கல்லூரி பாடப் புத்தகம் ஒன்றில், “வரதட்சணை பெறுவதால் கிடைக்கும் நன்மைகள்’’ என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றிருப்பது குறித்த செய்தி அண்மையில் வைரல் ஆனது. நர்சிங் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடத்தை நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சிவசேனா கட்சியின் எம்பி பிரியங்கா சதுர்வேதி கடிதம் எழுதினார்.
இத்தகைய சூழலில், ஐசிஎஸ்இ மீடியத்தின் 3ஆம் வகுப்பு பாடப் புத்தகம் ஒன்று தற்போது வைரல் ஆகியுள்ளது. ஆனால், மேற்கண்ட கல்லூரி பாடத்தைப் போல எதிர்மறையான கருத்திற்காக அல்லாமல், இந்தப் பள்ளி பாடத்தில் நேர்மறையான கருத்து இடம்பெற்றுள்ளது.
பழமையான முறையில் பாலின வேறுபாடுகள் கடைப்பிடிக்கப்படுவதை களைந்து, பாலினம் அடிப்படையிலான செயல்பாடுகள் மாற வேண்டும் என்று அந்தப் புத்தகத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. “Changing Roles of Girls and Boys’’ என்ற பெயரில் இந்தப் பாடம் அமைந்துள்ளது.
இந்த பாடம் முதன் முதலில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டது. அந்த பதிவில், “3ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகம் இது. நல்லதை நோக்கி உலகம் மாறி வருகிறது’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பாடத்தில், ஒருவர் ஆணாக இருப்பதோ, பெண்ணாக இருப்பதோ, அவர்கள் விரும்பிய பணியை செய்வதற்கு தடையாக அமைய கூடாது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூகத்தில் பெண்களும், ஆண்களும் என்னென்ன பணிகளை புதிதாக செய்ய வேண்டும் என்பது குறித்தும், பாலின அடிப்படையிலான செயல்பாடுகள் எந்த அளவுக்கு மாறி வருகின்றன என்பது குறித்தும் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
Also Read : ஹோட்டல் ரூமில் தூங்கிய போது நிகழ்ந்த விபரீதம் - காது கேட்காததால் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்த நபர்!
பாலின வேறுபாடுகளை களைய வலியுறுத்தும் இந்த பாடப்புத்தகம் தற்போது பல்வேறு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பாலின அடிப்படையிலான விதிகளை மாற்றி, அனைவருக்குமான கற்பித்தலை பள்ளிகளில் முன்னெடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கு முன்பு வைரல் ஆகி வந்த கல்லூரி பாடப் புத்தகத்தில் எதிர்மறையான பல்வேறு கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. வீட்டிற்கு தேவையான டிவி, ஃபேன், காட், மேட்ரஸ் போன்ற அடிப்படையான பொருட்கள் கிடைப்பதற்கு வரதட்சணை உதவிகரமாக இருக்கும் என்று அந்த பாடப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
Also Read : இளைஞரின் முதுகில் வால் போல வளர்ந்துள்ள முடி - கடவுளின் அவதாரம் என கூறும் பொதுமக்கள்!
மகளிர் மேம்பாடு குறித்து அந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள குறிப்பில், வரதட்சணை கொடுப்பதற்கான வசதி இல்லை என்பதாலேயே பெண் பிள்ளைகளை படிக்கவும், வேலைக்குச் செல்லவும் பெற்றோர் ஊக்குவிக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துகளுக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அந்த பாடப்புத்தகத்தை திரும்பப் பெறுவது என அதன் பதிப்பகத்தார்கள் முடிவு செய்துள்ளனர்.
சமூக வலைதளங்களின் வருகைக்குப் பிறகு, நல்ல விஷயங்கள் உடனுக்குடன் வைரல் ஆகும் என்பதும், எதிர்மறையான விஷயங்களும் வைரல் ஆகும் அதே சமயம் கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதற்கும் இந்த இரு செய்திகள் சான்றாக அமைந்துள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.