தொற்றுநோய்க்கு மத்தியில் தனிமையில் இருந்து விடுபட அரவணைக்கும் இலவச ஆட்டுப்பண்ணையை திறந்த ஜெர்மன் குடும்பம்!

இலவச ஆட்டுப்பண்ணை

தனிமையான வாழ்க்கையில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளே ஒரு ஆறுதலாகவும், அரவணைக்கும் ஒரு தோழனாகவும் உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கடந்த ஒரு வருடமாக கொரோனா பெருந்தொற்று மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை சின்னாபின்னமாக்கி உள்ளது. மேலும், சமூக விலகல் மற்றும் தனிமை காரணமாக அதீத மனஅழுத்தத்தை சந்தித்து வருகின்றனர். இது போன்ற தனிமையான வாழ்க்கையில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளே ஒரு ஆறுதலாகவும், அரவணைக்கும் ஒரு தோழனாகவும் உள்ளது. 5 அறிவுள்ள ஜீவன்களாக இருந்தாலும் அவற்றின் அரவணைப்பு சக நண்பர்கள் கொடுக்கும் பாசத்தையும் தாண்டி மதிப்புமிக்கதாக உள்ளது.

அந்த வகையில், ஜெர்மன் நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மனிதத் தொடர்பை இழந்து தனிமையில் சிக்கியுள்ள நபர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் ஒரு இலவச அரவணைக்கும் ஆட்டுப் பண்ணையை ஒரு குடும்பம் திறந்துள்ளது. இது குறித்து பண்ணையின் உரிமையாளர் லெக்சா வோஸ் கூறியதாவது, "எங்களிடம் அற்புதமான ஆடுகள் உள்ளன. பார்வையாளர்கள் தங்களை சந்திப்பதை பண்ணை ஆடுகள் மிகவும் விரும்புகிறார்கள்" என்று கூறியுள்ளார். மேற்கு ஜெர்மனியில் ஹட்டிங்கனுக்கு அருகிலுள்ள ஒரு பண்ணையில் கல்வித் திட்டத்தை நடத்தி வரும் லெக்சா வோஸ், மக்களை விலங்குகளுடன் நெருங்கி வர எப்போதும் ஊக்குவித்து வருகிறார்.

மேலும் அவர் தெரிவித்தாவது, "கவனிக்கப்படாத ஆடுகளை மக்கள் பார்வையிட நான் அனுமதிக்கிறேன். இயற்கையில் அவர்களுடன் ஒரு அற்புதமான நேரத்தை நீங்கள் செலவழிக்கலாம். முகக்கவசங்கள் மற்றும் சமூக விலகல் போன்ற எந்த ஒரு கட்டுப்பாடுகளில் இருந்தும் விலகி இருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் இந்த பண்ணைக்கு வரவிரும்பும் பார்வையாளர்கள் ஒரு சந்திப்பிற்கு முன்பதிவு செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் விரும்பிய ஆடுகளுக்கு எவ்வளவு அருகில் வேண்டுமானாலும் செல்லலாம் என்று கூறியுள்ளார். பார்வையிடும் செஷன் இலவசமாக இருந்தாலும் பண்ணைக்கு வரும் பார்வையாளர்கள் விரும்பினால் நன்கொடை வழங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

பண்ணைக்கு வந்த ஒரு பார்வையாளர் தெரேஸ் பிஃபெர், விலங்குகளுடன் ஏற்படும் ஒரு சந்திப்பை மிகவும் விரும்புவதாக தெரிவித்துள்ளார். தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்ட அவர், "இந்த நேரத்தில் நாம் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்கிறோம். பெருந்தொற்று காரணமாக எங்கள் நாட்டில் எப்போதும் சமூக தொலைவு கடைபிடிக்கப்படுகிறது. உண்மையைச் சொல்வதானால், நான் எப்போதும் செம்மறி மேய்ச்சல் நிலங்களில் நடந்து செல்வேன். அங்கிருக்கும் ஆடுகள் என்னைவிட்டு ஓடிவிடுகின்றன. ஆனால் இந்த பண்ணையில் அனைத்தும் வித்தியாசமாக உள்ளது. இந்த அரவணைப்பு மிகவும் நல்ல அனுபவத்தை கொடுக்கிறது" என்று கூறியுள்ளார்.

Also read... கர்நாடகா வனப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளை துரத்திய யானை - வைரலாகும் வீடியோ!

கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று, தற்போது ஜெர்மனியில் 2,578,835 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி ஒரே நாளில் 14,356 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து தொற்று வீதமும் ஜெர்மனியில் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஜெர்மனியில் கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. உலகளவில் தற்போதுவரை கொரோனவால் 120,493,042 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் 2,666,682 ஆகும். மேலும், 97,037,800 பேர் தற்போதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: