• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • தெர்மாகோலுக்கே டஃப் கொடுத்த டெல்லி அரசு... யமுனா நதியில் நுரையோடு மல்லுக்கட்டு

தெர்மாகோலுக்கே டஃப் கொடுத்த டெல்லி அரசு... யமுனா நதியில் நுரையோடு மல்லுக்கட்டு

தர்மாகோலுக்கே டஃப் கொடுத்த டெல்லி அரசு

தர்மாகோலுக்கே டஃப் கொடுத்த டெல்லி அரசு

டெல்லியில் யமுனை ஆற்றில் தொழிற்சாலைகளின் வேதி கழிவுகள் கலப்பதால் எற்பட்டுள்ள, நச்சு நுரையை அப்புறப்படுத்த அரசு அதிகாரிகள் பின்பற்றும் நூதன முறை, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • Share this:
    வைகை அணையில் தண்ணீர் வீணாக நீராவியாவதை தெர்மாகோல் வைத்து தடுக்க முயன்றவர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு. அறிவியல் பூர்வமான முயற்சியாக இருந்தாலும், அவரது செயல்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு ஆளானது. தற்போது அவருக்கே டஃப் கொடுக்கும் வகையில், டெல்லி யமுனை நதியில் மிதக்கும் நுரையை அகற்ற, அரசு அதிகாரிகள் நூதன திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.

    யமுனை ஆற்றில் கரையோரம் உள்ள தொழிற்சாலைகளின் வேதிக்கழிவுகள் கலப்பதால், உருவாகும் நுரை மிதக்கும் பனிப்பாறைகளை போன்று நதியின் மேல் காட்சியளிக்கிறது. இந்நிலையில் தான் சத் பூஜையை ஒட்டி அரசின் அறிவுறுத்தலையும் மீறி, டெல்லி மக்கள் நச்சு நுரையை சிறிதும் பொருட்படுத்தாமல், அத்தனையையும் இறைவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில், நுரைக்கு மத்தியிலும் ஆர்வமுடன் முங்கி எழுகின்றனர். இறைவன் இருக்க பயமேன் என, இளம்பெண்கள் சிலர் ஆற்றில் இறங்கி நுரைக்கு மத்தியில் செல்பி எடுத்த சம்பவங்களும் அரங்கேறின.

    இந்த சூழலில், சத் பூஜையின் மூன்றாவது நாளில் யமுனை நதியில் நுரைக்கு மத்தியில் புனித நீராட ஆர்வமுடன் வந்த மக்களை, போலீசார் விரட்டியடித்தனர். பின்பு காண்போர் அனைவரும் வியக்கும் வகையில், ஆற்றில் உள்ள நுரையை அகற்றுவதற்காக சில நூதன திட்டங்களை செயல்படுத்தினர். முதற்கட்டமாக, டேங்கர் லாரிகளில் தண்ணீரை கொண்டு வந்து பீய்ச்சி அடித்து, கரையின் ஓரம் இருந்த நுரையை கலைத்தனர்.



    தொடர்ந்து, 15 மோட்டார் படகுகளை நதியில் இறக்கி, அதிவேகமாக ஓட செய்து நுரையை கலைத்தனர். அலைகளை ஏற்படுத்தி, நுரையை ஆற்றின் மையப்பகுதிக்கு கொண்டு சென்றனர். இறுதியாக, ஓரம் தள்ளப்பட்ட நுரை மீண்டும் கரைக்கு வராமல் இருக்க, மரக்கட்டைகளால் ஆன ஓட்டைகள் நிறைந்த தடுப்புகளை ஆற்றின் நடுவே நட்டு, டெல்லி அதிகாரிகள் பலரையும் ஆச்சரியப்படுத்தினர்.

    ஆற்றில் வேதிக் கழிவுகள் கலப்பதை தடுக்காமல், நுரையை அகற்ற மட்டும் முதலமைச்சர் கெஜ்ரிவால் வித்தியாசமாக யோசிப்பதாக, டெல்லி மக்கள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: