காதலியை இருட்டில் சந்திக்க இளைஞர் செய்த செயலால் ஒட்டுமொத்த கிராமமே அதிர்ச்சிநாடெங்கிலும் நிலக்கரி பற்றாக்குறை மற்றும் இதர காரணங்களால் அவ்வபோது மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் அவதியடைந்து கொண்டிருக்கின்றனர். மின்சாரப் பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் மின்சாரத் துறை மின்வெட்டு செய்வதால் பொதுமக்கள் அவதியடைவது தெரிந்த கதைதான். ஆனால், தனிநபர் ஒருவரது நடவடிக்கையாலும் பொதுமக்கள் மின்வெட்டை சந்திக்க நேரிடும் என்ற தகவல் ஆச்சரியம் அளிக்கிறது.
ஆம், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது காதலியை இருட்டில் சந்திக்க வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த கிராமத்திற்குமான மின் விநியோகத்தை துண்டித்திருக்கிறார். இது ஏதோ ஒருமுறை மட்டும் நடந்த நிகழ்வு அல்ல. ஒவ்வொரு முறையும் தன் காதலியை சந்திக்க திட்டமிடும்போது இதுபோல மின்சாரத்தை துண்டிப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த நபரும் இறுதியாக கிராம மக்களிடம் சிக்கிக் கொண்டார்.
பீகார் மாநிலத்தின் பூர்னியா மாவட்டம், கணேஷ்பூர் கிராமத்தில் காரணமே இன்றி அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. இதற்கான உண்மையான காரணம் தெரியாமல் பொதுமக்கள் தவித்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு நாள் இரவிலும் குறிப்பிட்ட 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரையிலும் கிராமத்திற்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
Also Read : மாப்பிள்ளையை தண்ணீரில் தள்ளிவிட்ட மணப்பெண்.. பதிலுக்கு மணமகன் என்ன செஞ்சாருன்னு பாருங்க..
கணேஷ்பூர் கிராமத்தில் மட்டும் மின்வெட்டு நிலவுகிற சமயத்தில், அருகாமையில் உள்ள மற்ற கிராமங்களில் எந்தவித தடங்கலும் இன்றி மின் விநியோகம் இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், இதன் பின்னணியில் உள்ள உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும் என்று களத்தில் இறங்கினர். இறுதியாக தெரியவந்த உண்மை தெரிய வந்தபோது அவர்களுக்கு அது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது.
கிராமத்திற்கு மின் விநியோகத்தை துண்டிப்பது யார் என தெரிந்து கொள்ள கிராம மக்கள் குழு அமைத்து ரகசியமாக நோட்டமிட்டனர். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் ஒருவர் வாடிக்கையாக மின் விநியோகத்தை துண்டித்து விட்டு, அருகாமையில் உள்ள பள்ளியில் தனது காதலியை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்பது தெரிய வந்தது.
மின் விநியோகத்தை துண்டித்த இளைஞரைப் பிடித்து கிராம மக்கள் மொட்டை அடித்துவிட்டனர். அத்துடன் அவரை கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இதற்கிடையே, கிராம பஞ்சாயத்து குழுவினர் கூடி இதுதொடர்பாக ஆலோசனை செய்தனர். அதில் எடுக்கப்பட்ட முடிவின் படி, தொடர்புடைய ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்த தகவல் காவல் துறைக்கு தெரியும் என்றாலும், யாரும் இதுகுறித்து புகார் அளிக்கவில்லை என்ற காரணத்தினால் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.