ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

அழிவின் விளிம்பில் தேனீக்கள்…ஆபத்தில் மனிதகுலம்…

அழிவின் விளிம்பில் தேனீக்கள்…ஆபத்தில் மனிதகுலம்…

தேனீ

தேனீ

“உலக உணவு உற்பத்தியின் பிதாமகராக திகழும் தேனீக்கள் வேகமாக அழிந்து வருவதால் அவற்றை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 5 minute read
  • Last Updated :
  • Chennai, India

    “உலக உணவு உற்பத்தியின் பிதாமகராக திகழும் தேனீக்கள் வேகமாக அழிந்து வருவதால் அவற்றை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேனீக்களின் அழிவு என்பது மனித இனத்தின் அழிவுக்கு சமம் என்கிறார்கள் பூச்சியியல் ஆராய்ச்சியாளர்கள்…”

    தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது  என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அந்த அளவிற்கு தேனீக்கள் மனித வாழ்க்கை பரிணாமத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தேனீ.. உலகின் மிகவும் சுவாரஸ்யமான உயிரினம். சுறுசுறுப்புக்கு மட்டுமே நாம் தேனீயை உதாரணமாகச் சொல்கிறோம். ஆனால் தேனீக்குள் பல்வேறு ஆச்சரியங்கள் ஒளிந்திருக்கின்றன.

    தேனீ- உலகின் மிகச்சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். வனங்களின் பெருக்கத்திற்கும், காடுகள் உருவாக்கத்திற்கும் தன் போக்கில் பேருதவியை செய்து வருகின்றன தேனீக்கள். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய்,பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவுதானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம்.

    அடுத்ததாக தேனீயின் மற்றொரு ஆச்சரியம் அதன் தகவல் பரிமாற்ற முறை. செயற்கைகோள் உதவியுடன் இப்போது நாம் பயன்படுத்தும்  ஸ்கைப், வாட்ஸ் இவைகளை விட மிக வேகமானதும், துல்லியமானதும் ஆகும் தேனீயின் தகவல் transmission System.

    ஞாபகசக்திக்கு பேர் போனவையாக நாம் யானை, ஆமையைச் சொல்வோம். ஆனால் அவைகளை விட மிகவும் நேர்த்தியான மற்றும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள். இதைப் போல இன்னும் பல்வேறு ஆச்சரியங்களை சுமந்து கொண்டு பறக்கிறது இந்த சின்ன உயிர்.

    தேனீயின் ஆச்சரியங்களால் மனித குலம் எத்தனையோ பலன்களை அடைந்து வருகிறது. ஆனால் அந்த தேனீக்கள் இப்போது உலகின் வேகமாக அழிந்து வரும் உயிரினமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

    தேனீயின் ஒரு சிறகசைப்பில் சிந்தும் மகரந்த கலவை ஒரு வனத்தை உருவாக்கும் சக்தி கொண்டது. அந்த அபூர்வ உயிரின் லைஃப் ஸ்டைலே மிக ஆச்சரியமானது தான்.  உலகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் வகையிலான தேனீக்கள் இருந்தாலும், மனித இனம் அறிந்து கொண்ட தேனீக்களின் இனம் மிகச் சொற்பம் தான். அதிலும் குறிப்பாக ஐந்து வகை தேனீக்களைத் தான் நாம் மிகவும் அறிந்திருக்கின்றோம். மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ.  இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீக்களைத் தான் மனிதர்கள் வளர்ப்பார்கள்.

    மற்ற தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும். ஒரு தேனீக் குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் இருக்கும். பணித் தேனீக்கள் எல்லாமே பெண் தேனீக்கள் தான்.

    ஆண் தேனீக்களுக்கு 90 நாட்களும், பணித் தேனீக்களுக்கு 70 நாட்களும், ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள். ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை. ஆண் தேனீக்கு, ராணியோடு இணை சேர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் மட்டும்  தான் கடமை.  மற்ற எல்லாவேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு. உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது,தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும்.

    தேனீக்களின் பொறியியல் அறிவு மிகவும் அபாரமானது. மனிதனால் சிந்திக்க முடியா அளவிற்கு உள்ளன தேனீக்களின் செயல்பாடுகள். தேனீக்கள் ஒரு சென்டிமீட்டர் இடம் கூட வீணாகாத அளவிற்கு கூட்டை அறுங்கோண வடிவில் கட்டும். கூட்டடில் ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய அறுங்கோண செல். ராணித் தேனீக்கு மட்டும் சிலிண்டர் வடிவிலான செல்.

    பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான் தேனீக்களின் உணவு. அப்போதைய பசிக்கு அப்போதே சாப்பிட்டுவிடும். ஆனால் உணவு கிடைக்காத நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளத்தான் தேனை சேகரிக்கின்றன தேனீக்கள். குளிர் காலங்கள், பூ பூக்காத காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிப்பு.

    தேனீக்களின் உணவு சேகரிப்பு நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு மிகவும் அற்புதமான ஒன்று. இது தான் உலகின் ஆகச்சிறந்த பதப்படுத்தும் தொழில்நுட்பம். தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில் இருக்கும் தேன் பையில் சேகரித்துக்கொள்ளும் அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல், தேனீயின் வயிற்றில் இருக்கும் நொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும்.

    கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும். அதற்காக ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும்.  ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும். கூட்டைப் பராமரிக்கும் தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச் சேர்க்கும். பிறகு அந்தத் திரவத்தில் இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும். பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும். இப்படித்தான் தேன் சேகரிக்கப்படுகிறது.

    இந்த வேலைகள் நடைபெறும்போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும். இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான் அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும். அதை எந்த ஆண் தேனீ துரத்திப்பிடிக்கிறதோ, அதோடுதான் இணை சேரும் ராணி. இணை சேர்ந்த முடிந்தவுடன் ஆண் தேனீ இறந்துவிடும். அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!

    தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை அட்டகாசமானது.  உணவுத் தேவை ஏற்படும்போது முன்களத்தில் இருக்கும் சில ஸ்கவுட் தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக் கூட்டுக்குத் திரும்பும். கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள், தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை அறிவிக்க நடனம் ஆடும். இந்த நடனம் இரண்டு வகைப்படும்.

    ஒன்று வட்ட நடனம். மற்றொன்று வாலாட்டு நடனம். வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும். வாலாட்டு நடனம் திசையைக் குறிக்கும் செயல்.  உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் திசையில் உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் உணவு உள்ளது என்றும் அர்த்தம். வாலை வேகமாக ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம். சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம் இந்த மூன்றையும் தெரிவிக்கும் வகையில் ஸ்கவுட் தேனீக்களின் நடன அசைவுகள் இருக்கும்.

    மர்ம மம்மிப் பெண்ணின் முகம்-வெளியிட்ட ஆராய்ச்சியாளர்கள்

    இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்தவர் ஆஸ்திரிய நாட்டு அறிஞர்  கார்ல்வான் ஃப்ரிஸ். இந்த அறிய, நுட்பமான கண்டுபிடிப்பிற்காகவே அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    தேன் சேகரிக்கும் போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும்போது, விதவிதமான கூட்டணியுடன் மகரந்தச் சேர்க்கை நடைபெறும். இது தான் காடுகள், சோலைகள் மற்றும் வனங்கள் உருவாக காரணம். ஆனால் இப்படி மனித குலத்திற்கு பேருதவி செய்யும் தேனீக்கள் தற்போது உலகின் மிக வேகமாக அழியும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளது.

    கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன என்கிறது ஒரு ஆய்வு. நமக்கு உதவி செய்யும் தேனீக்களின் அழிவிற்கு காரணம் யார் தெரியுமா? நாம் தான். விவசாய நிலங்களில் நாம் பயன்படுத்தும் ரசாயன உரங்கள் தான்.

    தேன் சேகரிக்க வரும் தேனீக்கள் ரசாயன உரம் தெளிக்கப்பட்ட தாவரங்களில் உள்ள பூக்களின் அமரும் போது அதன் உடலில் பூச்சிக் கொல்லி மற்றும் ரசாயன உரத்தில் இருக்கும் நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள் ஒட்டிக் கொள்கிறது. இது தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்துவிடும். இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் எங்கெங்கோ பறந்துபோய் அலைந்து திரிந்து கொத்துக்கொத்தாக தேனீக்கள் இறந்து போகும். இதை Colony Collapse Disorder என்கிறார்கள். ராணி மட்டும் கூட்டில் இருக்கும்.

    பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் தேனீக்கள் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும்.

    தேனீக்களின் அழிவிற்கு மற்றொரு காரணம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள்.  மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர் சீட்ஸ்’ என்பார்கள்.  அதாவது, அந்தப் பயிர்கள் விதை தானியத்தை மறுஉருவாக்கம் செய்ய முடியாத  மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும். அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும்.

    அகிலத்தைக் காக்கும் அலையாத்திக் காடுகள் - ஜி20 மாநாட்டில் ஆலோசனை…

    மண்ணையும் கெடுத்து, மனிதனையும் கெடுத்து, மனித குலத்திற்கு  உதவும் தேனீ போன்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கும் ரசாயன உரங்களுக்கும் மரபணு மாற்றம்  செய்யப்பட்ட விதைகளுக்கும் நாம் குட்பை சொன்னால்  தான் நமக்கு நல்லது நடக்கும். இல்லையேல் தேனீக்கள் அழிந்து மகரந்தச் சேர்க்கை மறைந்து உணவு உற்பத்தி நடைபெறமால் பசியால் இந்த உலகமே இல்லாமல் போகும் நிலை வரலாம்.

    செய்தியாளர் : ரொசாரியோ ராய்

    Published by:Srilekha A
    First published:

    Tags: Bee