டிகிரி தேவையில்லை.. 10,000 பேருக்கு வேலை - எலான் மஸ்க் அதிரடி!

எலான் மஸ்க்

போக்க சிக்கா (Boca Chica) நகரை ஸ்டார்பேஸ்ஸாக மாற்றிய அவர், தற்போது ஆஸ்டின் நகரில் புதிய கார் உற்பத்தி தொழிற்சாலையை பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
2022-ம் ஆண்டுக்குள் 10,000 பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள எலான் மஸ்க், தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற டிகிரி தேவையில்லை என அறிவித்துள்ளார்.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டிவிட்டரில் பதிவிட்ட ஒரு டிவிட் ஒன்று ஹாட் டாப்பிக்காக உள்ளது. போக்க சிக்கா (Boca Chica) நகரை ஸ்டார்பேஸ்ஸாக மாற்றிய அவர், தற்போது ஆஸ்டின் நகரில் புதிய கார் உற்பத்தி தொழிற்சாலையை பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளார். அந்த தொழிற்சாலையில் பணியாற்ற 2022 ஆம் ஆண்டுக்குள் 10 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். முக்கியமான அறிவிப்பு என்னவென்றால், அந்த தொழிற்சாலையில் பணியாற்றுவதற்கு டிகிரி தேவையில்லை என்றும், பள்ளிக்கல்வியில் உயர்கல்வியை நிறைவு செய்திருந்தால் போதும் என அறிவித்துள்ளார்.

பள்ளிப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் கூட எலான் மஸ்கின் ஆஸ்டின் தொழிற்சாலையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசைன், கட்டுமானம், உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு ஆட்தேர்வு நடைபெற உள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில் 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் டெஸ்லா நிறுவனத்தில் ஜிகா உற்பத்தி தொழிற்சாலை (Gigafactory ) அமைக்கப்பட உள்ளது. மிகப்பெரிய கார் உற்பத்தி தொழிற்சாலையாக உருவாக்கப்படும் அதில் சைபர் டிரக், செமி டிரக், மாடல் 3 செடான், மாடல் ஒய் எஸ்.யூ.வி உள்ளிட்ட கார்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.

கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட மஸ்க் ஆஸ்டின் நகரத்தில் மிக வேகமாக புதிய தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தார். டெஸ்லா நிறுவனத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரம் புதிய நபர்களுக்கு வேலை தரப்படும் என உறுதியளித்திருந்த நிலையில், இந்த தொழிற்சாலை பணிகள் நிறைவடைந்து, 10 ஆயிரம் பேர் பணிக்கு அமர்த்தப்பட்டால், டெஸ்லாவின் வாக்குறுதியை விட 5 ஆயிரம் பேர் கூடுதலாக பணியமர்தப்பட்டுள்ளார்கள் என்ற பெருமையை அந்த நிறுவனம் பெறும்.

Also read... 72 ஆண்டுகால திருமண வாழ்க்கை... 100 வயது தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

ஜிகா தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் 5 நிமிடத்தில் ஏர்போர்ட்டை அடைய முடியும் என்றும், 15 நிமிடத்தில் கொலராடோ ஆற்றுக்கு செல்ல முடியும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஊழியர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துதரப்படும் என டெஸ்லா நிறுவனம் கூறியுள்ளது. ஆஸ்டின் நகரம் ஏற்கனவே வளர்ந்த பகுதியாக, தொழிற்சாலை நிரம்பிய பகுதியாக உள்ளது. ஆனால், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அமைந்துள்ள போகா சிக்கா பகுதியானது நகர்புற வாசம் என்பது துளியும் இல்லாத கிராமமாக இருந்தது.

அந்த இடத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை அமைக்க பூலோக ரீதியாக சரியான இடம் அல்ல பல்வேறு தரப்பினர் கூறிவந்தனர். இருப்பினும் அந்த இடத்தில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை அமைத்த எலான் மஸ்க், கிராமத்தின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பை முழுவதுமாக மாற்றி அமைத்துவிட்டார். அங்கு வசிப்பவர்கள் தங்களின் வாழ்க்கை நிலை குறித்து பேசும்போது, மஸ்கின் வருகைக்கு முன்னர் கிராமம் மிகவும் அமைதியாக இருந்ததாகவும், தற்போது முன்னணி நகரங்களை விட இந்தப் பகுதி சத்தங்களும், பரபரப்பும் நிறைந்த பகுதியாக மாறிவிட்டது எனவும் வேதனை தெரிவிக்கின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: