பொதுவாக யாராவது ஆபத்தில் இருந்தால், அவரை காப்பாற்றுவதற்காக நம்மால் முடிந்த முயற்சிகளை செய்வோம். நமக்கு நன்றாக தெரிந்த மனிதர்களாக இருந்தாலும் சரி, முகம் தெரியாத மனிதர்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு நாம் உடனடியாக உதவி செய்வதற்கு முன் வருவோம். இதேபோன்று தான் இந்த உலகில் வாழ கூடிய மற்ற உயிர்களையும் நாம் கருத வேண்டும். இதை உணர்த்தும் வகையில் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் நெகிழ்ச்சிகரமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ஆபத்தில் இருந்த மான் மீட்கப்பட்ட சிறிய வீடியோ ஒன்றையும், இரண்டு புகைப்படங்களையும் இணைத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். சுப்ரியா சாஹு என்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் விலங்குகள் மீட்புக் கதைகளை அடிக்கடி பகிர்ந்து வருவார். இது பலரின் கவனத்தை ஈர்க்க கூடிய பதிவுகளாகவும் மாறி விடும். அந்த வகையில், தமிழகத்தின் திருவள்ளூரில் நடந்த நிகழ்வு ஒன்றை குறிப்பிட்டு சமீபத்தில் அவர் ட்வீட் செய்திருந்தார்.
இதில், காட்டுப் பகுதியில் மான் விடுவிக்கப்படும் வீடியோ கிளிப்பைப் “தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களின் உதவியுடன் வனத் துறையால் திறந்த கிணற்றில் விழுந்த புள்ளி மானைப் பாதுகாப்பாக மீட்டு எடுத்தனர். இந்த சிறப்பு பணியை செய்த திருவள்ளூர் மாவட்ட DFO மற்றும் அவரின் குழுவுக்கு பாராட்டுக்கள். ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது” என்பதை குறிப்பிட்டு சாஹு பதிவிட்டு இருந்தார்.
இவற்றுடன் மான் கிணற்றில் இருந்து மீட்டெடுத்த போது எடுக்கப்பட்ட இரண்டு படங்களையும் பகிர்ந்துள்ளார். அவற்றில் ஒன்று மான் திறந்த கிணற்றில் சிக்கியிருப்பதைக் காட்டுகிறது. மற்றொன்று, ஆபத்தில் இருந்த மானை காப்பாற்ற ஒரு மீட்புப் பணியாளர் கிணற்றில் இறங்கிய போது எடுக்கப்பட்ட படமாகும். ஐ.ஏ.எஸ் அதிகாரியான சாஹு அவர்கள் பதிவிட்ட இந்த ட்வீட்டானது சில மணி நேரங்களிலேயே ட்விட்டரில் 300-க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றது.
Also Read : கொஞ்சம் தள்ளிப்படுங்க அண்ணே, நானும் தூங்கணும் - பாகனுடன் விளையாடி மகிழும் குட்டி யானை
கிணற்றில் தவறி விழுந்த மானை காப்பாற்றிய வனத்துறையினருக்கு நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சாஹூவின் ட்வீட்டர் பதிவில் கருத்து தெரிவித்த ட்விட்டர் யூசர் ஒருவர், “இந்த உலகில் இன்னும் மனிதாபிமானம் உள்ளது. மிகவும் மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டு ரீ-ட்வீட் செத்துள்ளார். அதே போன்று, மற்றொரு நபர், "கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக" என்று கூறியுள்ளார்.
இதே போன்ற ஒரு நிகழ்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. அதன்படி, ஆபத்தில் இருந்த யானையை மீட்கும் வீடியோ ஒன்றை சாஹு அவர்கள் பகிர்ந்திருந்தார். இது தமிழ்நாட்டின் கூடலூர் நகராட்சியில் எடுக்கப்பட்ட வீடியோவாகும். வனத்துறை அதிகாரிகள் ஒரு யானையை சதுப்பு நிலத்தில் இருந்து கயிற்றின் உதவியுடன் வெற்றிகரமாக மீட்டெடுத்தனர். மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோவையும் இவர் இதற்கு முன்னர் பகிர்ந்துள்ளார். ஒட்டுண்ணி தொற்று காரணமாக போராடிக் கொண்டிருந்த யானைக்கு தமிழக வனத்துறை அதிகாரிகள் சிகிச்சை அளிக்கும் வீடியோ தான் அது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.