நொறுக்குத்தீனி பிரியர்கள் அனைவரும் சிப்ஸ் என்றால் கொள்ளை இஷ்டம். கடைகளில் வழக்கமாக நாம் வாங்கும் சிப்ஸ் பாக்கெட்டுகளில் அளவுக்கு அதிகமாக காற்றும், கொஞ்சமாக சிப்ஸும் இருக்கும். அதை ஓபன் செய்து சாப்பிட பார்த்தால் கொடுத்த 10 ரூபாய் காசும் வீணா போச்சே என்ற பீலிங் நமக்குள் பல சமயங்களில் எழும்.
இந்நிலையில் ஆன்லைன் விற்பனை தளமான eBayல் ஒரே ஒரு ஒற்றை சிப்ஸை இந்திய மதிப்பிற்கு 1.63 லட்சம் ரூபாய்-க்கு ஒரு நபர் விற்பனை செய்துள்ளார். இந்த சிப்ஸ் இவ்வளவு விலைக்கு செல்ல காரணம் அதன் அரிதான வடிவம் என கூறப்படுகிறது. வழக்கமாக சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் பல கட்ட பரிசோதனைக்குப் பிறகே பாக்கெட்டுகளில் அவற்றை நிறைத்து விற்பனை செய்கின்றன. அந்த தரக்கட்டுப்பாடுகளில் சிப்ஸின் அளவு மிகவும் முக்கியமானது, அனைத்தும் ஒரே மாதியாக இருக்க வேண்டும். அதனால் தான் நாம் சிப்ஸ் பாக்கெட்டில் வித்தியாசமான உருவம் கொண்ட சிப்ஸ்கள் கிடைப்பது கிடையாது.
அப்படித்தப்பித் தவறி வித்தியாசமான வடிவத்தில் ஏதாவது சிப்ஸ் கிடைத்துவிட்டால் அதனை ஆன்லைன் தளத்தில் ஏலம் விடுவதையும், விற்பனை செய்வதையும் வெளிநாட்டினர் வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படித்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நபரும் தனது பிரிங்கிள்ஸ் சிப்ஸ் கேனை ஓபன் செய்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, வித்தியாசமான வடித்திலான சிப்ஸ் ஒன்று கிடைத்துள்ளது. புளிப்பு கிரீம் மற்றும் வெங்காய சுவை கொண்ட அந்த பிரிங்கிள் சிப்ஸை பார்த்த நபர், உடனே அதனை ‘மிகவும் அரிதானது’ என்ற கேப்ஷன் உடன் eBay ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கு காட்சிப்படுத்தியுள்ளார்.
Read More : காதலியை இருட்டில் சந்திக்க இளைஞர் செய்த செயலால் ஒட்டுமொத்த கிராமமே அதிர்ச்சி
விளம்பரத்தில் இருந்த மின்னஞ்சல் முகவரியின் படி, சம்பந்தப்பட்ட நபர் பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள ஹை வைகோம்ப் பகுதியில் வசித்து வருபவர் என்பது மட்டும் கண்டறியப்பட்டுள்ளது. சில நூறு ரூபாய்கள் கொடுத்து வாங்கப்பட்ட பிரிங்கிள் கேனில் இருந்த அந்த ஒற்றை சிப்ஸ் அவரை ஒரே நாளில் லட்சாதிபதியாக்கியுள்ளது. அவர் வித்தியாசமான வடிவம் கொண்ட ஒற்றை சிப்ஸுக்கு ரூ.1.63 லட்சம் கேட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி இந்த மிகப்பெரிய தொகையை முழுவதுமாக ஒரே முறையில் கொடுக்க முடியாது என்பதால் தவணை முறையில் செலுத்தும் ஆப்ஷனையும் கொடுத்துள்ளார். அதன்படி, இந்த சிப்ஸை வாங்குபவர் முழுத் தொகையையும் இரண்டு ஆண்டுகளில் தவணைகளாக செலுத்தலாம், அப்படியானால், சிப்ஸின் மொத்தத் தொகை ரூ.2.15 லட்சமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புளிப்பு மற்றும் வெங்காய சுவை அடங்கிய இந்த சிப்ஸ் பார்ப்பதற்கு ஒரு பக்கத்தில் மடிக்கப்பட்டு மறுபுறத்தைத் தொடுவது போல இருப்பதே காரணம் என தெரிவித்துள்ளார்.
இ-பே தளத்தில் இதுபோன்ற வித்தியாசமான பொருட்களை விற்பனைக்காக விளம்பரப்படுத்துவது இது முதல் முறையல்ல. இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நபர் ரெடிட் தளத்தில், இதேபோல் மடிந்த இரண்டு பிரிங்கிள் உருளைக்கிழக்கு சிப்ஸை வெறும் 50 பவுண்டுக்கு, அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.4,700க்கு விற்பனை செய்துள்ளார். மான்செஸ்டரைச் சேர்ந்த மற்றொரு நபர், இதேபோல் விநோத வடிவம் கொண்ட சிப்ஸை 15 பவுண்ட்கள் அதாவது டெலிவரி கட்டணத்துடன் 1,400 ரூபாய்க்கு விற்பனை செய்ய முன்வந்துள்ளார். சமீபத்தில் இ-பே தளத்தில்ஒரு மெக்டனால்ட்ஸ் சிக்கன் ரூ.73 லட்சத்துக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.