ஃபேஸ்புக்கை போலவே மிகவும் பிரபலமான ஒரு சமூக ஊடகமாக வலம் வரும் டிவிட்டரை உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் தற்போது வாங்கி உள்ளார்.
உலகில் பல லட்சம் பேர் டிவிட்டரில் அக்கவுண்ட் வைத்துள்ளனர். பலர் தினமும் டிவிட்டரில் தான் வாழ்ந்து வருகின்றனர் என்றே சொல்லலாம். இப்பேற்பட்ட ட்விட்டரை எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான நிறுவனம் ஒரு பங்குக்கு $54.20 டாலர் வைத்து வாங்கியதாக பகிர்ந்துள்ளது. டிவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்கிய தகவலை டிவிட்டரில் அவர் பகிர்ந்துள்ளார். இந்த செய்தி தான் தற்போது ட்ரெண்டிங்காகி வருகிறது.
ட்விட்டர் வாரியம் எலான் மஸ்க்கின் இந்த முன்மொழிவை மதிப்பிடுவதற்கு ஒரு சிந்தனைமிக்க மற்றும் விரிவான செயல்முறையை இதற்கு முன்னர் நடத்தியது. ட்விட்டரின் பங்குதாரர்களுக்கு இது சிறந்த வழியாக இருந்ததால் எலானின் முன்மொழிவை ஏற்று கொண்டனர் என்று ட்விட்டரின் சுதந்திர வாரியத் தலைவர் பிரட் டெய்லர் கூறினார். ஒரு பங்கின் விலையைப் பொறுத்து, பங்குதாரர்கள் ஒவ்வொரு பங்கிற்கும் $54.20 ரொக்கமாகப் பெறுவார்கள். ஏப்ரல் 1, 2022 அன்று ட்விட்டரின் இறுதிப் பங்கு விலையில் 38% பிரீமியமாக இது இருந்தது.
எலான் மஸ்க்கிற்கு டிவிட்டரில் அதிக அளவில் ஃபாலோவர்ஸ் உள்ளனர். அவரின் ஒரு ட்வீட்டுக்கே பலர் அவரின் புராடக்ட்களை வாங்கி குவித்து விடுவார்கள். அந்த அளவிற்கு அவருக்கான மதிப்பு மற்ற தளத்தை காட்டிலும் டிவிட்டரில் அதிகம் உள்ளது. மேலும் ட்விட்டர் தளமானது உலகம் முழுவதிலும் ஒரு நோக்கத்தையும் குறிக்கோளையும் கொண்டு செயல்பட்டு வந்தது. ஆனால் இதில் வெளிப்படை தன்மை இல்லை என்று எலான் மஸ்க் முன்னர் கூறி இருந்தார். எனவே இந்த தளத்தை ஓபன் சோர்ஸாக விட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தனர். இது போன்ற சில முரண்பாடுகளை சுட்டி காட்டி இருந்தார். அதன் பிறகு தற்போது ட்விட்டரை தன் வசம் ஆக்கியுள்ளார்.
Read More : டோல்கேட் ஊழியரை லாரி பம்பரில் 10 கி.மீ வரை தொங்க விட்ட டிரைவர் - அதிர்ச்சி வீடியோ
சுதந்திரமான பேச்சு என்பது செயல்படும் ஜனநாயகத்தின் அடித்தளம், மேலும் ட்விட்டர் என்பது முக்கிய டிஜிட்டல் தளமாகும். மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு முக்கியமான விஷயங்கள் இங்கு விவாதிக்கப்படுகின்றன என்று எலான் மஸ்க் கூறினார். இதன் அம்சங்கள், நம்பிக்கையை அதிகரிக்க, அனைத்து மனிதர்களையும் அங்கீகரிக்கும் விதமாக டிவிட்டரை ஓப்பன் சோர்ஸாக மாற்ற உள்ளதாகவும் எலான் கூறியுள்ளார். "ட்விட்டருக்கு மிகப்பெரிய ஆற்றல் உள்ளது. அந்த நிறுவனம் மற்றும் அதன் யூசர்களின் கமியூனிட்டி உடன் இணைந்து பணியாற்ற நான் விரும்புகிறேன்," என்று ட்விட்டர் சிஇஓ-வான பராக் அகர்வால் தெரிவித்தார்.
ட்விட்டரை வாங்குவதற்கு எலான் மஸ்க் $25.5 பில்லியன் டாலரை முழுமையாகக் கடனாகப் பெற்றுள்ளார். மேலும் தோராயமாக $21.0 பில்லியன் ஈக்விட்டி பங்கை இவர் வழங்குவதாகவும் கூறியுள்ளார். இவர் ட்விட்டரை வாங்கிய பிறகு எந்த மாதிரியான மாற்றங்கள் வர உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.