ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

PUBG Madan | ‘பப்ஜி விளையாடுவதை நிறுத்திவிட்டு பள்ளி பாடங்களில் கவனம் செலுத்துங்கள்’- வைரலான சைபர் கிரைம் போலீசாரின் ‘தக் லைஃப்’ அட்வைஸ்

PUBG Madan | ‘பப்ஜி விளையாடுவதை நிறுத்திவிட்டு பள்ளி பாடங்களில் கவனம் செலுத்துங்கள்’- வைரலான சைபர் கிரைம் போலீசாரின் ‘தக் லைஃப்’ அட்வைஸ்

பப்ஜி மதன்

பப்ஜி மதன்

18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பலர் மதனை ஆதரிக்கத் தொடங்கியதும், போலீசார் மதனின் ரசிகர்களுக்கு அவரது யூடியூப் பக்கத்திலேயே அட்வைஸ் வழங்கியுள்ளனர்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

யூடியூபர் ‘டாக்ஸிக்’ மதன்குமார் போலீசாரால் கைது செய்யப்பட்ட பின் அவரின் யூடியூப் பக்கத்தை மடக்கிய சைபர் கிரைம் போலீசார், அதில் ‘பப்ஜி விளையாடுவதை நிறுத்திவிட்டு பள்ளி பாடங்களில் கவனம் செலுத்துங்கள்’ என மதனின் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலானது.

கடந்த 3 ஆண்டுகளாக முகத்தை காட்டாமல் தனது யூடியூப் சேனலில் ஆபாசமாக பேசி கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டியவர் மதன் என்கிற ‘டாக்ஸிக்’ மதன். தடைசெய்யப்பட்ட ஆன்லைன் பப்ஜி விளையாட்டை தனது யூடியூப் பக்கத்தில் விளையாடி காட்டியும் ஆபாசமாக பேசியும் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளது தற்போது அம்பலமானது. இவரது பேச்சால் மூளைசலவை செய்யப்பட்ட சிலர் இவரது கண்மூடித்தனமான ரசிகர்கள் ஆகினர். அதிலும் குறிப்பாக இவருக்கு சிறுவர்கள் பட்டாளம் அதிகம்.

பின்னர், நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலியால் மதனின் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதனை தொடர்ந்து மதனுக்கு எதிராக புகார்கள் குவியத் தொடங்கிய நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 14ஆம் தேதி விசாரணையை துரிதப்படுத்தினர். சென்னை பெருங்களத்தூரில் உள்ள மதனின் வீட்டிற்கு சென்றபோது அவர் அங்கிருந்து தப்பிசென்றதால் அவரது தந்தை மாணிக்கம் மற்றும் அவரது சகோதரரிடம் விசாரணையை தொடங்கினர்.

அதே சமயத்தில், மதனின் சொந்த ஊரான சேலத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கு மதனின் தாய் வீட்டில் இருந்த அவரது மனைவி கீர்த்திகாவை கடந்த 16ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் கீர்த்திகாவிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. மதனின் யூடியூப் சேனலுக்கு கீர்த்திகா நிர்வாகியாக இருந்தது முதல் யூடியூப் சேனலில் மதன் நேரலை வரும் போது ஆபாச பேச்சுகளை பேசியதும் அப்பெண் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே மதனின் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த கீர்த்திகாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் ஜூன் 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

சுமார் 4 நாட்கள் தலைமறைவாக இருந்த ‘டாக்ஸிக்’ மதன் ஜூன் 18ஆம் தேதி தர்மபுரி மாவட்டம் அருகே சிறப்புப் படையினரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார். அப்போது, காவல்துறையின் காலில் விழுந்து தான் தவறு செய்துவிட்டதாகவும் தன்னை மன்னித்து விட்டுவிடவும் சொல்லி கெஞ்சியதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. விசாரணைக்கு பின்னர் ஜூலை 3ஆம் தேதி வரை பப்ஜி மதனுக்கு நீதிமன்ற காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின், ஜூன் 20ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீஸ், மதன்குமாரின் அனைத்து யூடியூப் சேனல்களையும் பிளாக் செய்து வீடியோக்களை நீக்கியது. இதற்கிடையில், சைபர் கிரைமின் ‘ஸ்கெட்ச்’ அங்கு நின்றுவிடவில்லை. 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பலர் மதனை ஆதரிக்கத் தொடங்கியதும், போலீசார் மதனின் ரசிகர்களுக்கு அவரது யூடியூப் பக்கத்திலேயே அட்வைஸ் வழங்கியுள்ளனர். ‘பப்ஜி விளையாடுவதை நிறுத்திவிட்டு பள்ளி பாடங்களில் கவனம் செலுத்துங்கள்- நன்றாக படியுங்கள்’ என்று கூறியுள்ளது சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், சேனலின் கவர் புகைப்படத்தை ‘CHANNEL BLOCKED- சென்னை சைபர் க்ரைம்’ என மாற்றப்பட்டுள்ளது. மதன் ரசிகர்களுக்கு காவல்துறை வழங்கிய வித்தியாசமான அறிவுரை சமூக வலைதளங்களில் வைரலாகியதால், இது சைபர் கிரைம் போலீசாரின் ‘தக் லைஃப்’ என்று நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

மதனின் யூடியூப் சேனல்களில் இருந்து மற்ற அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்ட நிலையில், அவரது சேனல்களுள் ஒன்றிலிருந்து மீதமுள்ள வீடியோக்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இரண்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மதனுக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்பிலான வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். முன்னதாக, யூடியூபர் மதன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், ஜூன் 18ஆம் தேதி மதனை கைது செய்த பின்னர் அவரை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது, வீடியோ எடுத்த பத்திரிகையாளரை பார்த்து நான் என்ன பிரதமரா? என்று மதன் கேட்டது பேசுபொருளானது.

First published:

Tags: Online Game PUBG, YouTuber Madan