இன்றைய தலைமுறை பெண்கள் தங்களுடைய திருமணம் தொடர்பான விஷயங்களில் சுதந்திரமாக முடிவு எடுப்பதையே அதிகம் விரும்புகின்றனர். தனக்கு சரியான, பொருத்தமான மணமகனை தேர்வு செய்து கொள்வதில் பெண்கள் உறுதியாக இருக்கின்றனர். வாழ்நாள் எல்லாம் இணைந்து வாழப் போகும் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என முடிவு செய்வது, நிச்சயமாக அவர்களுடைய உரிமை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
பெரும்பாலான சமயங்களில் நியாயமான காரணங்களுக்காக திருமணத்தை பெண்கள் நிறுத்துகின்றனர். உதாரணமாக, மாப்பிள்ளை வீட்டில் கழிவறை இல்லை என்பதால் அல்லது மாப்பிள்ளை மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது தெரிய வருவது போன்ற சூழலில் திருமணத்தை நிறுத்துகின்றனர். இவையெல்லாம் 100 சதவீதம் நியாயமானதே. சில நேரங்களில் மாப்பிள்ளை வழுக்கையாக இருக்கிறார் என்ற காரணத்தை சொல்லிக் கூட கடைசி நிமிடத்தில் திருமணத்தை பெண்கள் நிறுத்துகின்றனர்.
அதே சமயம், ஒன்றிரண்டு இடங்களில் வினோதமான காரணங்களுக்காகவும் பெண்கள் திருமணத்தை நிறுத்தும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அப்படியொரு நிகழ்வுதான் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கான்பூர் தேஹத் மாவட்டத்தில் நடைபெற்றிருக்கிறது.
திருமணத்திற்கு ஏற்பாடு
கான்பூர் தேஹத் மாவட்டம், மங்கள்பூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில், விவசாயி ஒருவர் தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்திருந்தார். மணமக்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டத்தை முன்னிட்டு வரவேற்பு மேடை மிக அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அனைவரையும் மணமகள் மற்றும் அவரது குடும்பத்தினர் வரவேற்றுக் கொண்டிருந்தனர். இறுதியாக மணமகனும் மேடைக்கு வந்து சேர்ந்தார்.
Also Read : 390 மில்லியன் ஆண்டுகள் பழமையான உயிரினம்... நமது ஆரம்பகால மூதாதையர் என தகவல்
ஃபோட்டோகிராஃபர் வரவில்லை
தன் வாழ்நாளில் பொன்நாளாக அமையப் போகும் திருமண நிகழ்வுகளை மிக அழகாகப் படம் பிடித்து, என்றென்றும் நீங்காத நினைவுகளாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று மணப்பெண் கனவு கண்டு கொண்டிருந்தார். ஆனால், மணமகனோடு வந்த குழுவினரில் ஃபோட்டோகிராஃபர் இல்லை. இதனால், திருமண நிகழ்வை பாதியில் நிறுத்தினார் மணமகள். இதைத் தொடர்ந்து, அருகாமையில் உள்ள வீட்டில் சென்று அமர்ந்து கொண்டார்.
சமாதானம் பலனளிக்கவில்லை
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணப்பெண்ணை உறவினர்கள் பலரும் சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால், “திருமண நாள் குறித்து கூட அவருக்கு அக்கறை இல்லை. எதிர்காலத்தில் என்னைப் பற்றி அவர் எப்படி அக்கறை கொள்வார்?’’ என்று அவர் கேட்டார். இருந்தாலும், இந்த விஷயத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் என்று பெரியவர்கள் எவ்வளவோ சொல்லியும், மணப்பெண் மனம் இறங்கவில்லை.
ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்ற மணமகன்
இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்று விட்டது. அங்கு காவலர்கள் முன்னிலையில் இரு வீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், எந்தவித தீர்வும் ஏற்படவில்லை. இதையடுத்து, இரு தரப்பிலும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்பட்ட பொருட்கள் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை திருப்பி ஒப்படைத்தனர். இறுதியாக மணமகன் பெரும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.