பாகிஸ்தான் கொடியுடன் போஸ் கொடுக்கும் பாப் பாடகி ரிஹானா புகைப்படம்... உண்மை நிலை என்ன?

ரிஹானா

அமெரிக்க பாப் பாடகி ரிஹானா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவரா என பலர் கூகுளில் தேடி உள்ளனர்.

 • Share this:
  பாகிஸ்தான் கொடியுடன் போஸ் கொடுக்கும் அமெரிக்க பாப் பாடகி ரிஹானாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு பாஜக-வினர் கடுமையாக சாடி வருகின்றனர். ஆனால் ரிஹானா பாகிஸ்தான் கொடியை ஏந்தி நிற்கவில்லை, அது மாஃபிங் செய்யப்பட்ட புகைப்படம் என்பது தான் உண்மை.

  வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டுமென்று தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 70 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் விவசாயிகள் போராட்டம் வலுப்பெற்று வருவதால் மத்திய அரசுக்கு இந்த விவகாரம் பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இதனிடையே அமெரிக்க பாப் பாடகி ரிஹானா விவசாயிகளுக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டார்.

  ரிஹானாவின் ட்விட்டர் பதிவை தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் சர்வதேச அளவில் பேசு பொருளளாக மாறியது. இந்திய பிரபலங்கள் பலர் இது எங்கள் நாட்டு விவகாரம் இதில் நீங்கள் தலையிட வேண்டாமென்று எதிர்கருத்து தெரிவித்திருந்தனர்.

  இதனிடையே ரிஹானா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவரா என பலர் கூகுளில் தேடி உள்ளனர். மேலும் ரிஹானா பாகிஸ்தான் கொடியை ஏந்தியவாறு போஸ் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. உத்தரப்பிரதேச பா.ஜ.க-வின் மாநில இளைஞர் அணித் தலைவர் அபிஷேக் மிஷ்ரா இந்தப் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இவரைத் தொடர்ந்த பா.ஜ.க ஆதரவாளர்கள் பலரும் இந்தப் புகைப்படத்தை ஷேர் செய்யத் தொடங்கினர்.ஆனால் ரிஹானா அதுப்போன்று போஸ் கொடுக்கவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.  2019 உலகக் கோப்பை தொடரின் போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆதரவாக அந்நாட்டு கொடியை ஏந்தியவாறு போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். மேற்கிந்திய தீவுகள் - இலங்கை போட்டியின் போது மைதானத்திற்கு சென்ற ரிஹானா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆதரவாக இருந்தார். ஆனால் அந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியை சந்தித்தது. அந்த போட்டியின் போது ரிஹானா கொடுத்த போஸை மாஃபிங் செய்து பாகிஸ்தான் கொடியுடன் இணைத்து சில விஷமிகள் பகிர்ந்து வருகின்றனர்.
  Published by:Vijay R
  First published: