மருத்துவமனைக்கு பறந்து வந்த ‘Avengers' ஹீரோக்கள்.. உற்சாகத்தில் குழந்தைகள்..

மருத்துவமனையில் ‘Avengers' ஹீரோக்கள்

கனடாவில் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பிரிவில் தோன்றிய அவென்சர்ஸ் ஹீரோக்களால் குழந்தைகள் மகிழ்ச்சியடைந்தனர்.

  • Share this:
கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் எதிர்மறையான எண்ண ஓட்டத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. பயம், பதட்டம் உள்ளிட்டைவை எல்லாம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்களிடையே எழுந்துள்ளது. கொரோனாவின் இரண்டு அலைகள் சந்தித்துள்ள நிலையில், 3வது அலையை சந்திக்க அரசும், மக்களும் தயாராகி வருகின்றனர். இப்போதைக்கு மக்களை துக்கத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வருவதற்கான அன்பும், ஆதரவும் பெருமளவில் தேவைப்படுகிறது.

விவரம் தெரிந்தவர்களே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, மன உளைச்சலுக்குள்ளாகியிருக்கும் சூழலில் குழந்தைகளின் நிலை மேலும் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. இத்தகைய நிலையை போக்கவும், அவர்களை மகிழ்ச்சியான சூழலில் வைத்திருக்கவும் பெற்றோரும், மருத்துவர்களும் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், கனடாவில் இருக்கும் மருத்துவமனை ஒன்று சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக, மேற்கொண்ட வித்தியாசமான முயற்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான அவெஞ்சர்ஸ் மற்றும் மார்வெல் கதாப்பாத்திரங்களான ‘ஸ்பைடர் மேன், தோர், அயர்ன் மேன்’ உள்ளிட்ட கதாப்பாத்திரங்களில் தூய்மைப் பணியாளர்கள் வேடமணிந்து குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளனர்.

PHOTOS : நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகளா இது ! குஷி கபூரின் போட்டோஸ்..

கனடாவில் உள்ள கிங்ஸ்டன் குழந்தைகள் நல மருத்துவமனையில் கொரோனா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்காக குழந்தைகள் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த மருத்துவமனையின் தூய்மை பணியை எலைட் விண்டோ கிளீனிங் (Elite Window Cleaning) நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஜூலை 17 ஆம் தேதி ‘சூப்பர் ஹீரோ நாள்’ கொண்டாடப்பட்ட நிலையில், அன்றைய நாளில் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சூப்பர் ஹீரோக்களைப் போல் வேடமணிந்து குழந்தைகள் முன்பு தோன்றினர்.

அயர்ன் மேன், ஸ்பைடர் மேன், தோர் ஆகிய கதாப்பாத்திரங்களைப் போல் அவர்கள் வேடமணிந்திருந்தது, அவெஞ்சர்ஸ், மார்வெல் ஹீரோக்களின் ரீ யூனியன் போல் இருந்தது. சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கும், பெற்றோர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் அவர்களின் இந்த முயற்சி மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், ’நீங்கள் சூப்பர் ஹீரோ, நீங்கள் தைரியமானவர்கள், நீங்கள் மிகவும் பலசாலிகள்’ உள்ளிட்ட வசனங்கள் அடங்கிய பதாகைகளை காண்பித்து நம்பிக்கையூட்டினர்.

PHOTOS : ''நான் அம்மாவாக போகிறேன்''- புகைப்படத்தை பகிர்ந்த பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை

தூய்மை பணியாளர்களின் வித்தியாசமான முயற்சி குறித்து அங்கு சிகிச்சை பெற்று வரும் பெற்றோர் பேசும்போது, கடுமையான மன உளைச்சலில் இருந்த எங்களுக்கு அவர்கள் செய்த இந்த பணி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர். தூய்மை பணியாளர்களின் சூப்பர் ஹீரோ புகைப்படங்கள் இணையத்திலும் பகிரப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இறுக்கமான மனநிலையில் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த அவர்கள் செய்த இந்தப் பணி விலைமதிப்பற்றது என நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Tamilmalar Natarajan
First published: