Jack Ma: சாதாரண ஆசிரியராகத் தொடங்கி நம்பர் 1 பணக்காரர் ஆன ஜாக் மா: சீன அரசுக்கும் இவருக்கும் என்ன பிரச்சனை?

அலிபாபா நிறுவனர் ஜேக் மா.

Alibaba Jack Ma | ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜாக் மா ஆங்கில ஆசிரியராகத் தன் வாழ்வைத் தொடங்கினார்.

 • Share this:
  சாதாரண ஆசிரியராக இருந்து இன்று அலிபாபா (Alibaba) என்ற ஆன்லைன் வர்த்தக ஜெயண்ட் ஆக உயர்ந்த சீன தொழிலதிபர் ஜாக் மா (Jack Ma) 2 மாதங்களுக்கும் மேலாக பொது நிகழ்ச்சிகளில் எதிலும் பங்கேற்காமல் எங்கு இருக்கிறார் என்ற நிலை ஏற்பட்டுள்ளது, அவர் மாயமாகி விட்டாரா? தலைமறைவா என்றெல்லாம் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

  சீன வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வட்டிக்கடைகளை விட, அடகுக் கடைகளை விட மோசமாக செயல்படுவதாக கடும் விமர்சனங்களை அவர் முன் வைத்தார். இதனால் அவருக்கும் அதிபர் ஷீ ஜின்பிங்குக்கும் இடையே பனிப்போர் உருவானது. கடந்த ஆண்டு நவம்பரில் ஜாக் மா-வின் ஆன்ட் நிறுவனம் முதற்கட்ட பங்கு வெளியீட்டின் மூலம் சுமார் ரூ.2.62 லட்சம் கோடி திரட்டத் திட்டமிட்டிருந்தது. ஆனால் பங்கு வெளியீட்டுக்கு இரு தினங்களுக்கு முன்னதாக ஜின்பிங் அரசு வெளியீட்டுக்கு தடை விதித்தது.

  இதனை அடுத்து அலிபாபா மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்களின் பங்கு விலைகள் சந்தையில் சரிந்தன. ஜாக் மாவின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு வீழ்ச்சி கண்டது. இதோடு விட்டு வைக்காமல் அலிபாபா விதிமீறலில் ஈடுபட்டதாக அபராதமும் விதித்தது சீன அரசு. இவரது குழுமம் நிதி முறைகேடுகள் செய்ததாக விசாரணையும் முடுக்கி விடப்பட்டது. இதனையடுத்து ஜாக் மா சீனாவை விட்டு வெளியேற தடையும் விதிக்கப்பட்டது.

  அதன் பிறகு 2 மாதங்களாக ஜாக் மா பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. அவர் அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்ட இளம் தொழில் முனைவோர்கள் ஊக்குவிப்பு நிகழ்ச்சியின் கடைசி அத்தியாயத்திலும் ஜாக் மா பங்கேற்கவில்லை. உலகம் உண்மையில் ஜாக் மா எங்கே? என்ற கேள்வியை எழுப்பி வருகிறது.

  ஜாக் மா உண்மையில் பேசியது என்னவெனில், “சீனர்கள் இப்படித்தான் கூற விரும்புவார்கள், அதாவது நீங்கள் சீன வங்கியிலிருந்து 1 லட்சம் யுவான்கள் வாங்கினால் வாங்குபவர்கள் கொஞ்சம் பயப்படுவார்கள், 10 லட்சம் யுவான்கள் வாங்கினால் நீங்களும் வங்கியுமே கொஞ்சம் பதற்றமடைவார்கள். ஆனால் நீங்கள் 1 பில்லியன் யுவான் கடன் வாங்கினால் நீங்கள் பயப்பட மாட்டீர்கள் வங்கிதான் பயப்படும்” என்று சீனாவின் நிலைமையை படம்பிடித்துக் காட்டிப் பேசினார்.

  இதனையடுத்து சீன அரசின் கெடுபிடிகளினால் அவரது நிறுவனத்தின் சந்தை மதிப்பு 17% வீழ்ச்சி கண்டது.

  அலிபாபா வர்த்தகங்களில் அலிபாபா டாட் காம் உலகம் முழுதும் உள்ளவர்களின் கொள்முதல் மையமாக உள்ளது, அலி எக்ஸ்பிரஸ் இணையதளம் உலகெங்கிலும் உள்ள சிறு வணிகர்கள் தங்கள் பொருட்களை விற்கும் மையமாக உள்ளது. இதுதவிர Etao.com என்ற ஷாப்பிங் தேடல் எந்திரம், அலியுன் கிளவுட் சேவைகள், டிங் டாக் உடனடி மெசெஞ்சர் சேவை, ஆன்ட் தொழில்நுட்பக் குழுமம், ஆன்ட் ஃபார்ச்சூன் சொத்து மேலாண்மை நிறுவனம் என்று கொடிக்கட்டிப் பறந்து வருகிறார்.

  ஜாக் மா குறித்த சுவாரஸ்யத் தகவல்கள்:

  1964 செப்.10ம் தேதி ஹாங்சுவில் ஜாக் மா பிறந்தார், சிறுவயதிலேயே ஆங்கிலப் புலமையை வளர்த்துக் கொண்டார்.

  ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜாக் மா ஆங்கில ஆசிரியராகத் தன் வாழ்வைத் தொடங்கினார்.

  1994ம் ஆண்டு இண்டர் நெட் வந்த காலத்தில் ஹாங்சு ஹய்பு என்ற மொழிமாற்ற ஏஜென்சியைத் தொடங்கினார்.

  1995-ல் சீனா எல்லோ பேஜ் இணையதளத்தைத் தொடங்கினார்.

  1999-ல் தன் அபார்மெண்டில் நண்பர்களுடன் பலருடன் அலிபாபா ஆன் லைன் வர்த்தகத்தைத் தொடங்கினார்.

  2003-ல் டாய்பாய், அலிபே ஆன்லைன் பணம் செலுத்தும் நிறுவனம் தொடக்கம்.

  2012-ல் அலிபாபா ஆன்லைன் வர்த்தக நிறுவனம் பெரிய ஜெயண்ட் நிறுவனமாக உருவாகி, அதன் வர்த்தகம் ரூ.11.29 லட்சம் கோடியாக அதிகரித்தது.

  2014-ல் அலிபாபா பங்குகளின் விலை நியூயார்க் பங்குச் சந்தையில் கொடிக்கட்டிப் பறக்க போர்ப்ஸ் உலகப்பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

  2015-ல் பிசினஸ் ஸ்கூல் தொடங்கினார்.

  2016-ல் ஆசியப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம், சொத்து மதிப்பு ரூ.2.40 லட்சம் கோடி.

  அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்கும் முன்பு ஜாக் மாவைச் சந்தித்தார். ஜாக் மாவைப் புகழ்ந்து பேசியுள்ளார் ட்ரம்ப்.

  கடந்த ஆண்டு கோங் ஷோ தாவோ எனும் குங்-பூ குறும்படத்தில் நடித்தார். தொடர்ந்து 30 ஆண்டுகளாக தாய்-சி எனும் சீன தற்காப்பு கலையை பயிற்சி செய்து வருகிறார்.

  இந்நிலையில் இவர் எங்கே, ஏன் பொதுவெளியில் தலைக்காட்டுவதில்லை என்ற கேள்வி உலகம் முழுதும் இன்று அலைகளை ஏற்படுத்தி வருகிறது.
  Published by:Muthukumar
  First published: