ஆந்திரப் பிரதேசத்தில் பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் போகி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என்று கொண்டாப்படுவது போலவே, ஆந்திராவில் போகி, சங்கராந்தி மற்றும் கனுமா கொண்டாடப்படுகிறது. இந்த மூன்று நாள் பண்டிகைக்காக வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். பொங்கல் அனைவராலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டாலும், மிகப்பெரிய பொங்கல் விருந்தை அளித்த ஒரு குடும்பம் இணைய சென்சேஷனாக மாறியுள்ளது.
மருமகன் அல்லது வருங்கால மருமகனை வரவேற்று பலமாக உபசரிப்பதும், இந்திய குடும்பங்களின் பழக்கமாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு முறை மணமகன் வீட்டுக்கு வரும் போதும், கவனிப்பு பலமாக இருக்கும். இப்படிச் செய்வது கட்டாயம் இல்லையென்றாலும், நாடு முழுவதும் குடும்பங்கள், விருந்துகள் தயாரித்து, பரிசுகள் வழங்குவதை பழக்கமாகவே கொண்டுள்ளது. பண்டிகை மற்றும் வருங்கால மருமகன் வருகை இரண்டுமே இணைந்து, தங்களின் வருங்கால மருமகனுக்கு பிரமாண்டமான விருந்து வைத்துள்ளது. மேற்கு கோதாவரி, நர்சாபுரம் என்ற ஊரில் வசிக்கும் ஒரு குடும்பம் தங்களின் வருங்கால மருமகனுக்கு 365 வகையான உணவுகளை விருந்தளித்து உபசரித்தது.
365 உணவு வகைகளைக் கொண்ட இந்த விருந்து அரச விருந்து என்று கூறப்படுகிறது. இந்த பிரம்மாண்டமான விருந்தின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த ஸ்பெஷல் விருந்து பற்றிய செய்தியை ANI வெளியிட்டுள்ளது. "எங்கள் வருங்கால மருமகன் மீது நாங்கள் கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்தும் வகையில் அவரை மகிழ்விக்க வித்தியாசமாக ஏதேனும் செய்ய நினைத்தோம். வருடத்தில் இருக்கும் 365 நாட்களைக் கருத்தில் கொண்டு, 365 வகையான உணவுகளை ஏற்பாடு செய்தோம்" என்று குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Also Read : ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு வலிப்பு.. சரியான நேரத்தில் காப்பாற்றிய பெண் பயணி - வைரல் வீடியோ
பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, மணமகன் சாய் கிருஷ்ணா மற்றும் மணமகள் குந்தவியின் திருமணம் நடக்க இருக்கிறது. பொங்கல் கொண்டாட்டத்திற்கு வருங்கால மனைவி குந்தவியின் வீட்டுக்கு வருகை தந்துள்ளார் சாய் கிருஷ்ணா. அவருக்குத் தான் 365 உணவுகளை சமைத்து விருந்தளித்துள்ளனர். இவர்கள் இருவருமே தங்க வியாபாரம் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விருந்து கொடுக்கலாம் என்ற யோசனை, குந்தவியின் தாத்தா பாட்டிக்குத் தான் தோன்றியது. மணமகள் குந்தவியின் தாத்தா அச்சந்த கோவிந்தன் மற்றும் பாட்டி நாகமணி ஆகியோர் திருமணத்திற்கு முன் சாய்கிருஷ்ணாவிற்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் மாப்பிள்ளைக்கு மட்டுமல்ல, மாப்பிளையின் குடும்பத்தினருக்கும் விருந்து ஏற்பாடு செய்திருந்தனர். இரண்டு குடும்பங்களின் நெருங்கிய உறவினர்கள் அழைக்கப்பட்டு திருமணத்திற்கு முன்பே பிரமாண்டமான வரவேற்பை குந்தவியின் குடும்பத்தினர் வழங்கினர். இந்த பிரமாண்ட விருந்தின் மெனுவில் என்னென்ன உணவுகள் இருந்திருக்கும் என்று ஆச்சரியப்படுகிறீர்களா?
Also Read : செல்ல நாயின் பிறந்தநாளை கொண்டாட 11 லட்சம் செலவழித்த இளம்பெண்... நடவடிக்கை எடுத்த போலீஸ்!
விருந்தில் 30 வகையான கறிகள், சாதம், பாரம்பரியமான கோதாவரி இனிப்புகள், புளிசாதம், பிரியாணி, பிஸ்கட், பழங்கள், கேக்குகள், சூடான மற்றும் குளிர் பானங்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இந்த இரண்டு குடும்பத்தினருமே, கோதாவரி மாவட்டத்தில் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.