணைந்து புதிய கேம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஆசாடி குவெஸ்ட்: மேட்ச் 3 மற்றும் ஆசாடி குவெஸ்ட்: ஹீரோஸ் ஆஃப் பாரத் என்ற இரண்டு மேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விளையாட்டுடன் சுதந்திர போராட்டத்தின் போது நடைபெற்ற முக்கிய சம்பவங்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், அவர்களைப் பற்றிய தகவல்கள் ஆகியன இடம் பெற்றுள்ளது.

  கடந்த 24ம் தேதி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பள்ளி முதல் கல்லூரி வரை படிக்கும் இளம் பருவத்தினர் பலரும் ஆன்லைன் கேமிற்கு அடிமையாக உள்ளதால், அவர்களது கல்விக்கும், சுதந்திர போராட்டத்தின் வரலாற்றை அவர்களுக்கு போதிக்கும் வகையிலும் ‘ஆசாதி குவெஸ்ட்’ கேம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

  ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரு தரப்பு யூஸர்களும் பயன்படுத்தும் வகையில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் ‘ஆசாதி குவெஸ்ட்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 2022 முதல் இந்த கேம் உலகம் முழுவதும் கிடைக்கும் என அறிவித்த மத்திய அமைச்சர், கேமிங் துறையில் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் உள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டில் இந்தத் துறை சுமார் 28 சதவிகிதம் வளர்ச்சியடைந்த நிலையில், 2023 ஆம் ஆண்டில் விளையாட்டாளர்களின் எண்ணிக்கை 45 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Game, Game Applications, Trending, Viral

  அடுத்த செய்தி