உசைன் போல்டிற்கே சவால் விடும் மின்னல் இளைஞர்! எருமை பந்தயத்தில் ஓடி சாதனை

உசைன் போல்டிற்கே சவால் விடும் மின்னல் இளைஞர்! எருமை பந்தயத்தில் ஓடி சாதனை
  • News18
  • Last Updated: February 15, 2020, 1:51 PM IST
  • Share this:
ஜல்லிக்கட்டைப் போல கர்நாடகாவில் பிரபலமான கம்ப்ளா பந்தயத்தில் உசைன் போல்ட்டை விட வேகமாக ஓடி ஆச்சர்யப்பட வைத்துள்ளார் மின்னல் மனிதர் ஒருவர்.

உலகின் அதிகவேக மின்னல் மனிதன் என்றால் நம் நினைவுக்கு வருபவர் ஜமைக்காவின் தடகள வீரர் உசைன் போல்ட். 100 மீட்டர் தூரத்தை 9.58 விநாடிகளில் அசுர வேகத்தில் கடந்த தங்கவேட்டை நாயகன் அவர். அந்த உசைன் போல்ட்டின் சாதனையையே முறியடிக்கும் அளவிற்கு ஓடியுள்ளார் கர்நாடகாவின் சீனிவாச கவுடா.

நம் ஊர் ஜல்லிக்கட்டைப் போல கர்நாடகாவின் தென்மேற்கு கடற்கரையோர மாவட்டங்களில் இந்த கம்ப்ளா பந்தயம் பிரபலமானது. ஒரு ஜோடி எருமை மாடுகளை விரட்டிக்கொண்டு வயலைப்போன்று தண்ணீர் நிரப்பிய மைதானத்தில் அதிவேகமாக ஓடுவதே போட்டி. மங்களூரு அருகே அய்கலாவில் நடந்த கம்ப்ளா பந்தயத்தில் 142.50 மீட்டர் துரத்தை வெறும் 13. 62 விநாடிகளில் கடந்து அதிசயிக்க வைத்துள்ளார் சீனிவாச கவுடா.


இந்த ஓட்டத்தை 100 மீட்டருக்கானதாகக் கணக்கிட்டு பார்த்தால், அதனை 9. 55 விநாடிகளில் அவர் ஓடியிருக்கிறார். இது உசைன் போல்ட்டின் உலக சாதனையை விட 0.03 விநாடிகள் குறைவான நேரம் என்பதே சீனிவாச கவுடாவை பலரும் ஆச்சர்யமாகப் பார்க்கக் காரணம். உசைன் போல்ட் நன்றாக உள்ள தரையில் ஓடினார் என்றால் சீனிவாச கவுடாவோ ஓடுவதற்கு சிரமமான தண்ணீர் நிரப்பப்பட்ட மைதானத்தில் இப்படி மின்னல் வேகத்தில் பறந்திருக்கிறார். கட்டுமானப் பணியாளராக இருக்கும் 28 வயதான சீனிவாச கவுடா கடந்த 5 ஆண்டுகளாக கம்ப்ளா பந்தயத்தில் மாடுகளை விரட்டிக் கொண்டு ஓடி பல பரிசுகளைப் பெற்றுள்ளார். ஆனாலும், இந்த ஆண்டு 4 விதமான கம்ப்ளா பந்தயத்திலும் பரிசுகளை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள சீனிவாச கவுடா, ”உசைன் போல்ட் அளவிற்கு நான் வேகமாக ஓடியது மகிழ்ச்சியளிக்கிறது. அவர் மைதானத்தில் ஓடுகிறார். நான் சேறும் சகதியுமான பாதையில் எருமை மாடுகளுடன் ஓடுகிறேன். நானும் மைதானத்தில் ஓடினால், அவரை விட வேகமாக ஓடுவேன்” என்கிறார்.

இந்தப் பெருமை எல்லாம் தன்னோடு சீறிப்பாய்ந்து ஓடிய எருமை மாடுகளையே சாரும் என அடக்கமாகக் கூறும் அவருக்கு முறையான பயிற்சி அளித்தால் ஓலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் இந்தியா தங்கம் தட்டலாம் என பலரும் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.Also see:
First published: February 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading