நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருக்கும் நிலையில், மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
OLA போன்ற முன்னணி நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அளவிற்கு செயல்திறனில் திருப்தி இல்லை, ஒரு சில குறைபாடுகள் காணப்படுவதாக பேச்சு மற்றும் புகார்கள் எழுந்துள்ளன. இதனிடையே நாட்டின் பல பகுதிகளில் புதிதாக வாங்கப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரிகள் வெடித்து சிதறி, நடுரோட்டிலேயே ஸ்கூட்டர்கள் தீப்பற்றிய சம்பவம் மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள குலாபி தோட்டா (Gulabi Thota) என்ற பகுதியில் வாங்கி ஒரு நாளேயான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்து உள்ளது. இந்த விபத்தில்3 பேர் காயமடைந்தனர். கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 23) அதிகாலை விஜயவாடாவில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.
also read : தொடரும் தீ விபத்துக்கள் - 1,400 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்பப் பெறும் ஓலா நிறுவனம்
சம்பவத்தில் உயிரிழந்த நபர் (சிவகுமார்) தான் வாங்கிய புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பிரிக்க கூடிய பேட்டரியை, வாகனத்தில் இருந்து பிரித்தெடுத்து தனது வீட்டின் பெட்ரூமில் வைத்து அதை சார்ஜ் செய்து உள்ளார். அதிகாலையில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது சார்ஜிங் ஆகி கொண்டிருந்த பேட்டரி திடீரென வெடித்தது.
இந்த விபத்தில் ஏற்பட்ட தீ காரணமாக வீட்டில் இருந்த ஏர் கண்டிஷனிங் மெஷின் மற்றும் சில வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமானது. வீட்டில் இருந்து புகை வெளியேறுவதை கண்ட அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சிக்கியிருந்த குடும்பத்தினரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பேட்டரி வெடித்த பெட்ரூமில் படுத்திருந்த சிவகுமார், அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளும் தீக்காயம் அடைந்து இருந்தனர்.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்ததால் தீக்காயம் அடைந்த சிவகுமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரது மனைவி தீக்காயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 குழந்தைகளும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சில மணி நேர சிகிச்சைக்கு பின் அவர்கள் நிலைமை சீரானதாக தெரிகிறது.
also read : Simple Energy நிறுவனத்தின் 2-வது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியீடு
பேட்டரி வெடித்த விபத்தில் உயிரிழந்த சிவகுமார் வெள்ளிக்கிழமை தான் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கி இருக்கிறார். வெடித்து சிதறியது பூம் மோட்டார்ஸின் Corbett 14 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி என்று தகவல்கள் கூறுகின்றன. சம்பவம் பற்றி கூறியுள்ள காவல்துறை அதிகாரிகள், பேட்டரி வெடிப்பிற்கான சரியான காரணம் தெரியவில்லை. தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று காரணத்தை கண்டறிய ஆய்வு நடத்தினர். நாங்கள் சம்மந்தப்பட்ட EV நிறுவனத்திடம் பேசினோம்.
பேட்டரி வெடித்ததற்கு எலெக்ட்ரிக் ஷார்ட் சர்க்யூட் காரணமாக இருக்கலாம். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர். தெலுங்கு மாநிலங்களில் கடந்த ஒரு வாரத்திற்குள் நடந்த இரண்டாவது பேட்டரி வெடிப்பு சம்பவம் இதுவாகும்.
தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் ஏப்ரல் 19 அன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்ததில் 80 வயது முதியவர் உயிரிழந்தார் மற்றும் இருவர் காயமடைந்தனர். இந்த விபத்தும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை வீட்டில் வைத்து சார்ஜ் செய்யும் போது தான் நிகழ்ந்துளளது. இது போன்ற சம்பவங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் எண்ணத்தில் உள்ள மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.