பல நூறு வால்மீன்கள் ஒவ்வொரு ஆண்டும் சூரியனுக்கு அருகே வருகிறது. ஆனால் அவற்றில் சில வால்மீன்கள் தான் பூமிக்கு அருகில் வந்து செல்கிறது. அதில் பச்சை வால்மீன் எனப்படும் C/2022 E3 (ZTF) மிகவும் அரிய வகை வால்மீன் ஆகும். தற்போது இந்த பச்சை வால்மீன் பூமிக்கு அருகில் சுமார் 50,000 ஆண்டுகள் கழித்து மீண்டும் நெருங்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர். இதனைப் பூமியில் இருந்து வெறும் கண்களால் பார்க்கக்கூடிய அளவிற்குப் பிரகாசமாகக் காட்சியளிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த அரிதான பச்சை வால்மீன் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் மற்றும் எப்படிப் பார்ப்பது? வால்மீன்கள் என்றால் என்ன? அவற்றினால் கிடைத்த நன்மைகள்? புராணங்களில் உள்ள வால்மீன் கதைகள் என்ன? என்று முழு விவரங்களை ’பக்கத்தில் வருகிறது பச்சை வால்மீன் !
கண்டு ரசிப்போம் வாருங்கள்’ என்ற தலைப்பில் விஞ்ஞான் பிரசார், அறிவியல் பலகையில் விஞ்ஞானி த.வி வெங்கடேஸ்வரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பா.ஸ்ரீகுமார் எழுதியுள்ளனர். இந்த கட்டுரை பள்ளி மாணவர்களுக்கு வால்மீன் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள உதவும்.
எப்படி பார்க்கலாம்?
குறிப்பாக வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி மாலை மயங்கியதும் வடக்கு அடிவானில் இந்த வால்மீன் பிரகாசமாகத் தென்படும் என விஞ்ஞானிகள் கணிப்பு செய்துள்ளனர். எனினும் ஜனவரி மாத இறுதி நாட்கள் முதல் பிப்ரவரி பத்தாம் நாள் வரை காண இயலும். வடக்கு அடிவானுக்கு அருகில் துருவ விண்மீன் அருகே இந்த வால் மீன் தென்படும். எனவே துருவ விண்மீனை எளிதில் காணும் படியான இடத்தை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.
எங்கிருந்து பார்க்கலாம்?
தமிழ்நாட்டிலும், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் அதிகாலை 2 மணியிலிருந்து 5 மணிக்குள் வடகிழக்கு வான் பகுதியில் துருவ நட்சத்திரத்திற்கு அருகே இந்த வால் நட்சத்திரத்தைக் காண முடியும். தமிழ்நாட்டில் விஞ்ஞான் பிரச்சார்- அறிவியல் பலகை மற்றும் தமிழ்நாடு அஸ்ட்ரானமிக்கல் சயின்ஸ் சொசைட்டியுடன் இணைந்து பல்வேறு மாவட்டங்களில் தொலைநோக்கி மூலம் அதிகாலைப் பொழுதில் வால் நட்சத்திரங்களைக் காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வால்மீன் என்றால் என்ன ?
அழுக்கு தூசி தும்பு மற்றும் பனிக்கட்டி சேர்ந்த கலவை தான் வால்மீன். சுமார் பத்து கிலோமீட்டர் அளவு கொண்டது வால்மீன்கள் நீராலான பனி தவிர உலர் பனி எனப்படும் கார்பன் டை ஆக்சைடு மீத்தேன், அம்மோனியா, கார்பன் மோனாக்சைடு போன்ற எளிதில் ஆவியாகும் பொருள்களும் உறைந்து பனி வடிவில் வால்மீன்களில் இருக்கும்.
ஒரு கட்டிடம் கட்டி முடிந்த பின்னர், அந்த இடத்தில் உடைந்த செங்கல். திட்டுத் திட்டாகச் சிமென்ட், கான்கிரீட், காலி பெயின்ட் டப்பா எல்லாம் இரைந்துகிடப்பது போல, சுமார் 460 கோடி ஆண்டுகள் முன்னர் உருவான சூரிய குடும்பத்தில் சூரியன், கோள்கள், துணைக்கோள்கள் எல்லாம் உருவாகிய பின்னர். எஞ்சிய பொருட்களே வால்மீன்கள் எனக் கருதுகிறார்கள்.
வால்மீனுக்கு வால் வருவது எப்படி ?
குயுப்பர் மண்டலத்திலும் ஊர்ட் முகில் பகுதியிலும் வால்மீன் நிலை கொள்ளும்போது அதற்கு வால் ஏதும் இருக்காது . தற்செயலாக அவற்றின் நிலை தடுமாறி சூரியனை நோக்கி வலம் வரும்போது தான் வால் உருவாகும். சூரியனுக்கு அருகே வரும்போது அதன் வெப்பம் மற்றும் சூரியனிலிருந்து வெளிப்படும் அயனி காற்று முதலியவற்றால் தான் வால்கள் உருவாகின்றன.
சூரிய வெப்பத்தின் காரணமாக பல்வேறு வகை உறை பொருள்கள் உருகும் சூரிய கதிர்கள் தூசு முதலியவற்றை ஊதித்தள்ளும் . இதன் காரணமாக. இரண்டு விதமான வால்கள் வால்மீன்களில் உருவாகும் அயனி பொருள்கள் கொண்ட நீண்ட குறுகிய நீல நிற வால் ஒன்றும் , வாயு தூசு தும்பு மற்றும் போல விரிந்த சிறிய வால் ஒன்றும் தோன்றும்.
பச்சை வால்மீன் ஏன் பச்சை நிறத்தில் ஒளிர்கிறது ?
இந்த வால்மீனில் கார்பன் சிறப்பு வடிவில் உள்ளது . நிலக்கரியும், வைரமும் கார்பனின் வெவ்வேறு வடிவங்கள் என நாம் அறிவோம் . அதுபோல இரண்டு கார்பன் அணுக்கள் இணைந்த ஈரணு மூலக்கூறு வடிவில் கார்பன் உள்ளது . மேலும் இந்த வால்மீனில் சயனசன் மூலக்கூறுகளும் செறிவாக உள்ளன . இந்த மூலக்கூறுகள் சூரியனிலிருந்து வரும் ஏழு நிறங்களில் பச்சை நிறத்தைத் தவிர மற்ற எல்லா நிறங்களையும் உட்கவர்ந்து கொள்ளும் பச்சை நிறம் மட்டும் பிரதிபலிப்பதால் இந்த வால்மீன் பச்சை நிறத்தில் ஒளிர்கிறது.
வால்மீன்கள் எங்கிருந்து வருகிறது?
சூரிய மண்டலத்தில் இரண்டு பகுதிகள் வால்மீன்களின் வாழ்விடங்கள் நெப்டியூனுக்கு அப்பால் குயுப்பர் மண்டலமும் (Kuiper belt) மிகத் தொலைவில் சூரிய மண்டலத்தைப் புகைமூட்டம் போலச் சூழ்ந்துள்ள ஊர்ட் முகில் (Oort cloud) பகுதியிலும் வால்மீன்கள் திரண்டு உள்ளன எனக் கருதுகிறார்கள்.
நூறு ஆண்டுகளுக்கும் குறைவான ஊசல் பொழுது கொண்டுள்ள குறை ஊசல் வான்மீன்கள் பெரும்பாலும் சூரியனும் கோள்களும் உருவானபோது எஞ்சிய எச்சம். இவை குடயுப்பர் மண்டலத்தில் உள்ளன. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீண்டகால ஊசல் பொழுது கொண்ட வால்மீன்கள் பெரும்பாலும் சூரியன் உருவான வின்முகிலின் எச்சமாகவோ அல்லது சூரியக் குடும்பம் பால்வெளி மண்டலத்தின் மையத்தைச் சுற்றி வரும்போது விண்மீன்களுக்கு இடையே உள்ள விண்வெளியில் உள்ள பொருள்கள் கவரப்பட்டு உருவானதாக இருக்கும் பகுதியில் எனக் கருதுகிறார்கள். இவை ஊர்ட் முகில் உள்ளன. சுருக்கமாகக் கூறினால் வால்மீன்களை ஆராய்வதால் சூரியன் மற்றும் சூரிய மண்டலத்தின் பரிமாண வளர்ச்சியை அறிந்து கொள்ள இது உதவும்.
வால்மீன் தோன்றுவதால் ஆபத்தா ?
ஒருகாலத்தில் திடீர் என வானவெளியில் வால்மீன் தோன்றுவது அச்சத்தை விளைவித்தது. அதன் காரணமாக வால்மீன்களை ஒருகாலத்தில் "தூமகேது" என்று அழைத்தனர். தூமகேது வானில் தோன்றினால் பஞ்சம் . பசி, பட்டினி, அரசர்களின் இறப்பு போன்ற தீய நிகழ்வுகள் ஏற்படும் என்று கூறி வந்துள்ளனர். எனவே வால்நட்சத்திரத்தின் வரவு என்பது ஒரு கெட்ட சகுனமானவே கருதப்பட்டது. இது மிகவும் தவறானது. இப்படி வால் நட்சத்திரம் வருவதால் பூமியில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.
இன்று ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கி வழியே மாதத்துக்குச் சுமாராக ஐந்து அல்லது ஆறு வால்மீன்களை வானவியலாளர்கள் இனம் காண்கிறார்கள். எடுத்துக்காட்டாக 2019 இல் 66 வால்மீன்களும், 2020இல் 73 உம், 2021இல் 105 உம் 2022 இல் 76 புத்தம் புது வால்மீன்கள் இனம் காணப்பட்டது. இவையெல்லாம் இரவு வானில் வானக் காட்சியை ஏற்படுத்தாது, சில மட்டுமே பூமிக்கு அருகிலும் பிரகாசம் கொண்டும் அமையும். அவை மட்டுமே வெறும் கண்களுக்குத் தென்படும்.
காலந்தோறும் வால்மீன் ஆய்வு
பண்டைய காலம் தொட்டே ஆய்வு வழியில் வால்மீன்களைக் காணும் அறிவியல் போக்கும் இருந்தது. தொலைநோக்கி இல்லாத காலத்தில் வெறும் கண்களால் வால்மீன்களைக் கண்டு அதுகுறித்த குறிப்புக்களை எழுதி வைத்துள்ளனர் . எடுத்துக்காட்டாகப் புறநானூறு பாடலில் "மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்" எனும் வரி அந்தக் காலத்தில் வால்மீன்களை இனம் கண்டுள்ளனர் என நமக்குத் தெரிவிக்கிறது.
ஆயினும் கடந்த காலத்தில் தொலைநோக்கி பயனுக்கு வந்த பிறகு வால்மீன்களின் வால் எப்படி உருவாகிறது. ஒன்றல்ல மூன்று வால்கள் உண்டு என பற்பல தகவல்களை நாம் அறிந்து கொள்ள முடிந்தது . சமீபகாலங்களில் விண்கலங்கள் கொண்டு பற்பல வால்மீன்களை ஆய்வு செய்கிறார்கள் . 67P/சுரியுமோவ்- ஜெராசிமென்கோ, 19P/போரெல்லி, C/2006 P1 - மெக்நாட், 21P/ஜியாகோபினி- ஜீனர், 26P/கிரிக்-ஸ்க்ஜெல்லரப், 1P/ஹாலி, 103P/ஹார்ட்லி, 9P/டெம்பிள்-1. 81P/வைல்டு முதலிய வால்மீன்களை விண்கலம் கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். வால்மீன்களில் உள்ள பொருள்களின் செறிவு என்ன? இந்த வால்மீன்கள் எங்கே எப்படி எப்போது உருவாயின போன்ற சுவையான கேள்விகளுக்கு இந்த ஆய்வுகள்மூலம் விஞ்ஞானிகள் விடை தேடி வருகின்றனர்.
பூமிக்கு நீர் கொண்டு வந்ததா வால் மீன்கள்?
வால்மீன்கள் கண்களுக்கு விருந்து மட்டும் அல்ல . பூமிக்கு நீர் கொண்டு வந்து அளித்ததும் வால்மீன்கள் தான் எனக் கருதுகிறார்கள் . நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். பூமியின் நீர் எங்கிருந்து வந்தது ? யார் கொண்டு வந்தது? பூமி உருவான போது அதன் வெப்பம் மிகமிக கூடுதலாக இருந்தது. அந்த கட்டத்தில் பூமியில் இருந்த நீர் மூலக்கூறுகள் எல்லாம் மிகு வெப்பத்தின் காரணமாக ஆக்சிஜன் தனியாகவும் ஹைட்ரஜன் வேறாகவும் உடைந்து போயிருக்கும்.ஏற்கனவே உடைந்து போய்விட்டதால் பூமி குளிர்ந்த பிறகும் போதிய நீராவி எஞ்சி இருக்காது என்பதால் பூமியின் மீது கடல் ஏரி போன்ற நீர்நிலைகள் உருவாகியிருக்க முடியாது . அப்போது பூமியில் உள்ள நீர் எங்கிருந்து வந்தது?
புராணக்கதையின் படி பகீரதன் தவம் செய்து சிவபெருமானின் தலையில் உள்ள கங்கையை பூமிக்கு கொண்டு வந்தார் என்பது ஐதீகம் . கங்கை பூமிக்கு வந்தபிறகு தான் நீர் மிகுந்து கடல் எரி குளம் போன்ற நீர் நிலைகள் உருவாயிற்று எனக் கருதினர். ஆனால் பூமிக்கு நீரை கொண்டு வந்து அளித்தது வால்மீன்கள் தான். சுமார் சரிபாதி பனிக்கட்டி நிரம்பிய வால்மீன்கள் பூமியின் மீது மோதியபடி இருந்தன . இந்த வால்மீன்களில் இருந்த நீர் தான் சிறிது சிறிதாகச் சேர்ந்து பூமியில் கடல் எரி, குளம் போன்ற நீர்நிலைகள் உருவாயின.
வால்மீன்களை எப்படிப் பெயரிடுகிறார்கள் ?
வால்மீன்களின் பெயரில் நான்கு பகுதிகள் உண்டு. முதல் பகுதி P/ அல்லது C/ என்று இருக்கும். குறிப்பிட்ட கால அளவில் மீண்டும், மீண்டும் வந்து போகும் ஹாலி வால்மீன் போன்ற வால்மீன்களுக்கு P/ என்றும் நீண்டகால ஊசல் காலமும் சூரியனின் ஈர்ப்பு தளையிலிருந்து விடுபட்டு செல்லும் அளவுக்கு வேகமும் கொண்ட வால்மீன்களுக்கு ci என்றும் குறி செய்வார்கள் . பெயரின் இரண்டாவது பகுதி அந்த வால்மீன் இனம் காணப்பட்ட ஆண்டு . மூன்றாவது பகுதி எழுத்தும் எண்ணும் இணைந்தது . ஜனவரி 1 முதல் 15 வரை இனம் கண்டால் A எனவும் ஜனவரி 16 முதல் 31க்குள் இனம் காணப்பட்டால் அது B எனவும், பிப்ரவரி 1 முதல் 15 க்குள் என்றால் C எனவும் ஆங்கில எழுத்து அளிப்பார்கள். அந்த பதினைந்து நாட்களில் கண்டுபிடிக்கப்பட்ட வரிசையைப் பொருத்து எண் அளிக்கப்படும். நான்காவது பகுதியில் இனம் கண்ட நிறுவனம் அல்லது கண்டுபிடிப்பாளர் பெயர் அளிக்கப்படும்.
C/2022E3 (ZTF) என்பது Zwicky Transient Facility (ZTF) தொலைநோக்கி நிறுவனம் மூலம் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 முதல் 15 ஆம் தேதிக்குள் மூன்றாவதாகக் கண்டுபிடிக்கப்பட்ட வால்மீன் என்ற பொருள் கொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Science, Viral News