மாணவர்கள் முன்னிலையில் மது குடிக்கும் பள்ளி ஆசிரியர் - வைரல் வீடியோ!

மாணவர்கள் முன்னிலையில் மது குடிக்கும் பள்ளி ஆசிரியர் - வைரல் வீடியோ!

வைரல் வீடியோ

பள்ளியில் மாணவர்கள் முன்னிலையிலேயே ஆசிரியர் ஒருவர் மது குடித்த வீடியோ வைரலானதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்தது ஆந்திர அரசு.

  • Share this:
மாணவ சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டியது ஆசிரியர்களின் பொறுப்பு, ஆனால் சிலரின் பொறுப்பற்ற செயலால் அந்த ஆசிரியர் சமூகத்திற்கே அவப்பெயர் ஏற்பட்டு விடுகிறது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பலகா மண்டலில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள மண்டல் பரிஷத் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் கோடீஸ்வர ராவ். இவர் அடிக்கடி குடித்துவிட்டு பள்ளிக்கு வருவதாகவும், பள்ளியிலேயே மது குடிப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக அந்த பள்ளிக்கு சென்ற பெற்றோர் ஒருவர் அந்த ஆசிரியரை சந்தித்திருக்கிறார். ஆசிரியர்களுக்கான அறையில் இருக்கை ஒன்றில் அமர்ந்தவாறு மது குடித்துக்கொண்டும், பிரியாணி சாப்பிட்டுக்கொண்டும் இருந்த ஆசிரியர் கோடீஸ்வர ராவை பார்த்து அதிர்ந்து போனார் அங்கு படிக்கும் மாணவர் ஒருவரின் தாயார். அங்கு நடந்ததை தன்னுடைய மொபைலில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டார். அதன் பின்னர் அந்த வீடியோ வைரலானதால் ஆசிரியர் கோடீஸ்வர ராவ் செய்த விஷயங்கள் இன்று அம்பலமாகியிருக்கின்றன.

அந்த வீடியோவில், “சின்னஞ்சிறு மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தில், ஆசிரியரான நீங்கள் இது போன்று நடப்பது முறையா என கேட்டதற்கு, ஆசிரியர் கோடீஸ்வர ராவ் அப்பெண்ணை திட்டுகிறார்.

என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், வீடியோ எடுத்துக்கொள்ளுங்கள் எனது ஆடைகளை வேண்டுமானாலும் களைகிறேன் என்று வீடியோ எடுத்த பெண்மணியிடம் ஆசிரியர் கோடீஸ்வர ராவ் பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் மாணவர் ஒருவரிடம் ஆசிரியர் செய்த காரியங்கள் என்ன என அப்பெண் கேட்டபோது, பள்ளியின் பாத்ரூமிலும், அலமாரிகளிலும் மது பாட்டில்கள் இருக்கும், ஆசிரியர் அவ்வப்போது அங்கிருந்து எடுத்து குடித்துக்கொள்வார். குடித்துவிட்டால் அவரின் நடத்தை மிகவும் மோசமாக இருக்கும் என ஒரு மாணவர் கூறினார்.

மேலும் ஆசிரியர் தன்னை ஆடைகளை கழற்றச் செய்து தண்டனை அளித்ததாக மற்றொரு மாணவர் கூறினார்.” இந்த வீடியோ தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பானது.

https://youtu.be/cdHGIrTs0vU

இந்நிலையில் ஆசிரியரின் வீடியோ வெளியான நிலையில் அவரை ஆந்திர அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.

ஆசிரியரின் செயலால் தாங்கள் அதிர்ச்சியடைந்திருப்பதாக அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். ரேணுகா என்ற பெண்மணி ஒருவர் ஆசிரியரின் செயல்கள் குறித்து வீடியோ ஆதாரங்களுடன் பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: