'நினைத்ததை முடிப்பவன்' திரைப்படத்தில், நம்ம தலைவர் எம்ஜிஆர் பாடிய சில பாடல் வரிகளை இங்கே நினைவூட்ட விரும்புகிறோம். "கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது" என்கிற பாடலே அது. இந்த தலைப்பிற்கும், இந்த பாடல் வரிகளுக்கும் என்ன தொடர்பு என்பதை கட்டுரையின் முடிவில் அல்ல, ஆரம்பத்திலேயே புரிந்து கொள்வீர்கள்.
அதற்கு நீங்கள் எலான் மஸ்க்கின் இந்த ஆப்டிகல் இல்லுஷன் புகைப்படத்தை நன்றாக பார்க்க வேண்டும். இந்த புகைப்படம் உங்கள் கண்களை மிகவும் எளிதாக ஏமாற்றுகிறது என்று கூறினால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும்.
44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு எங்கு திரும்பினாலும், எதை பார்த்தாலும் எலான் மஸ்க் தான் தெரிகிறார். ஆகையால் ஒரு ஆப்டிகல் இல்லுஷன் புகைப்படத்தில் நாம் எலான் மஸ்க்கை காணுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் உண்மை என்னவென்றால், இந்த ஒளியியல் மாயையின் கீழ் எலான் மஸ்க் மட்டுமல்ல, எவர் தலைகீழாக தோன்றினாலும் அது நம் கண்களை எளிதாக ஏமாற்றும்.
தி சன் உருவாக்கி உள்ள இந்த ஆப்டிகல் இல்லுஷன் ஆனது, தலைகீழாக புரட்டப்பட்டதாகத் தோன்றும் உலகின் மிகப் பெரிய பணக்காரரின் படத்தை கொண்டுள்ளது. ஆரம்பத்தில் - மற்றும் மேலோட்டமாக பார்த்தால் - இந்த புகைப்படத்தில் எந்த தவறும் இருக்காது. ஆனால் நீங்கள் கொஞ்சம் நெருக்கமாக பார்த்தால், எலான் மஸ்க்கின் முக அம்சங்கள் சரியாக இல்லை என்பதை உணரலாம். குறிப்பிட்ட புகைப்படத்த திருப்பினால், அதாவது தலைகீழாக பார்த்தால், எலான் மஸ்க்கின் திகிலூட்டும் முகத்தை நீங்கள் காண்பீர்கள்.
இது எப்படி வேலை செய்கிறது?
இந்த புகைப்படத்தில், மிகவும் பிரபலமான, தாட்சர் விளைவு (Thatcher effect) பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது தலைகீழாக காட்சிப்படுத்தப்படும் ஒரு முகத்தை உங்களிடம் காட்டும் போது அதன் உள்ளமைவு பற்றிய தகவலை உங்களால் எளிதில் செயலாக்கம் செய்ய முடியாது, எனவே நீங்கள் தனிப்பட்ட அம்சங்களைப் பற்றிய தகவலை மட்டுமே பெறுவீர்கள். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு புகைப்படம் சரியான கோணத்தில் இருக்கும் வரை நாம் அதில் தவறாக எதையும் பார்க்க மாட்டோம்.
1980 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் உளவியல் பேராசிரியர் ஆன பீட்டர் தாம்சன் (Peter Thompson) உருவாக்கிய 'பர்ஸ்ட் இட்டரேஷன்' (First iteration) என்கிற ஒளியியல் மாயையே - தாட்சர் விளைவு எனப்படுகிறது. இந்த ஒளியியல் மாயை முதன் முதலாக காட்சிப்படுத்த முனைந்த தாம்சன், அதற்காக முன்னாள் இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சரின் (Margaret Thatcher) ஒரு டாக்டர் பட்டமளிப்பு விழா புகைப்படத்தை பயன்படுத்தினார் .
Read More : மாயமில்லை மந்திரமில்லை...உங்க கண்ணுக்கும் 3டி கியூப் தெரிகிறதா?
அந்த புகைப்படத்தில் மார்கரெட் தாட்சரின் கண்களும் வாயும் தலைகீழாக இருந்த நிலையில் அவரின் முகம் மட்டும் 180 டிகிரி கோணத்திற்கு புரட்டப்பட்டது. பெரும்பாலான பார்வையாளர்கள் குறிப்பிட்ட புகைப்படத்தை சரியான கோணத்தில் திருப்பும் வரை அதை கவனிக்கத் தவறிவிட்டனர். அதாவது எலான் மஸ்க்கின் புகைப்படத்தில் உங்கள் கண்கள் ஏமாற்றப்பட்டதை போலேவ!
இந்த ஆப்டிகல் இல்லுஷன் நிரூபிக்கப்பட மார்கரெட் தாட்சரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்ட காரணத்தினால் இது 'தாட்சர் விளைவு' என்று அறியப்படுகிறது. ஆக இந்த தாட்சர் விளைவு மட்டுமல்ல 1975-லேயே கவிஞர் மருதகாசி எழுதிய "கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்.. நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது.. அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்" என்கிற வரிகளும் நூற்றுக்கு நூறு உண்மையாகிறது!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.