எகிப்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு விபத்தில் ஒரு கால் பாதியாக துண்டானது. அந்தத் துயரத்தில் மீண்டெழுந்த அவர், இப்போதும் முகத்தில் குறைவில்லாத புன்னகையுடன் தன்னம்பிக்கையோடு காட்சியளிக்கிறார். எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒமர் ஹெகேசி தான் இந்த சாதனைக்கு சொந்தக்காரர்.
ஒரே மூச்சில் உள்நீச்சல் அடித்து வெகுதூரம் கடக்கும் போட்டியிலும், ஒரே மூச்சில் துடுப்புகளுடன் உள்நீச்சல் அடித்து வெகுதூரம் கடக்கும் போட்டியிலும் உலக சாதனைகளை இவர் முறியடித்திருக்கிறார். இவரது சாதனைகள் குறித்து உலக கின்னஸ் சாதனை அமைப்பின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே மூச்சில் சுமார் 56.48 மீட்டர் தொலைவை ஒமர் அதிவேகமாக கடந்து சென்றுள்ளார். அதேபோன்று, துடுப்புகளை பயன்படுத்தி உள்நீச்சல் அடிக்கையில் சுமார் 76.7 மீட்டர் தொலைவை ஒரே மூச்சில் கடந்து சென்றுள்ளார். உடலில் உள்ள பெரும் குறைபாட்டுடன் இத்தகைய சாதனைகளை செய்திருக்கும் ஒமருக்கு இப்போது 31 வயது ஆகிறது.
தனது சாதனை குறித்து இன்ஸ்டாகிராமில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பதிவு ஒன்றை ஒமர் ஹெகேசி வெளியிட்டுள்ளார். அதில், “எனது பெயர் வரலாற்றில் எழுதப்பட்டிருப்பதாக உணர்கிறேன். எனது பயணத்திற்கு எதுவுமே தடையாக இல்லை. நள்ளிரவு நேர பயிற்சிகள், குளிர் நடுங்கும் சமயத்தில் நீச்சல் குளத்தில் கழித்த பொழுதுகள் போன்றவற்றை எண்ணி மகிழ்கிறேன்.
also read :
ஏசியால் உங்கள் கரெண்ட் பில் எகிறுதா..? அப்போ இந்த ட்ரிக்ஸை ட்ரை பண்ணுங்க
அத்துடன், என்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் நிபந்தனையற்ற அன்பை எனக்கு எப்போதும் வழங்கினர். இன்னும் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை இருக்கிறது. குறிப்பாக, சிரமம் மற்றும் ஆபத்து மிகுந்த மற்றும் சாகச விளையாட்டுகளை இனி எதிர்கொள்ள இருக்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒமர் இன்றைக்கு கின்னஸ் சாதனைகளை முறியடித்திருக்கிறார் என்றாலும், இதற்காக அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சிரமங்கள் ஆகியவை கொஞ்சமல்ல. கடந்த 2015ஆம் ஆண்டில் வங்கிப் பணி மூலமாக தனது வாழ்வில் ஒமர் அடியெடுத்து வைத்தபோது விபத்தில் சிக்கினார்.
சிகிச்சையின் தொடக்க நிலையிலேயே, ஒமரின் ஒரு காலின் பாதியை நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். இருப்பினும், மிக அமைதியாக அறுவை சிகிச்சைக்கு அவர் சம்மதித்தார். கால் துண்டான பிறகு அவரது வாழ்க்கை போர்க்களமாக மாறியது.
இதுகுறித்து ஒமர் கூறுகையில், “மன ரீதியாக நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். மருத்துவமனையிலேயே நான் 3 மாதங்கள் இருக்க வேண்டியதாக இருந்தது. இது மட்டுமல்லாமல், எனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண் என்னை பிரிந்து சென்று விட்டார். இதனால், கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டது’’ என்று தெரிவித்தார்.
தன்னைப் போலவே மாற்றுத்திறனாளியாக உள்ள பலர், தடகளப் போட்டிகளில் சாதனை செய்திருப்பது கண்டு ஒமர் உத்வேகம் அடைந்தார். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என முடிவு செய்த அவர், மிகத் தீவிரமாக நீச்சல் பயிற்சி செய்யத் தொடங்கினார்.
இதற்குப் பிறகு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பல உலக சாதனைகளை ஒமர் முறியடித்து வந்தார். அகாபா கால்வாயை நீந்தி கடப்பது, மலையேற்றம் செய்வது, சைக்கிளிங் செல்வது என பல்வேறு சாதனைகளை செய்து வரும் ஒமர், தற்போது பிறருக்கு ஊக்கமளிக்கும் பேச்சாளராகவும் இருந்து வருகிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.