வழக்கமாக 6 அடி உயரம் கொண்டவர்களையே நாம் அண்ணாந்து பார்க்க வேண்டியது இருக்கும். ஆனால், அதைவிட உயரம் என்றால் யோசித்து பார்க்க முடிகிறதா உங்களால். அப்படி ஓர் ஆச்சரிய மனிதர் கனா நாட்டில் இருக்கிறார். கனா தலைநகர் அக்ராவின் ஒரு கிராமத்தில் வசிக்கும் 29 வயதான சுலெமனா அப்துல் சமீதுக்கு கிகாண்டிசம் எனப்படும் உயரமாக வளரும் நோய் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் வழக்கமான பரிசோதனைக்காக உள்ளூர் கிளினிக் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு அளவீடு செய்தபோது அவரது உயரம் 9 அடி 6 அங்குலமாக இருப்பதாகவும், உலகிலேயே மிக உயரமான மனிதராக அவர் இருக்கலாம் எனவும் கூறப்பட்டது. ஆனால், உள்ளூர் கிளினிக்கில் பொருத்தமான அளவீட்டு கருவிகள் இல்லாததால், அவரது உயரத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.
சமீதின் உயரம் குறித்த உண்மைத் தன்மையை அறிய பிபிசி ஊடகத்தின் செய்தியாளர் முயற்சிகள் மேற்கொண்டார். அந்த கிராமத்தில் இருந்த கட்டடங்களின் சுவர்களைக் காட்டிலும் அவர் உயரமானவர் என்பதால் அவரது உயரத்தை அளவிட பொருத்தமான சுவரைத் தேடி அலைந்தார். ஒரு வழியாக சுவரை கண்டுபிடித்த நிலையில், அவரை உயரத்தை அளவீடு செய்தபோது 7 அடி 4 அங்குலமாக இருந்துள்ளது. இப்போது உலகத்தின் உயரமான மனிதராக அறியப்படும் துருக்கியைச் சேர்ந்த சுல்தான் கோசன் 8 அடி 2.8 அங்குலம் உள்ளார்.
அப்துல் சமீது தனது உயரம் அதிகரித்துக்கொண்டே இருப்பதை 22வது வயதில் உணர்ந்திருக்கிறார், “யாருக்குத் தெரியும் ஒருநாள் நானும் உலகின் உயரமான மனிதனாக மாறலாம்; நான் இப்போதும் வளர்ந்து வருகிறேன். ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு நான் உயரமாக வளர்ந்துகொண்டே இருக்கிறேன். நீங்கள் என்னை சில மாதங்கள் பார்க்காமல் இருந்தால் நான் உயரமாக வளர்ந்திருப்பதை உணர்வீர்கள். ” என்கிறார் அப்துல் சமீது கூறுகிறார்.
அவர் கால்களுக்கு பொருத்தமான செருப்பு இல்லாத காரணத்தால் கார் டயர் கொண்டு உள்ளூர் தொழிலாளர் மூலம் செருப்பு தைத்து அணிகிறார். அப்துல் சமீது மார்பான் என்னும் நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது முதுகெலும்பு வளைந்து பெரிதாக காணப்படுகிறது. மரபணு கோளாறு காரணமாக ஏற்படும் இந்த நோயின் முக்கியமான அறிகுறி என்பது கால்கள் பெரிதாக இருப்பதுதான்.
எனினும், அவரது உயரமே அவரை உள்ளூர் செலிபிரேட்டியாக மாற்றியுள்ளது. பலரும் அவருடன் புகைப்படங்கள் எடுத்துச் செல்கின்றனர். அவருக்கும் காதலிக்க வேண்டும், திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை இருந்தாலும் உடல்நலனே கவனிப்பதே முக்கியம் என்று கூறுகிறார் அப்துல் சமீது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.