கோவிட் தொற்றுக்கு தாயை இழந்த பின் 'ஆக்ஸிஜன் ஆட்டோ' மூலம் 800-க்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றிய சாதனை பெண்மணி!

சீதாதேவி

பெருந்தொற்றுக்கு தான் தாயை இழந்த நிலை போல பிறருக்கு ஏற்பட கூடாது என்பதற்காக "ஆக்சிஜன் ஆட்டோ" உருவாக்கி கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்துள்ளார் சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த சீதாதேவி.

  • Share this:
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கோவிட் -19 வைரஸ். நம் நாட்டை பொறுத்த வரை கொரோனா முதலாம் அலை ஏற்படுத்தியதை விட இரண்டாம் அலை ஏற்படுத்திய பேரழிவு மிக அதிகம். ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டதால் போதிய சுகாதார வசதிகளை அவர்களுக்கு கொடுக்க முடியாமல் நாடே திணறியது. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. பலர் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் பொதுவெளியிலேயே உயிரிழந்தனர். சுடுகாடுகளில் தொற்றால் இறந்தவர்களின் உடல்களை எரிக்க அல்லது புதைக்க முடியாமல் பெரும் அவல நிலை ஏற்பட்டது.

இரண்டாம் அலையில் இவ்வளவு பெரிய அளவிலான இடர்பாடுகள் ஏற்பட்டு மக்கள் பெரும் இன்னல்களில் சிக்கியதற்கு, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசியங்களில் ஒன்றான மருத்துவ ஆக்சிஜனில் வரலாறு காணாத பற்றாகுறை ஏற்பட்டதே காரணமாக அமைந்தது. ஆக்சிஜன் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களில் சென்னையைச் சேர்ந்த 36 வயதான சீதாதேவியும் ஒருவராவார். இவரது 65 வயதான தாயை கடந்த மே மாதம் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க , மருத்துவமனையின் வெளியே பல மணிநேரம் காத்திருந்தார். ஏனென்றால் அவரது தாய் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பல மணிநேரங்கள் ஆம்புலன்ஸ் காத்திருப்புக்கு பிறகும் அங்கு அனுமதி கிடைக்காத காரணத்தால் அடுத்து ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு படுக்கை கிடைத்தாலும் போதுமான ஆக்சிஜன் வசதி கிடைக்கவில்லை. அவரது தாயின் ஆக்சிஜன் நிலை குறைந்து கொண்டே வந்ததால் அவரை ஒரு ஆம்புலன்ஸிலிருந்து மற்றொரு ஆம்புலன்ஸுக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதற்குள் அவரது தாயின் உயிர் பிரிந்தது. போதுமான மருத்துவ ஆக்சிஜன் கிடைக்காததால் தனது அன்புதாயை இழந்து தவித்த சீதா தேவி, தன்னை போன்ற துயரமான நிலை இனி யாருக்கும் வர கூடாது என்ற முடிவெடுத்து இதுவரை சுமார் 800-க்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றி இருக்கிறார்.

தாயை இழந்த சில நாட்களிலேயே மீண்டும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் வாயிலுக்கு சென்று மீண்டும் காத்திருந்தார் சீதாதேவி. அந்த முறை "ஆக்சிஜன் ஆட்டோ"-வுடன். பெருந்தொற்றுக்கு தான் தாயை இழந்த நிலை போல பிறருக்கு ஏற்பட கூடாது என்பதற்காக "ஆக்சிஜன் ஆட்டோ" உருவாக்கி கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்துள்ளார் சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த சீதாதேவி. ஓட்டுநர் இருக்கையில் இருந்த சீதாதேவி, ஆட்டோவினுள் ஆக்ஸிஜன் சிலிண்டர், ஃப்ளோமீட்டர் மற்றும் மாஸ்க்குகளுடன் கொரோனா நோயாளிகளுக்கு உதவி செய்ய காத்திருந்தார். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கொரோனா இலவச சேவைகளை வழங்கினார்.

Also read... என்டமிக் நிலையில் இந்தியா.. எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

கொரோனா இரண்டாம் அலை சென்னையில் மிகவும் உக்கிரமாக இருந்த மே மாதத்திலும் அதனை தொடர்ந்தும் ஸ்ட்ரீட் விஷன் சேரிடபிள் ட்ரஸ்ட் மற்றும் மோகன்ராஜ் & சரத்குமார் ஆகிய 2 தன்னார்வலர்களின் உதவியுடன் ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 பேருக்கு ஆக்ஸிஜன் உதவியை சீதாதேவி வழங்கி வந்தார். பகலில் மருத்துவமனைகளிலும் இரவு நேரங்களில் மாத்தூர், மாதவரம், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் அவசர தேவைக்காக போன் செய்தால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பணிகளிலும் ஈடுப்பட்டார். தவிர தொற்று உச்சத்தில் இருந்த போது, சீதா இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டிய இடங்களுக்கும் எடுத்துச் சென்றார்.

சென்னையில் உள்ள சுமார்10 மருத்துவமனைகளில் சானிட்டரி நாப்கின் டிஸ்பென்சர்களையும் இவர் நிறுவியுள்ளார். இதனிடையே மே மாதத்தில் தனது உன்னதமான ஆக்ஸிஜன் ஆட்டோ சேவையை துவக்கிய சீதாதேவி, தற்போது அதே வசதிகளுடன் மேலும் இரண்டு ஆட்டோக்களை தனது சேவை பணியில் இணைத்துள்ளார். தனது தாயை இழந்த பின்னர் சுமார் 800-க்கும் மேற்பட்டோரின் உயிரை காப்பாற்றி உள்ள சீதாதேவியின் சமூக சேவை உணர்வு பலரையும் வியக்க வைத்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published: