உலக அளவில் பல்வேறு இடங்களில் தொல்லியல் துறையின் ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளது. மிக பழமையான நாகரீகம் என்று எகிப்திய நாகரீகத்தை ஆய்வாளர்கள் கூறுவார்கள். அங்கு ஏராளமான தொன்மையான பொருட்களும், அதற்கான சுவடுகளும் அதிக அளவில் கிடைத்து வருகிறது. பல ஆண்டுகளாக செய்த ஆராய்ச்சியில் எகிப்தில் சூரிய கோவில் இருப்பதை கண்டுபிடித்திருந்தனர்.
இந்த வகை சூரிய கோவில்கள் பார்வோன் நியூசெர் இனியால் என்கிற எகிப்திய மன்னனின் ஆட்சியில் கட்டப்பட்டவை. எனவே இவற்றை பாரா சூரிய கோவில் என்றே அழைக்கின்றனர். மொத்தம் 6 சூரிய கோவில்கள் இருப்பதாக ஆய்வுகளின் மூலம் கூறுகின்றனர். ஆனால் இதுவரை 2 சூரிய கோவில்களை மட்டுமே கண்டிபிடித்து இருந்தனர். தற்போது மூன்றாவது சூரிய கோவிலையும் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த சூரிய கோவில் சுமார் 4500 ஆண்டு பழமை வாய்ந்தது. இந்த சூரிய கோவிலை கி.மு.25 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்தபோது பார்வோன் நியூசெர் இனியால் மன்னரால் கட்டப்பட்டது என தெரிவித்துள்ளனர். இந்த கோவிலை கண்டுபிடித்த இடத்தில் மேலும் சில ஆய்வுகளை செய்து வருகின்றனர். இதற்கடியில் வேறு சில தொல்லியல் சார்ந்த தடயங்கள் கிடைக்கலாம் என எதிர் பார்க்கின்றனர்.
"இந்த மூன்றாவது சூரிய கோவிலில் பெரிய நுழைவாயில் உள்ளது. எனவே இதற்கடுத்த இடத்தில் இன்னொரு சூரிய கோவில் இருக்க வாய்ப்புள்ளது" என இதை ஆய்வு செய்த தொல்லியல் நிபுணரான டாக்டர். மாசிமிலியானோ நஸோலோ தெரிவித்துள்ளார். இவர் எகிப்திய அகழ்வாராய்ச்சி பற்றிய துறையில் துணை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர்கள் அகழ்வாராய்ச்சி செய்த போது அங்கு சில மண்பாண்டங்கள், ஜாடிகள் கண்டெடுக்கப்பட்டது. மேலும் கிடைத்த தடயங்களை வைத்து பார்க்கும் போது இங்கு நிச்சயம் இன்னொரு சூரிய கோவில் இருக்கும் என நஸோலோ கூறுகிறார். இவற்றை தனது பேஸ்புக் பக்கத்தில் சில புகைப்படங்களுடன் சேர்த்து பதிவிட்டுள்ளார்.
கடைசியாக 1898ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட 2வது சூரிய கோவிலானது நியூசெர்ரா என்கிற இடத்தில் கண்டுபிடித்து உள்ளனர். ஆரம்பத்தில் மிக சிறிய அளவில் மட்டுமே அங்கு அகழ்வாராய்ச்சி செய்து வந்தனர். அங்கு சின்ன சின்ன செங்கற்கள் போன்ற அமைப்பு இருப்பதை கண்டதும் முழுவதுமாக அகழ்வாராய்ச்சி செய்ய தொடங்கினர். இதன் மூலம் பெரிய வடிவிலான இரண்டாவது சூரிய கோவிலை கண்டறிந்தனர்.
Also read... மளிகை மற்றும் உணவு பொருட்களை வாங்க இவ்வளவு நீண்ட பயணமா? வைரலாகும் ஒரு பெண்ணின் கதை!
ஆனால், இரண்டாவதாக கண்டுபிடித்த சூரிய கோவிலுக்கும் தற்போது கண்டுபிடித்துள்ள இந்த மூன்றாவது சூரிய கோவிலுக்கும் மிக பெரிய வித்தியாசம் உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது கண்டுபிடித்துள்ள சூரிய கோவிலின் அமைப்பு முழுவதுமாக மாறுபட்டுள்ளது. எனவே மீதமுள்ள 3 சூரிய கோவில்களும் வெவ்வேறு வடிவ அமைப்புகளை கொண்டிருக்கலாம் என நஸோலோ கூறுகிறார்.
தொல்லியல் துறையின் வளர்ச்சி தற்போதுள்ள தொழில்நுட்பத்தோடு பெரிய அளவில் வளர்ந்துள்ளது. எனவே இனி வரும் காலங்களில் பல்வேறு தொல்லியல் நிகழ்வுகள் எகிப்திய பகுதிகளில் நடப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.