நவீன யுகத்தில் என்ன தான் பெண்கள் வீட்டை தாண்டி விண்வெளி வரை சாதனை படைத்தாலும் ஆண்களுக்கு நிகராக ஊதியமோ, அங்கீகாரமோ கிடைப்பது கிடையாது. சிலருக்கு நிறுவனத்தையே நிர்வாகம் செய்யும் அளவிற்கு தலைமை பொறுப்புகள் கொடுக்கப்பட்டாலும், ஒரு ஆண் ஊழியருக்கு கொடுக்க கூடிய சம்பளம், சலுகைகள் போன்றவை தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் நூற்றாண்டுகளாக நீடித்து வருகிறது.
இப்படி ஆண்களை விட பெண் ஊழியர்களுக்கு குறைவாக ஊதியம் தருவது, தகுதி குறைந்த பணிகளில் வாய்ப்பு வழங்குவது என பாலின பாகுபாடுடன் நடந்து கொண்டதாக கூகுள் நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கில் 118 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனம் ஒரே விதமான பதவிகளில் ஆண்களைவிட பெண்களுக்குக் குறைவான ஊதியம் வழங்குதல் மற்றும் தகுதி குறைவான பணிகளில் பெண்களை பணியமர்த்துதல் எனப் பெண்களை சமமாக நடத்தாமல் பாலின பாகுபாடு காட்டிவருவதாக புகார்கள் எழுந்தன. இது கலிபோர்னியாவின் சம ஊதியச் சட்டத்தை மீறிய செயல் என்பதை சுட்டிக்காட்டி 3 பெண்கள் 2017ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தனர்.
ஜனவரி 1, 2019 முதல் திருத்தப்பட்ட சம ஊதியச் சட்டத்தின்படி, எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஊழியர்கள் அல்லது வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இடையேயான ஊதிய ஏற்றத்தாழ்வை முதலாளிகள் ஒரு ஊழியரின் முந்தைய ஊதியத்தின் அடிப்படையை வைத்து தீர்மானிக்க கூடாது என்ற சட்டம் உள்ளது.
Read More : இந்த Bubble Wrap உடைத்து விளையாடுவதற்கு அல்ல... உண்மையில் எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?
கலிபோர்னியா அரசாங்கத்தின் தொழில்துறை உறவுகள் துறையின் இணையதளத்தின்படி: "திருத்தப்பட்ட சம ஊதியச் சட்டம், எதிர் பாலினத்தவர் அல்லது வேறு இனத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்குக் கொடுக்கும் ஊதியத்தை விட குறைவான ஊதிய விகிதங்களை முதலாளிகள் வழங்குவதைத் தடை செய்கிறது. கணிசமான அளவில் ஒரே மாதிரியான வேலைக்காக, திறன், முயற்சி மற்றும் பொறுப்பு ஆகியவற்றை பொறுத்து ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதலாக, தற்போதைய சட்டத்தின் கீழ், ஒரு ஊழியர் தான் ஒரு ஊழியர் அல்லது எதிர் பாலினம், வேறுபட்ட இனம் அல்லது வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த ஊழியர்களைக் காட்டிலும் குறைவான ஊதியம் பெறுகிறார் என்பதை நிரூபிக்கலாம் என்றும், ஊழியரின் சம்பள ஏற்றத்தாழ்வு முறையானதுதான் என்பதை முதலாளிகள் தரப்பும் நிரூபிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதில் முதலாளிகளுக்குச் சாதகமான விஷயமும் உள்ளது. அதாவது ஒரே மாதிரியான வேலைக்கான ஊதியத்தில் உள்ள வேறுபாட்டை பணி மூப்பு, தகுதி, உற்பத்தியை அளவிடும் அமைப்பு மற்றும் பாலினம், இனம் ஆகியவற்றை தவிர வேறு மாதிரியான காரணங்களை நிறுவனங்கள் முன்வைத்தால் அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும்.
தற்போது, இந்த வழக்கில் 2013ம் ஆண்டு செப்டம்பர் 14 முதல் 236 வெவ்வேறு பதவிகளில் கூகுள் மூலம் கலிபோர்னியாவில் பணிபுரியும் 15,500 பெண் ஊழியர்களுக்கு சுமார் 118 மில்லியன் டாலர் இழப்பீடு தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது கூகுள்.
பலமுறை கூகுள் நிறுவனம் ஊழியர்களை கையாளும் விதம் கேள்விக்குறியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பெண் பொறியாளர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கியதாகவும், ஆசிய வேலை விண்ணப்பங்களை புறக்கணித்ததாகவும் எழுந்த புகாரை தீர்க்க கூகுள் $2.5 மில்லியன் செலுத்த ஒப்புக்கொண்டது.
கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "எங்கள் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளில் சமத்துவத்தை நாங்கள் உறுதியாக நம்புகிறோம், ஏறக்குறைய ஐந்து வருட வழக்குகளுக்குப் பிறகு, எந்தவொரு அனுமதியும் அல்லது கண்டுபிடிப்புகளும் இல்லாமல் இரு தரப்பும் இந்த விஷயத்தைத் தீர்ப்பதற்கு ஒப்புக்கொண்டன. அனைவரின் நலனுக்காகவும், இந்த ஒப்பந்தத்தை எட்டுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
கூடுதலாக, நிறுவனம் அனைத்து ஊழியர்களையும் நியாயமாகவும் சமமாகவும் நடத்துவதற்கும், ஆண் மற்றும் பெண் ஊழியர்களை பணியமர்த்தும் போது ஊதிய வேறுபாடு கண்டறியப்பட்டால் அதனை சரி செய்யவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கூகுள் நிறுவனம் முயன்று வருவதாக கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.