சூரியனுக்கு மிக அருகில் உள்ள பிராக்சிமா சென்டாரி என்ற நட்சத்திரக் கூட்டங்களில் இருந்து ஏலியன்களின் சமிக்ஞை கிடைத்திருப்பதாக, ஆய்வாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கின்றனர். அதே நேரத்தில், ஏலியன்களை தொடர்பு கொண்டால் மனித இனமே அழிந்து போகும் என்றும் சிலர் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
நான்கரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான பூமிதான் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த கிரகம். பூமியைத் தவிர்த்து, நமது சூரிய மண்டலத்தில் உள்ள வியாழன் உள்ளிட்ட அனைத்து கிரகங்களையும் சல்லடை போட்டு ஆராய்ந்துவிட்ட ஆய்வாளர்கள், வேறு ஜீவராசிகள் ஏதும் நமக்கு அருகில் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டனர்.
ஆனால், பரந்து விரிந்த பால்வெளியில் சூரியனைப் போன்ற பல்லாயிரம் கோடி நட்சத்திரங்களும், அதைச் சுற்றி லட்சக்கணக்கான கிரகங்களும் சுற்றி வருகின்றன. அவற்றில் மனிதனைப் போல ஜீவராசிகள் இல்லை என்று உறுதியாக கூற முடியவில்லை ஆய்வாளர்களால். மனித குலத்தின் அறிவும் தொழில்நுட்பமும் மொத்த பிரபஞ்சத்தையும் சலிக்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை என்பதுதான் காரணம்...
ஆனாலும், மனித இனத்தை விட மிகவும் அறிவுக்கூர்மையான, தொழில்நுட்பத்தில் வளர்ந்த ஜீவராசிகள் இருக்கின்றன என்பதை உறுதியாக கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். அதற்கு காரணம், மேற்கத்திய நாடுகளில் மக்கள் பார்த்ததாக கூறப்படும் பறக்கும் தட்டுகளும்... பயிர் வட்டங்களும்தான்.
அமெரிக்கா, கனடா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் பல நூறு முறை பறக்கும் தட்டுகளை பார்த்ததாக மக்கள் கூறி இருக்கின்றனர். அடையாளம் காண முடியாத இத்தகைய வடிவங்களுக்கு ஆய்வாளர்கள் சூட்டியிருக்கும் பெயர் Unidentified Flying Objects. பறக்கும்தட்டு எனும் போதே ஏலியன்கள் ஞாபகம் வந்துவிடும். அவர்கள் உண்மையில் இருக்கிறார்களா என தேடும் பகீரத முயற்சியில் உலக நாடுகள் பலவும் ஈடுபட்டு வருகின்றன.
Also Read : மது போதையில் திருமணம் செய்து கொண்ட 2 ஆண்கள் - அடுத்து தான் செம ட்வீஸ்ட்..!
இவை எல்லாவற்றையும் தாண்டி, அமெரிக்கா ஏலியன்களை வரவழைத்து ஏரியா 51 என்ற ராணுவ தளத்தில் ஆய்வு செய்ததாக வெளியான கட்டுக்கதைகளும் உண்டு. இதை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட பல ஹாலிவுட் திரைப்படங்கள் உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்துள்ளன.
பறக்கும் தட்டுகளைப் போலவே பயிர் வட்டங்களும் இன்னும் புரியாத புதிராக இருக்கின்றன ஆய்வாளர்களுக்கு. பயிர்களை சிதைக்காமல், நிலத்தில் இருந்து பார்க்கும்போது என்னவென்றே தெரியாமல் இருக்கும் பயிர் வட்டங்கள், வானத்தில் பறந்தால் மட்டுமே தெரியக்கூடிய வகையில் வரையப்பட்டிருக்கின்றன பல நூறு முறை.
கரையான் பாதிப்பு என சில ஆய்வாளர்கள் கூறினாலும், பயிர் வட்டங்கள் அனைத்தும் ஏலியன்கள் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காக வரையப்பட்டவை என்ற கருத்துதான் ஆணித் தரமாக உள்ளது. மற்றொரு புறம் அமெரிக்க புலனாய்வுத்துறை ஆவணங்கள் பலவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. தகவல் அறியும் உரிமையின் கீழ் பெண்டகன் வழங்கிய ஒரு ஆவணத்தில், ஏலியன் மூலம் பெண் ஒருவர் கர்ப்பமானதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், ஏலியன்களின் கடத்தல், பாலியல் அத்துமீறல்கள், டெலிபதி போன்ற விநோத நிகழ்வுகளும் அந்த ஆவணங்களில் இடம்பிடித்துள்ளன. மேலும், ஏலியன்களை சந்தித்ததாக கூறிய மனிதர்களுக்கு கதிர்வீச்சு பாதிப்பு, மூளை மற்றும் நரம்பு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகவும் பெண்டகன் ஆவணம் விவரித்துள்ளது.
இந்த நிலையில்தான், நமது சூரியனுக்கு மிக அருகில் உள்ள பிராக்சிமா சென்டாரி என்ற நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து ஏலியன்களின் சமிக்ஞை கிடைத்திருப்பதாக துள்ளிக் குதிக்கிறார்கள் ஆய்வாளர்கள். சூரியனில் இருந்து 4.2 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள இந்த பிராக்சிமா சென்டாரி நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து ரேடியோ சமிக்ஞை வந்துள்ளதாகக் கூறும் ஆய்வாளர்கள், அங்கு மனிதனைப் போன்ற உயிர் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் ஆணித் தரமாக கூறுகின்றனர்.
Also Read : நடுவானில் பாராசூட் கயிற்றில் நடந்து உலக சாதனை செய்த வினோத மனிதர் - திக் திக் நொடிகள்!
மனிதர்களால் அனுப்பப்பட்ட விண்கலங்களின் ஒலிதான் என்ற கருத்தை மற்றொரு தரப்பு முன்வைத்தாலும், ஏலியன்களின் சமிக்ஞைதான் என ஆதாரத்தோடு காரணங்களை அடுக்குகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்... அத்துடன் விண்வெளி விருந்தினர்களை வரவேற்கும் நேரம் வந்துவிட்டதாகவும் கூறி பூரிப்படைகின்றனர்.
இதனால், கதிகலங்கியுள்ள மற்றொரு தரப்பு, ஏலியன்களின் படையெடுப்பே மனித இனத்தின் அழிவுக்கு காரணமாக இருக்கும் என்ற புகழ்பெற்ற வானியல் அறிஞர் ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறிய கருத்தை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். ஏலியன்கள் இருப்பது உறுதி என 2010ஆம் ஆண்டிலேயே கூறிய ஸ்டீஃபன் ஹாக்கிங், அவை மனிதர்களுடன் நட்பு பாராட்ட வாய்ப்பில்லை என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்...
மேலும், கண்ணில் தென்பட்ட கிரகங்களை கைப்பற்றுவதும், அவற்றின் வளங்களை கொள்ளையடிப்பதுமே ஏலியன்களின் நோக்கமாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறியிருந்தார் ஸ்டீஃபன் ஹாக்கிங்.
எனவே, இனியும் பிராக்சிமா சென்டாரி நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து வரும் ரேடியோ சமிக்ஞைகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கக் கூடாது என்ற கருத்தை உயர்த்திப் பிடிக்கின்றனர் ஒரு தரப்பு ஆய்வாளர்கள். இருப்பினும் ஏலியன்கள் குறித்த ஆய்வுகள் தொடர்கின்றன. ஏலியன்கள் வருவார்களா? வந்தால் விருந்தினர்களாக வருவார்களா? அல்லது கொள்ளையர்களாக வருவார்களா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.