வாட்ஸ் அப் செயலியை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் முன்னிலையில் இந்தியா உள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களது தகவல் தொடர்புக்கு முக்கியமாக வாட்ஸ்அப்பை தான் பயன்படுத்துகிறார்கள். வாட்ஸ்அப்பினால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி பல வித மோசடிகளும் நடந்து வருகின்றன. அதிலும் சமீப காலமாக வாட்ஸ்அப் மூலம் நடக்கும் மோசடிகள் மிகவும் அதிகரித்து விட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் மோசடிக்காரர்கள் வேலை வாங்கித் தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் வாட்ஸ்அப் வழியாக பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது மோசடிக்காரர்கள் ஒரு லைக்குக்கு 50 ரூபாய் தருவதாக கூறி உங்களிடம் பணம் பிடுங்கி விடுவார்கள்.
சமீப காலமாக பல்வேறு நபர்கள் இந்த மோசடியில் சிக்கி தங்களது பணத்தை இழந்துள்ளனர். முதலில் மோசடி கும்பலை சேர்ந்த யாரேனும் ஒருவர் உங்களது வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு வேலையின் விவரத்தை பற்றி கூறுவார்கள். அதாவது நீங்கள் யுடியூப் வீடியோக்களை பார்த்து அவற்றிற்கு லைக் போட வேண்டும். அவ்வாறு நீங்கள் போடும் ஒரு லைக்கிற்கு 50 ரூபாய் வரை சம்பளம் அளிக்கப்படும் என ஆசை காட்டுவார்கள்.
மேலும் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை தருவதாக கூறி பணத்தாசையை தூண்டி விடுவார்கள். வாட்ஸ்அப் மட்டுமின்றி பேஸ்புக், லிங்க்ட் இன் போன்ற பல்வேறு சமூக வலைத்தளங்களின் மூலம் பல்வேறு நபர்களை தொடர்பு கொண்டு இந்த பண மோசடியில் சிக்க வைத்துள்ளனர்.
அவர்கள் உங்களை இந்த மோசடியில் சிக்க வைக்க தொடர்பு கொள்ளும் போது, குறிப்பிட்ட அளவிலான ஸ்லாட்டுகளே உள்ளதாக உங்களிடம் கூறுவார்கள். மேலும் நம்ப வேண்டும் என்பதற்காக சிறிய அளவிலான பணத்தை கூட உங்களது வங்கி கணக்கில் அவர்கள் செலுத்துவார்கள்.
Also Read : உங்க whatsapp நம்பரில் ChatGPT-யை இணைத்து செயல்படுத்துவது எப்படி?
நீங்கள் அனைத்திற்கும் ஒப்புக்கொண்ட பின் அவர்கள் தங்களது வேலையை காட்ட ஆரம்பிப்பார்கள். அதாவது தாங்கள் பணத்தை உங்களுக்கு செலுத்துவதில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பணத்தை விரைவாக உங்களது வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட செயலியை டவுன்லோடு செய்து அதன் மூலம் பணப் பரிமாற்றம் எளிதாக செய்யலாம் என்றும் கூறுவார்கள். நீங்களும் நம்பி அந்த செயலியை டவுன்லோட் செய்யும்போது உங்களது தகவல்கள் அனைத்தும் அவர்களுக்கு அனுப்பப்பட்டு விடும். உங்களது பாஸ்வேர்டு, ஓடிபி உட்பட அனைத்துமே அவர்கள் வசம் சென்று விடும்.
இது போன்ற மோசடிகளில் இருந்து தற்காத்து கொள்ள ஒரே வழி தேவையற்ற லிங்குகளை கிளிக் செய்யாமல் இருப்பதும், பாதுகாப்பற்ற ஆப்ஸ்களை டவுன்லோட் செய்யாமல் இருப்பதும் முக்கியமானது. வேலை விஷயமாக யாரேனும் உங்களை தொடர்பு கொண்டால், அவர்கள் கூறும் தகவலை அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சென்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cyber crime, Scam, WhatsApp