நடிகர் மம்மூட்டி, முரளி, அப்பாஸ் உள்ளிட்டோர் நடித்த, செண்டிமெண்ட் நிறைந்த திரைப்படமான ‘ஆனந்தம்’ படம் குறித்து நினைவிருக்கிறதா? பணி நிமித்தமாக டெல்லி சென்றுள்ள மகன் (அப்பாஸ்), எப்போது வீடு திரும்பி வருவார் என அவரது தாயார் ஏங்கித் தவிப்பார். தீபாவளி நாளும் அதுவுமாக, மகன் நினைப்பு கண் முன்னே வந்து செல்லும் நிலையில், திடீரென நிஜமாகவே மகனை தன் கண் முன்னே பார்க்கும் அந்த தாய், செய்வதறியாது திகைத்து, கண்ணீர் சிந்தி அழுது விடுவார்.
திரைப்படத்தில் நாம் பார்த்த காட்சி இன்று பலரது வாழ்விலும் அரங்கேறி வருகிறது. அளவில்லா அன்பு நிறைந்திருக்கும் வீடுகளில் இதெல்லாம் இயல்பாக நடக்கக் கூடிய ஒன்று தான் என்றாலும் கூட, தற்போதைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட் ஃபோன் மற்றும் இண்டர்நெட் உதவியுடன் அதுபோன்ற காட்சிகள் வைரல் ஆகி விடுகின்றன. அந்த வீடியோக்களை பார்க்கும் மக்கள், தாங்களும் குடும்பத்தினரை பிரிந்து இருப்பதை நினைத்து கண் கலங்கி விடுகின்றனர்.
அப்படியொரு நிகழ்வு தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வந்த மகன் ஒருவர், 3 ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்திருந்த நிலையில், ஊர் திரும்புவதை சர்பிரைசாக வைத்திருந்தார். அவர் ஊர் திரும்புகிறார் என்பது அவரது சகோதரிக்கு மட்டுமே தெரியும்.
இதைத் தொடர்ந்து, அந்தப் பெண் விமான நிலையம் சென்று தனது சகோதரரை ஆரத் தழுவி வரவேற்று வீட்டிற்கு அழைத்து வந்தார். அந்த சமயத்தில் சமயலறையில் நின்று கொண்டிருந்த அவர்களது தாயார், மகனை கண்டதும் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டார். ”கடவுளே’’ எனக் கூறியபடி மகனை கட்டியணைத்த அவர் சில நொடிகளுக்கு பிடியை விலக்கவே இல்லை.
also read : இட்லிக்கு வந்த சோதனைய நீங்களே பாருங்க.. வைரலாகும் வீடியோ
இதைத் தொடர்ந்து, வீட்டில் தந்தை இருக்கும் அறை அருகே மகன் நின்று கொண்டார். அப்போது, சற்றும் எதிர்பார்க்காமல் மகனை பார்த்த தந்தைக்கு, காண்பது நிஜமா, கனவா என்ற தடுமாற்றத்துடன் ஒருகணம் திகைத்து நின்று விட்டார். பின்னர், சுதாரித்துக் கொண்டு மகனை அரவணைத்துக் கொண்ட அவர், கண்ணீர் விட்டு அழுதே விட்டார். முன் பின் சொல்லாமல், திடீரென வந்து அதிர்ச்சி கொடுத்த மகனுக்கு தண்டனையாக, அவரை உச்சி முகர்ந்து அன்போடு முத்தமிட்டார் அந்த தந்தை.
வாழ்க்கையின் ஆனந்த காட்சிகளை தனது மொபைல் போனில் பதிவு செய்திருந்த சஞ்சரி ஹரியா என்ற பெண், அந்த வீடியோவை டிவிட்டரில் வெளியிட, அது வைரல் ஆகி விட்டது. சுமார் 3.5 லட்சம் பேர் இதுவரையிலும் வீடியோவை பார்த்துள்ளனர். பலர், வீடியோவை பார்த்து கண்ணீர் சிந்தியதாக கமெண்ட் செய்துள்ளனர். தந்தை மீது மகன் கொண்டுள்ள பாசம் அளவில்லாதது என்றும், அவரது அரவணைப்பு என்பது மாபெரும் பரிசு என்றும் நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.