”அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’’ என்று நம்மூரில் பழமொழி ஒன்று உண்டு. அதாவது, இரவில் தனியாக செல்லும் நபரின் மனதில் பயம் குடி கொண்டிருந்தால், அவரது கண்ணில் தென்படும் ஒவ்வொரு பொருளும் பேய் போல காட்சியளிக்கும் என்பது இதன் அர்த்தம்.
நாமும் கூட என்னதான் தைரியசாலியாக இருந்தாலும் எப்போதாவது திடீரென்று பயந்து விடுவது உண்டு. குறிப்பாக, இரவு நேரத்தில் வெளியிடங்களுக்கு செல்லும்போது காலில் ஏதேனும் மிதிபட்டு விட்டால், உடனே ஏதோ பாம்பு கருதி பயந்திருப்போம். சற்றும் எதிர்பார்க்காத சமயத்தில் பின்னால் இருந்து நம் தோளில் ஒருவர் கை போட்டு அழைத்தால், அந்த சமயத்திலும் நாம் பயப்படுவது வாடிக்கையான ஒன்று தான்.
சில சமயம், எதேனும் ஒன்று நம் கண்ணில் தென்பட்ட உடனே, அது என்னவென்று மனதுக்கு புலப்படுவதற்குள் நாம் அச்சப்படுவது உண்டு. அப்படியொரு சம்பவம் தான் ஹாங்காங்கில் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள கிராமம் ஒன்றில், பெண் ஒருவர் தன் வீட்டுக்கு அருகே உள்ள குப்பை தொட்டியில் குப்பை கொட்டச் சென்றார். அப்போது பெரிய பிளாஸ்டிக் பை ஒன்று அங்கு கிடந்தது. அதை மெதுவாக திறந்து பார்த்தபோது, அதன் உள்ளே மனித உடல் போல ஒன்று பிளாஸ்டிக் கவர்களால் சுத்தப்பட்டிருப்பது கண்ணில் தென்பட்டது. இதையடுத்து, அந்தப் பெண் அலறியடித்து, அக்கம், பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, ஏராளமான மக்கள் அங்கு கூட்டமாக கூடி விட்டனர். காவல் துறையினரும் சற்று நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தனர்.
டிக் டாக் வீடியோ மூலம் பெரும் ஆபத்தில் இருந்து தப்பிய நபர்..
இதைத் தொடர்ந்து, அந்தப் பிளாஸ்டிக் பையை ஆய்வு செய்த போது, அதனுள்ளே இருப்பது பிணம் அல்ல, மனித உடல் போன்ற வெறும் பொம்மை என்பது தெரியவந்தது. இதைப் பார்த்து சுற்றி நின்ற அனைவரும் சிரித்து விட்டனர். மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் இதுபோன்ற செயலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, காவல் துறையினர் நடத்திய இந்த சோதனைக் காட்சிகள் யூடியூப் வலைதளத்தில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, பையில் இருந்தது பொம்மை என தெரிந்த உடன் மக்கள் சிரிக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
பொம்மை பார்த்து ஏமாந்த அந்தப் பெண் இதுகுறித்து கூறுகையில், “உண்மையிலேயே என் வீட்டு அருகில் பிணம் கிடப்பதாக நினைத்து கவலை அடைந்து விட்டேன். நான் பையை திறந்து பார்த்தபோது கை, கால், தலை அப்படியே பார்ப்பதற்கு மனித உடல் போல இருந்தது’’ என்று கூறினார்.
ஜப்பானில் கடந்த ஆண்டு இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்தது. தண்ணீரில் பெண் ஒருவர் மூழ்கிக் கொண்டிருப்பதாகக் கருதி, மீட்புக் குழுவினர் அவசர, அவசரமாக களமிறங்கி மீட்கச் சென்றனர். அப்போதுதான் அது பெண்ணல்ல, பொம்மை என்பது தெரிய வந்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.