குடி குடியை கெடுக்கும் என்று சொல்வார்கள். தனது வாழ்க்கையை கெடுக்கும் அளவிற்கான பாதிப்பு குடி பழக்கத்திற்கு உண்டு என்பதை தான் இந்த வரிகள் விளக்குகின்றன. மேலும் குடி பழக்கம் என்பது தன்னை மட்டுமல்லாது தன்னை சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கையையும் கெடுத்து விடும்.
இப்படியொரு சம்பவம் தான் ஜப்பானை சேர்ந்த ஒருவருக்கு நடந்துள்ளது. இவரின் குடிப்பழக்கம் அந்த நகரத்தில் உள்ள பலரின் தரவுகளையே இழக்கும் அளவிற்கு மாறியுள்ளது. ஹாலிவுட் திரைப்படமான 'ஹேங்க் ஓவர்' படத்தில், குடி பழக்கத்தால் எப்படி அவர்களது வாழ்க்கை தலைகீழாக மாறும் என்பதை நமக்குக் காட்டி இருப்பார்கள்.
இதேபோன்ற சம்பவம் தான் இவருக்கும் நடந்துள்ளது. ஜப்பானின் அமகாசாகி நகரத்தில் வசிக்கும் இந்த நபர், சுமார் அரை மில்லியன் குடியிருப்பாளர்களின் தனிப்பட்ட தகவல்களைக் கொண்ட ஃபிளாஷ் டிரைவை இழந்துள்ளார் என்று சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நபர் BIPROGY என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். எந்த நகரத்தில் யார் வரிவிலக்கு பெற தகுதியுடையவர்கள் என்பதைக் கண்டறிய நகர அரசாங்கத்தால் பணியமர்த்தப்பட்ட ஒரு நிறுவனமாக அது இருந்துள்ளது. இந்த நிறுவனத்தினர் டிரைவில் அவர்களின் முகவரி, வங்கி கணக்கு எண்கள், வரி விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை சேமித்து வைத்துள்ளனர்.
கடந்த வாரம், இந்த முக்கிய தரவுகளை கொண்ட தகவலை யூ.எஸ்.பி ஸ்டிக்கில் சேமித்து, பையில் எடுத்துச் சென்ற பிறகு, அந்த நபர் ஒசாகா மாகாணத்தில் உள்ள ஒரு உள்ளூர் உணவகத்திற்கு சென்று மது அருந்தி உள்ளார். ரெஸ்டாரண்டில் ஓரிரு பாட்டில்கள் குடித்துவிட்டு குடி போதையினால் தெருவில் தூங்கி உள்ளார். நீண்ட நேரம் அங்கேயே தூங்கிய நபர், பல மணி நேரம் கழித்து எழுந்துள்ளார். அவர் எழுந்து பார்த்த போது அவரது பை காணாமல் போய்விட்டதாக ஜப்பானிய தேசிய ஒளிபரப்பு நிறுவனமான NHK தெரிவித்துள்ளது.
பத்திரிக்கைக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த தவறுக்குப் பிறகு BIPROGY நிறுவனம் முழுமையாக எல்லாவற்றையும் மதிப்பாய்வு செய்து, அனைத்து அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் இது குறித்த தெளிவான கற்பித்தலை தருவதாக கூறி இருக்கிறது. காணாமல் போன ஃபிளாஷ் டிரைவில் அமகாசாகி நகரத்தில் வசிக்கும் சுமார் 4,60,000 குடிமக்களின் தரவுகள் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : ராஜ நாகத்தை விட மிக பயங்கரமான விஷத்தன்மை கொண்ட நத்தை! இதை பற்றி உங்களுக்கு தெரியுமா?
இந்த சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, நகரின் மேயர் கசுமி இனமுராவும் செய்தியாளர் சந்திப்பை நடத்தி சிலவற்றை பகிர்ந்து கொண்டுள்ளார். "குடிமக்களுக்கு மிகுந்த சிரமத்தையும் கவலையையும் ஏற்படுத்தியதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று மன்னிப்பு கோரினார்.
Also Read : 27 ஆண்டுகளாக ஒருமுறை கூட விடுப்பு எடுக்காத ஊழியருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!
இதற்கிடையில், பைரோகி நிறுவனத்தின் தலைவரான அகியோஷி ஹிரோகாவும் செய்தியாளர் சந்திப்பில், “எங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட முக்கியமான தகவல்களை இழந்துவிட்ட சூழ்நிலையில் இருக்கிறோம். மேலும் குடிமக்களுக்கு மிகுந்த சிரமத்தையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளோம்" என்று வருத்தம் தெரிவித்து கொண்டார். மேலும் ஆழ்ந்த மன்னிப்பை நகர மக்களிடம் கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.