அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் நாள்தோறும் தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவதை தவறவிட்டதில்லை. ஆனால், தேர்தல் தோல்விக்குப் பிறகு அவரைப் பற்றிய செய்திகள் பரபரப்பாக பேசப்படாத நிலையில், சீனர் ஒருவர் செய்துள்ள பொம்மை, டிரம்பை மீண்டும் லைம்லைட்டுக்கு கொண்டுவந்துள்ளது.
அதாவது, புத்தரைப்போல் டிரம்ப் அமைதியாக அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுவதுபோல் பொம்மை ஒன்றை உருவாக்கி, அதனை அவர் தபோவா (Taobao) என்ற ஆன்லைன் தளம் மூலம் விற்பனை செய்து வருகிறார்.4.6 மீட்டர் இருக்கும் ஒரு பொம்மை இந்திய ரூபாயில் 44,707 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக அந்த கலைஞர் தெரிவித்துள்ளார்.இதுவரை 100-க்கும் மேற்பட்ட பொம்மைகள் உருவாக்கி விற்பனை செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சியாமின் பகுதியில் வசித்து வரும் அவர், டிரம்ப் புத்தா சிலை குறித்து பேசினார். அப்போது, டிரம்பின் உறுதிமொழியாக இருந்த Make America Great Again என்ற வார்த்தைகளை வர்த்தகத்துக்கு பயன்படுத்த விரும்பியதாக கூறியுள்ளார். அதன்படி, Make your company great again என்ற வாசகத்துடன் அவரின் சிலையை உருவாக்கியிருப்பதாக கூறியுள்ளார். இந்த சிலையை தங்களின் மகிழ்ச்சிக்காக பலரும் விரும்பி வாங்கிச் செல்வதாக தெரிவித்த அந்த சிலை கலைஞர், குறைந்தபட்ச விலை 11,168 ரூபாயில் இருந்து 44 ஆயிரம் ரூபாய் வரை டிரம்ப் புத்தா சிலைகள் இருப்பதாக கூறினார்.
டிரம்பை தேர்தெடுத்தது குறித்து பேசிய அவர், டிரம்பின் ஆட்சிக்காலம் கர்வத்தின் உச்சமாக இருந்ததாக கூறினார். அவருடைய ஆட்சிக்காலம் நிறைவடைந்திருந்தாலும், அதனை மறக்காமல் இருப்பதற்காக இந்த சிலையை உருவாக்கியதாகவும், இந்த சிலையை பார்க்கும்போது டிரம்ப் போல் யாரும் இருக்கக்கூடாது என நினைப்பார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
Also read... Explainer: 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை-யை புதுப்பிக்கும் மோடி..!
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளான சீனாவும், அமெரிக்காவும் டிரம்பின் ஆட்சிக்காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எதிரும் புதிருமாக இருந்தனர். டிரம்ப் நிர்வாகம் எடுத்த சில அதிரடி முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் சீனாவுடன் போர்ச் சூழல் உருவாகலாம் என நிலையை ஏற்படுத்தியது. குறிப்பாக, வர்த்தகப்போர் உச்சத்தை எட்டியது. சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நடைபெற்ற வர்த்தகப்போர் உலக வர்த்தகத்திலும் எதிரொலித்தது. டிரம்பின் முடிவுகள் கணிக்க முடியாத வகையில் இருப்பதாக உலக தலைவர்கள் பலரும் அச்சம் தெரிவித்தனர்.
இந்நிலையில், புதிய அதிபராக பொறுப்பேற்றிருக்கும் பைடன், சீனாவுடனான உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் காணொளி வழியாக நடைபெற்ற அமெரிக்கா - சீனா உயர்மட்ட தலைவர்களிடையேயான சந்திப்பில் பேசிய சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இ (Wang Yi ), இருநாடுகளுக்கும் இடையில் நிலவும் தடைகளை தகர்ப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அமெரிக்கா - சீனா உறவை மேம்படுத்த இரு நாடுகளும் கவனம் செலுத்துவோம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.