Special Story | சென்னையில் ரூ.10-க்கு மதிய சாப்பாடு - ஏசி ரூமில் கூட நீங்க உட்கார்ந்து சாப்பிடலாம்!

Special Story | சென்னையில் ரூ.10-க்கு மதிய சாப்பாடு - ஏசி ரூமில் கூட நீங்க உட்கார்ந்து சாப்பிடலாம்!
உழைப்பாளி உணவகம்
  • Share this:
சென்னை சாலிகிராமத்தில் உள்ள உழைப்பாளி உணவகத்திற்கு 10 ரூபாயுடன் சென்றால் மதிய உணவை முடித்துவிடலாம். ஆம் இங்கு ஒரு தேநீருக்கு ஆகும் செலவான பத்து ரூபாய்க்கு, அளவு சாப்பாடு தருகின்றனர்.

மணப்பாக்கத்தில் ஏற்கனவே இந்த உணவகத்தின் முதல் கிளை தொடங்கப்பட்ட நிலையில் தற்போது சாலிகிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது. குறைவான விலையில் சுகாதாரமான உணவு கிடைப்பதால் தொடங்கிய சில நாட்களிலேயே கூட்டம் அலைமோதுவதாக கூறுகின்றனர் சாலிகிராமவாசிகள்.

மேலும் இந்த உணவகத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்வதற்கு தனிக் கட்டணம் இல்லை. விருப்பப்பட்டால் காற்றோட்டமாக திறந்த வெளியில் நல்ல நிழலில் போடப்பட்டிருக்கும் மேசைகளிலும் அமர்ந்து கொள்ளலாம்.


இந்த உணவகம் குறித்து நம்மிடம் பேசிய மாரி, “எனக்கு சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்பது ஆசை. அதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். எங்களுக்கு முதல் அடிப்படை பிரச்சனை சாப்பாடு. ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிடுவோம். இரண்டு வேளை சாப்பிட மாட்டோம். சில நேரம் ஒரு நாள் முழுக்க சாப்பாடு இருக்காது. இந்த உணவகம் எனக்கு ரொம்ப திருப்திகரமாக இருக்கிறது” என்றார்.



எனக்கு அளவு சாப்பாடெல்லாம் ஒத்துவராது. பசி தீரும் வரை அளவில்லாமல் சாப்பிடுவேன் என யாராவது கூறினால் அவருக்கும் இங்கு உணவுண்டு. 30 ரூபாய் கொடுத்தால் போதும் அளவில்லா சாப்பாடும் கிடைக்கும்.நன்கு உண்ட களைப்பில் நம்மிடம் பேசிய பாக்ஸர் ரவி, “நான் சினிமாவில் 20 வருடங்களாக இருக்கிறேன். நான் கொஞ்சம் இல்ல நல்லாவே சாப்பிடும் ஆளு தான். அதிகமாக உடற்பயிற்சி செய்வேன். 3 வேளை சாப்பிட்டால் குறைந்தது ரூ.250 செலவாகும். இந்த ஹோட்டலை ஃபேஸ்புக்கில்தான் பார்த்தேன். அமேஸிங்” என்கிறார் குட்டி ஏப்பத்துடன்.



இந்த உணவகத்தில் சினிமாக்காரர்களாக இல்லாத வேறு சிலரையும் காண முடிந்தது. சாப்பாடு, ஒரு கூட்டு, சாம்பார், வத்தகுழம்பு, ரசம் மற்றும் மோர், வேண்டுமென்றால் பத்து ரூபாய்க்கு பக்கோடா வாங்கிக்கொள்ளலாம். அளவு சாப்பாடா அளவில்லா சாப்பாடா என்பது தேவையையும் கையிருப்பையும் பொருத்தது.



சென்னை போன்ற நகரத்தில் பத்து ரூபாய்க்கு எப்படி உணவு கொடுக்க முடிகிறது என்று உணவக உரிமையாளரும், சித்த மருத்துவருமான வீரபாபுவை கேட்டால், காலையும், மாலையும் கிடைக்கும் வருமானத்தில் மதியம் ஏற்படும் இழப்பை சரி செய்துகொள்வதாக கூறுகிறார். லாப நோக்கில் மட்டும் இந்த உணவகத்தை நடத்தவில்லை எனக் கூறும் இவர், நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் என்ற முறையில் நற்பணி செய்யும் நோக்கில் குறைந்த விலை உணவகத்தை நடத்துவதாக கூறுகிறார்.

மேலும் படிக்க: ஸ்மார்ட் சிட்டி டாப் பட்டியல்: தமிழக நகரங்கள் எவை?
First published: February 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading