வெகுஜன மக்களும் வாங்கி சாப்பிடும் வகையில், சற்று குறைவான விலையில் விற்கப்படும் வாழைப்பழம் நம் எல்லோருக்கும் பிடித்தமானது. பொதுவாக நம் வீட்டுத் தோட்டத்தில் விளைந்த வாழைத்தார்கள் அல்லது கடைகளில் தொங்க விடப்பட்டுள்ள வாழைத்தார்கள் என்பது 2 அடி முதல் அதிகபட்சமாக 3 அடி வரை இருப்பதை நாம் பார்த்திருப்போம்.
ஆனால், அந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், கோதபள்ளி மண்டலத்தில் உள்ள வகாடிப்பா கிராமத்தில் இப்போது விளைந்துள்ள வாழைத்தார் ஒன்று, நம்மை ஆச்சரியப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த அனால சுதர்சன் என்பவரது தோட்டத்தில் அம்ரிதா என்ற வகையைச் சேர்ந்த வாழை பயிரிடப்பட்டிருந்தது. அதில் ஒரு மரத்தில் சுமார் 7 அடி உயரம் கொண்ட வாழைத்தார் அறுவடை செய்யப்பட்டுள்ளது. சுமார் 60 கிலோ எடை கொண்ட இந்த தார் குறித்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரல் ஆகி வருகிறது. ஒரே தாரில் 140 பழங்களை கொண்டுள்ள இந்த தாருக்கு உள்ளூர் மக்கள், ‘பாகுபலி தார்’ என்று பெயர் வைத்துள்ளனர்.
இதுகுறித்து சுதர்சன் கூறுகையில், “பெங்களூரில் உள்ள எனது மகள் வீட்டில் இருந்து இந்த வாழை கன்று கொண்டு வந்து வளர்த்தேன். இந்த வகை வாழைகளில் கிடைக்கும் தார்கள் பொதுவாகவே பெரியதாக இருந்தன. அதிலும் இந்த தார் எங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பொதுவாக வாழைத்தார் என்பது 3 அடி முதல் அதிகபட்சமாக 5 அடி வரை இருக்கும்.
ஆனால், தற்போது விளைந்துள்ள தார் 7 அடி உயரம் வந்துள்ளது. இதுகுறித்து அறிந்த இளைஞர்கள் பலர், இங்கு வந்து தாருடன் நின்று செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர். அருகில் உள்ள கிராம மக்கள் பலரும் ஆர்வமாக வந்து இந்த தாரை பார்ப்பதுடன், என்னென்ன குப்பை அல்லது உரம் போட்டு இந்த அளவுக்கு தாரை வளர்த்தீர்கள் என என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். இதேபோன்று இன்னும் இரண்டு வாழை மரங்கள் உள்ளன. அதிலும் கூட இதேபோல விளைச்சல் கிடைக்கும் போல தெரிகிறது’’ என்று தெரிவித்தார்.
Also read... காதலர் தினத்தில் புதுவிதமாக பிரெஞ்சு பிரைஸ் பெர்பியூம் தயாரித்த நிறுவனம்... இதன் வாசனை எப்படி இருக்கு தெரியுமா?
முன்னதாக, ஆந்திர மாநிலம், ஆத்ரேயபுரம், அச்சிலி கிராமத்தில் பூபதி ராஜு வெங்கட சத்யா என்பவர், சக்கரகேலி என்ற வகையைச் சேர்ந்த வாழை பயிட்டிருந்த போது, இதேபோன்ற பெரிய தார் அறுவடை செய்யப்பட்டது. சுமார் மூன்றரை அடி உயரத்தில், 140 பழங்களை கொண்ட தார் ஒன்றை அவர் அறுவடை செய்திருந்தார். இவர் பாரம்பரிய முறையில், இயற்கையான குப்பைகளை போட்டு வளர்த்தார். இவர் இயற்கை முறையில் வளர்ப்பதால், இவரது தோட்டத்தில் விளையும் பழங்களை மக்கள் எப்போதும் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.