Bill Gates | பில் கேட்ஸ் தம்பதி விவாகரத்து அறிவிப்பு: 'Microsoft Share Price' என்று கூகுளில் தேடும் இந்தியர்கள்

Bill Gates | பில் கேட்ஸ் தம்பதி விவாகரத்து அறிவிப்பு: 'Microsoft Share Price' என்று கூகுளில் தேடும் இந்தியர்கள்

கோப்புப் படம்.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ் 27 ஆண்டு திருமண வாழ்விற்கு பின் விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்படி அடுத்து இந்தியர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஷேர் விலை என்ன என்று கூகுள் தேடல் எந்திரத்தில் தேடி வருகின்றனர்.

  • Share this:
    உலகின் செல்வந்த ஜோடிகளான பில்கேட்ஸ் தம்பதி தங்களது விவாகரத்து முடிவை ட்விட்டரில் அறிவித்துள்ளனர். விவாகரத்து முடிவை அறிவித்தாலும் உலகளாவிய சுகாதாரம், பாலின சமத்துவம், கல்வி மற்றும் பிற காரணங்களுக்காக திட்டங்களுக்கு நிதியளிக்கும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் தங்கள் கூட்டுப் பணிகளைத் தொடரப் போவதாகக் கூறியுள்ளனர்.

    சியாட்டிலில் கோர்ட்டில் பதிவு செய்த விவாகரத்து விண்ணப்பத்தில், “திருமணம் மீட்க முடியாது முறிந்து விட்டது” என்று கூறப்பட்டுள்ளது. முன்னாள் உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆன பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமானது.

    அவர்கள் பிரிந்தது பற்றி மக்களுக்குக் கவலையில்லை. அந்த பெரிய சொத்துக்களை எப்படி பிரித்துக் கொள்வார்கள் என்பதில்தான் மக்களுக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது.

    ராய்ட்டர்ஸ் செய்திகளின்படி கேட்ஸ் தம்பதியினருக்கு மைனர் குழந்தை இல்லை, சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் இருதரப்புக்குமான உடன்பாட்டை அங்கீகரிக்குமாறு கோர்ட் மனுவில் இருவரும் தெரிவித்துள்ளனர், ஆனால் என்ன மாதிரியாகப் பிரித்துக் கொண்டனர் என்ற விவரங்கள் இல்லை.

    ட்விட்டரில் இருவரும், “எங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் இருவரும் ஒருசேர வளர முடியும் என்று தோன்றவில்லை. புதுவாழ்க்கைக்கான வெளியும் தனித்துவமும் தேவைப்படுகிறது” என்று கூறியுள்ளனர்.

    பொதுமக்களுக்கு இருக்கும் ஆர்வம் என்னவெனில் பில் கேட்சும், மெலிண்டாவும் தங்கள் சொத்துக்களில் எவ்வளவு பிரித்து கொண்டனர் என்பதே. கடந்த ஒரு நாளில் கூகுள் இந்தியாவில் தேடப்படும் விவரம் என்னவெனில் ‘மைக்ரோ சாஃப்ட் ஷேர் பிரைஸ்’ என்று தேடி வருகின்றனர்.

    பில் கேட்ஸ், மெலிண்டாவுக்கு ஹவாயில் 1994 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 1987-ல் மைக்ரோசாப்ட் புராடக்ட் மேனேஜராக மெலிண்டா சேர்ந்தது முதல் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2019-ல் மெலிண்டா தன் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை எழுதினார், அதில் உலகப் பிரபலத்தின் மனைவியாகவும், வீட்டில் 3 குழந்தைகளுக்கு அம்மாவாகவும் வாழ்ந்த தன் போராட்டங்களை குறிப்பிட்டுள்ளார்.

    கேட்ஸ் அறக்கட்டளை பொதுச்சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல் ஆகியவற்றின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தியது. கொரொனா வைரஸ் வாக்சின் தயாரிப்புக்கு உதவுவது இதில் முக்கியமானதாகும். சூரிய ஒளி ஆற்றல் டாய்லெட்டுகளும் இவர்களது கவனத்தில் முக்கியத்துவம் பெற்றவையாகும்.

    அமேசான் நிறுவனத் தலைவர் ஜெஃப் பெசாஸ் தன் மனைவி மெக்கன்சியைப் பிரிந்ததையடுத்து தற்போது பில்-மெலிண்டா கேட்ஸ் தம்பதியினர் டைவர்ஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published: