“ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா“ என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகள் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் கண்பார்வையை இழக்க நேரிடும் என்பதால், அதற்குள் உலகம் முழுவதும் சுற்றிக்காட்டி வருகின்றனர் கனடாவைச் சேர்ந்த தம்பதிகள்.
குழந்தைகளுக்குச் சின்ன சின்ன விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பது முதல் உலகைச் சுற்றிக்காட்ட வேண்டும் என்ற எண்ணம் அனைத்து பெற்றோர்களுக்கும் இருக்கும். அதிலும் குடும்பத்துடன் செல்ல வேண்டும் என்றால் சந்தோஷத்திற்கு எல்லையே கிடையாது. ஆனால் சில காலங்கள் தான் நம்முடைய குழந்தைகள் உலகைப்பார்க்க முடியும் என்ற நிலை இருந்தால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.
இப்படி ஒரு ரணமான மனநிலையில் தான் கனடாவைச் சேர்ந்த தம்பதிகள் தன்னுடைய குழந்தைகளுக்கு உலகம் முழுவதும் சுற்றிக்காட்டி வருகின்றனர். ஏன்? என்ன நடந்தது? நாமும் தெரிந்து கொள்வோம்.
கனடாவைச் சேர்ந்த எடித் லெமே மற்றும் செபாஸ்டின் பெல்லெட்டியர் என்ற தம்பதியினருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவர்களுடைய மூத்த மகள் மியா என்பவருக்குக் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மாலை நேரத்தில் கண் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்த போது, ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற அரிய வகை மரபணு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இந்த நோய்ப் பாதிப்புக்குள்ளாகும் போது 30 வயதில் பார்வையற்றவர்களாக மாறக்கூடும் என்ற அதிர்ச்சி செய்தியையும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் ஓர் ஆண்டிற்குள் மியாவின் சகோதரர்கள் கொலின் மற்றும் லாரன்ட் ஆகியோரும் அதே நோயால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. ஒரு மகனுக்கு மட்டும் எவ்வித பிரச்சனையும் ஏற்படவில்லை.
பொதுவாக இந்த நோயினால் பாதிக்கப்படுபவர்கள் 30 வயது வரை எல்லா மனிதர்களும் போலத் தான் இருப்பார்கள். ஆனால் ஆண்டுகள் செல்ல செல்ல ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா என்ற அரிய வகை மரபணு நோயினால், விழித்திரையில் உள்ள செல்கள் காலப்போக்கில் உடைந்து பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்நிலையில் தான் இதுபோன்ற நோயினால் தங்களுடைய குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்த பின்னர் மன வருத்தம் இருந்தாலும், குழந்தைகளிடம் இதுகுறித்து காட்டக்கூடாது என்ற மனநிலைக்கு வந்துள்ளனர் கனடாவைச் சேர்ந்த தம்பதிகள்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் எடித் லெமே தெரிவிக்கையில், இந்நோய்ப் பாதிப்பு ஏற்பட்டு விட்டதே என்ற எதிர்மறை கருத்துக்கள் குழந்தைகளுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது எனவும் புத்தகங்களில் இது தான் யானை என்று காட்டுவதை விட நேரிலேயே அழைத்துக் காட்ட முடிவு செய்தோம்.
இதோடு உலகம் முழுவதும் உள்ள முக்கியமான சுற்றுலா தளங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ள பயணங்களை மேற்கொண்டுவருகிறோம் என்றார். இதுவரை அவர்கள் நமீபியா, தான்சானியா, துருக்கி, மங்கோலிய, மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
குழந்தைகளின் சந்தோஷத்திற்காகச் சொத்தை விற்று உலகம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் இவர்கள், அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் புகைப்படங்களைப் பகிர்ந்து டிரெண்டாகி வருகின்றனர்.
இந்த சூழலில் எப்படி வாழ்க்கையை நடத்த வேண்டும்? பாசிட்டிவ் எண்ணங்களை மட்டும் கொண்டிருக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுப்பதில் பெற்றோர்கள் கவனத்துடன் உள்ளனர். உலகம் முழுவதும் ஊர் சுற்றி வருவதால் குழந்தைகளுக்கு வீட்டுக்கல்வியை அளித்து வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பவுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Canada, Parents, Viral News