வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் முதன்மையாக விலகுவது செல்போன்கள். இளைய தலைமுறையினரிடையே இந்த செல்போனின் ஆதிக்கம் அதிகம். தற்போது ஏதேனும் ஒரு மூலைமுடுக்கில் நடக்கும் பல வேடிக்கையான விஷயங்கள் முதல் பலதரப்பட்ட வீடியோக்கள் உலகம் முழுவதும் வைரலாவதற்கு செல்போன்கள் ஒரு காரணமாகின்றன. அதிலும் செல்ஃபி மக்களிடையே மிகவும் பிரபலமானவை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்ஃபி மோகம் யாரையும் விடவில்லை. ஆனால் இந்த செல்ஃபி மோகத்தால் பலரின் வாழ்க்கை பறிபோன விஷயங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம்.
இருப்பினும் மக்கள் இந்த செல்ஃபி மோகத்தில் இருந்து வெளியே வந்தபாடில்லை. அந்த வகையில் இங்கு ஒரு பெண் செல்ஃபி வீடியோ எடுக்க முயன்றபோது, அவருக்கு நேர்ந்த ஒரு விபரீதம் தற்போது இணையத்தில் பெரிதும் பேசப்படுகிறது. ஒரு பெண் செல்ஃபி வீடியோ எடுக்க முயன்றபோது அருகில் இருந்த ஆடு கோபத்தில் அவரைத் தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோவில், ஒரு கிராமத்தில் இருக்கும் சாலை போல தோற்றமளிக்கும் இடத்திற்கு நடுவில் அந்த பெண் செல்ஃபி வீடியோ எடுப்பதைக் காணலாம்.
மேலும் அவர் நிற்கும் இடத்தில் இருந்து சிறுது தூரத்தில் ஆடு ஒன்று இருப்பதையும் காணலாம். அந்த ஆடு ஒரு நீண்ட கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. மேலும், செல்ஃபி எடுத்துக்கொண்டிருக்கும் பெண்ணிற்கு மிக அருகில் வந்தது. ஆடு மிக அருகில் வருவதைக் கண்ட பெண் தனது முகபாவனைகளை மாற்றிக் கொண்டே வீடியோவை எடுத்துக்கொண்டிருந்தார். அடுத்து வரும் விளைவுகளை பற்றி தெரியாமல் அந்த பெண் செல்ஃபி வீடியோவை எடுத்துக்கொண்டிருக்கும் சமயத்தில், ஆடு முன்னும் பின்னுமாக நகர்வதைக் காணலாம். திடீரென்று ஆடு இரண்டு அடி பின்னால் எடுத்து வைத்து பிறகு அந்த பெண்ணை நோக்கி வேகமாக முன்னேறி அதன் தலையால் அந்த பெண்ணை தாக்கியது.
அந்த வீடியோ சமீபத்தில் ‘Thewildcapture’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தால் “என்ன தவறு நடக்கக்கூடும்?” என்ற கேப்ஷனுடன் பதிவிடப்பட்டது. இந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகிய உடனேயே, நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் அடுத்த முறை அவர் ஒரு மிருகத்துடன் செல்ஃபி வீடியோ எடுக்க முயற்சிக்கும்போது ஹெல்மெட் அணிந்து எடுக்க வேண்டும் என்று சிலர் நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளனர்.
சிலரோ, அந்தப் பெண்ணுக்கு கடுமையான காயம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கவலை தெரிவித்தனர். இந்த செல்ஃபி வீடியோவை பார்ப்பதற்கு ஒரு புறம் நகைச்சுவையாக இருந்தாலும், அந்த பெண்ணிற்கு காட்டாயம் பலத்த காயம் ஏற்பட்டிருக்கக்கூடும். சமீபகாலமாக செல்லப்பிராணிகளுடன் எடுக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருவது அனைவரும் அறிந்ததே. சிலர் அதிக லைக்ஸ் வேண்டும் என்பதற்காக விலங்குகளை தொந்தரவு செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால் இதுபோன்ற விபரீதங்களையும் அவர்கள் எதிர்கொண்டு தான் வருகின்றனர்.