கத்தி, கூச்சலிட்டு யானையை விரட்டி துன்புறுத்திய கிராம மக்கள்... நெட்டிசன்கள் கண்டனம் (வீடியோ)
Elephant chased by huge crowd
யானை ஒன்றை ஊர் மக்கள் ஒன்று கூடி துன்புறுத்தும் செயல் இணையவாசிகளை நிலைகுலைய வைத்துள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்று கூடி யானையை விரட்டும் வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி வெளியிட்டுள்ளார்.
சமீப காலமாக யானைகள் குறித்த செய்திகள் அதிகம் வெளிவந்த வண்ணம் உள்ளன. கடந்த ஆண்டு கேரள மாநிலம் பாலக்காடு அருகே, பசிக்காக உணவு தேடிய யானைக்கு அன்னாசி பழத்தில் வெடிமருந்தை வைத்து யாரோ, உணவாக கொடுக்க, கர்ப்பிணி யானை படுகாயம் அடைந்து, ஆற்றில் நின்றவாறே உயிரிழந்தது. நாட்டையே உலுக்கியது இந்த சம்பவம். சமீபத்தில் கோவை மாவட்டம் மதுக்கரை அருகேயுள்ள நவக்கரை பிரிவு பகுதியில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானை ரயில் மோதி படுகாயமடைந்தது. இந்நிலையில் தற்போது யானை ஒன்றை ஊர் மக்கள் ஒன்று கூடி துன்புறுத்தும் செயல் இணையவாசிகளை நிலைகுலைய வைத்துள்ளது.
இந்திய வனத்துறை அதிகாரி சுதா ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் இரவில் ஊரில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்று கூடி உற்சாகமாக யானை ஒன்றை ஓட ஓட விரட்டும் செயல் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்கள் கண்டங்களை பதிவு செய்து வருகின்றனர். ஊர் மக்கள் இவ்விதம் செய்வது தவறு எனவும் வனவிலங்குளை காப்பது நமது கடமை எனவும் பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள இந்திய வனத்துறை அதிகாரி சுதா ராமன் யானைகளுக்கும் இங்கு வாழ உரிமை உண்டு. வனப்பகுதிகளுக்கு அருகில் அல்லது மலையடிவார அடியில் வசிக்கும் நபர்கள் யானைகளை துன்புறுத்தல் கூடாது. யானைகள் பல தலைமுறைகளாக பக்தியின் ஒரு பகுதியாக பார்க்கப்பட்டு வருகின்றது. இந்தியா முழுவதும், வனத்துறை இந்த பிரச்சினையை தீர்க்க கடுமையாக போராடி வருகிறது. நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒவ்வொரு வழக்கும் வேறுபட்டது மற்றும் 'ஒரு தீர்வு' இல்லை. காடுகள் மற்றும் வனவிலங்குகளின் மீது மானுடவியல் அழுத்தம் அதிகரித்து வருகிறது.
இந்த வீடியோக்களைப் பகிர்வதற்கான காரணம், இதுபோன்ற சிக்கல்களைப் பற்றி நம்மைக் கற்றுக்கொள்வதும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்வதுமாகும். இதைப் புரிந்துகொள்ளும் நபர்கள் விழிப்புடன் இருப்பார்கள். மேலும் மற்றவர்களுக்கும் கல்வி கற்பிப்பார்கள் என பதிவிட்டுள்ளார்.