தொழில்நுட்பம் கொண்ட ஒரு டூல் என்பதையும் தாண்டி, கழுகுப் பார்வை கொண்டு பார்ப்பவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவும் கூகுள் மேப்ஸ் இருக்கிறது. சின்னஞ்சிறிய விஷயம் முதல் மாபெரும் வரலாற்றுப் பதிவுகள் வரையில் பல்வேறு விஷயங்கள் கூகுள் மேப்ஸ் மூலமாக கண்டறியப்படுகின்றன. அப்படியொரு விஷயத்தை அண்மையில் கூகுள் மேப்ஸ் மூலமாக கண்டறிந்த ஒருவர், அதுகுறித்து ரெடிட் இணையதளத்தில் பகிர்ந்துள்ளார்.
வழக்கம்போல இணையதளத்தில் பொழுதுபோக்கிக் கொண்டிருந்த அந்த நபர், சீனப் பெருஞ்சுவரை கூகுள் மேப்ஸ் மூலமாக உற்று நோக்கினார். அந்த கற்களால் கட்டப்பட்ட எழுத்துக்களைப் போல ஒன்று தென்பட்டது. அதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த அவர், அதை அப்படியே ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொண்டார்.
கூகுள் மேப்ஸ் மூலமாக, தான் கண்ட இந்த அரிய நிகழ்வு குறித்து ரெடிட் இணையதளத்தில் அந்த நபர் பகிர்ந்து கொண்டார். அவர் வெளியிட்டிருந்த ஃபோட்டோவில் மிக அடர்த்தியான மர செடிகளுக்கு மத்தியில் பெரும், பெரும் எழுத்துகளில் ஏதோ ஒன்று எழுதப்பட்டிருந்தது. குறிப்பாக, விண்ணில் இருந்து உற்று நோக்கும் கூகுள் மேப்ஸ் தளத்தில் அது தென்படுகிறது.
தொடர்புடைய இடத்தை மற்ற பயனாளர்களும் பார்த்துக் கொள்ளும் வகையில், கூகுள் மேப்ஸ் சேர்ச் பாரில் தேடுவதற்கான முகவரியையும் (40.4499299, 116.5487750) என்று அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட அந்த சுவர் எழுத்துகளில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று அவர் நெட்டிசன்களிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
சுவர் எழுத்துக்கள் குறித்து நெட்டிசன்கள் அளித்துள்ள பதிவில், “தலைவர் மாவோவுக்கு விசுவாசம்’’ அல்லது “எனது விசுவாசம் தலைவர் மாவோவுக்கானது’’ என அர்த்தம் கொண்டதாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதைய சூழலில் நெட்டிசன்களின் ஆவலை தூண்டும் வகையில் இணையதளத்தில் இது வலம் வந்து கொண்டிருக்கிறது என்றாலும் கூட, 8 ஆண்டுகளுக்கு முன்பாகவே இது ஏற்கனவே இணையதளத்தில் வலம் வந்த விஷயம் தான்.
Also read... வைரலாகும் மிக அரிதான வெள்ளை நிற கங்காரு புகைப்படம்!
கடந்த 2014ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி, மிச்லே ஒபாமா தனது இரண்டு மகளுடன் சென்று சீன பெருஞ்சுவரைப் பார்வையிட்டபோது, இதுகுறித்து இணையதளத்தில் பரவலாகப் பேசப்பட்டது.
அந்த நிகழ்வின்போது சீனப் பெருஞ்சுவரில் உள்ள 14வது டவரில் ஏறி நின்று புகைப்படம் எடுப்பதற்கு புகைப்பட கலைஞர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் எடுத்த புகைப்படத்தில் ஒபாமா குடும்பத்தினருடன் சேர்த்து, சுவர் எழுத்துக்கள் குறித்த படமும் இடம்பெற்றிருந்தது. அதில், “தலைவர் மாவோவுக்கு விசுவாசங்கள்’’ என்று எழுதப்பட்டிருந்தது.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சுவர் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது அதைச் சுற்றியிலும் மரம்,செடிகள் படர்ந்துள்ளன. சீனாவில் கடந்த 2008ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டபோது, அந்நாட்டு அரசு இந்த சுவர் எழுத்துக்களை புதுப்பித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.