'கோவிட் நோயாளிகளுக்கு இலவசம்' பெண் ஆட்டோ ஓட்டுநரின் மனிதநேயம்..

மாதிரிப் படம்

மேற்கு வங்காளத்தில் மின்சார ஆட்டோவை இயக்கும் பெண் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையை வழங்கி வருகிறார்.

 • Share this:
  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சக்கணக்கானோர் மருத்துவமனைகளிலேயே மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு விதிமுறைகள் பல இடங்களில் நடைமுறையில் இருப்பதால், மருத்துவமனைகளுக்குக் கூட செல்ல முடியாத நிலையில் மக்கள் பரிதவித்து வருகின்றனர். ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் இந்த சூழலில், ஒரு சிலர் தாங்கள் இயக்கும் வாடகை கார்கள், ஆட்டோக்கள் மூலம் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றனர்.

  அந்தவகையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு 24 மணி நேரமும் தன்னுடைய இ-ரிக்ஷா மூலம் இலவச சேவை வழங்கி வருகிறார். சிலுகிரி நகரத்தைச் சேர்ந்த மன்முன் சர்கார் வடக்கு வங்காளத்தின் முதல் பெண் இ-ரிக்ஷா ஓட்டுநராக அறியப்படுகிறார். கொரோனா காலத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் இயன்ற உதவியாக இலவசமாக ஆட்டோ சேவை வழங்கி வருகிறார். இதுகுறித்து பேசிய அவர், கொரோனா காலத்தில் மக்கள் மிகவும் அவதிப்படுவதை பார்க்க முடியவில்லை எனத் தெரிவித்தார்.

  Also Read :வண்டலூரில் கொரோனா பாதித்த மற்றொரு சிங்கம் உயிரிழப்பு

  "பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் சேவையை நம்பியிருக்க வேண்டிய சூழல் இருந்தபோது, அவை சரியான நேரத்தில் அவர்களுக்கு கிடைக்கவில்லை. மேலும், சில ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடம் அதிக பணத்தை வசூல் செய்தனர். இது எனக்கு மிகவும் மன வேதனையை ஏற்படுத்தியது. இதனால், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை இலவசமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்வது என முடிவெடுத்தேன். இதுவரை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக சேவை வழங்கியுள்ளேன்" எனத் தெரிவித்தார்.

  மேலும், கோவிட் நோயாளிகளின் வீடுகள், மருத்துவமனைகள், காவல் நிலையம், மயானம் உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினியையும் தெளிக்கிறார். மருத்துவமனைகளுக்கு செல்பவர்களுக்கு மட்டுமில்லாமல், தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்பவர்களுக்கும் இலவசமாக ஆட்டோ இயக்குகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கொரோனா நோயாளிகளை கையாள்வதற்கு பலரும் பயப்படும் நிலையில், உங்களுக்கு அந்த பயம் இல்லையா? என்ற கேள்விக்கு பதில் அளித்த சர்கார், நான் இறந்த பிறகும், என்னை நினைப்பதற்கு ஏதாவது இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சேவை செய்து வருகிறேன் எனக் கூறினார். தன்னலமின்றி அவர் செய்து வரும் சேவையை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர். அவர் உதவிய நோயாளியின் உறவினர் ஒருவர் பேசும்போது, சர்க்காரின் சேவை மகத்தானது. சரியான நேரத்தில் அவர் எங்களுக்கு உதவி செய்துள்ளார். எங்களால் எப்போதும் மறக்க முடியாது எனத் தெரிவித்தார்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: