வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது நட்பு. நீ யாரென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? உன் நண்பனை அடையாளம் காட்டு என்பார்கள். வள்ளுவர் கூட தனது திருக்குறளில் கூட “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு” என குறிப்பிடும் அளவிற்கு புனிதமான பந்தம் நட்பு. பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பின் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிப்பது நண்பர்கள் மட்டும் தான். வீட்டுக்கு எல்லை உண்டு, ஊருக்கு எல்லை உண்டு, நாட்டுக்கு எல்லை உண்டு, ஆனால் நட்புக்கு எல்லையே கிடையாது.
எந்த வயதிலும் நட்பு அழகாக இருக்கும். ஆனால் இந்த அழகான நட்பு, காலத்தின் பல சோதனைகளையும் கடந்து பல ஆண்டுகளாக நீடிக்கும் போது மேலும் வலுவானதாகவும், அழகானதாகவும் மாறும். இந்த வகையான அற்புதமான நட்பைக் காட்டும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் மக்களின் இதயத்தைக் கொள்ளையடித்து வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் போது உங்களுக்கும் உதட்டோரம் லேசான புன்னகையுடன் பழைய நண்பர்கள் பற்றிய நினைவு நிச்சயம் தோன்றும்.
‘குட்நியூஸ் கரஸ்பான்டண்ட்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “முதியவர் ஒருவர் தனது வீட்டிற்குள் நுழைகிறார். அவர் மாடிப்படிகளில் ஏறும் போது அவருடைய தோழி ஒருவர் ஓடி வந்து ஆரத்தழுவி வாழ்த்து கூறுகிறார். மறுபுறம் திரும்பி பார்த்தவருக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் ஏனென்றால் பள்ளி காலம் தொட்டு அவருடன் பயணித்த நண்பர்கள் பலரும் பிறந்தநாள் கேக்குடன் அவருக்காக காத்திருக்கின்றனர். இதனை பார்த்து மகிழ்ச்சியான அவர் ஆனந்தத்துடன் நண்பர் ஒருவரை இறுக்கமாக அணைத்துக் கொள்கிறார். சுற்றி நிற்கும் பிற நண்பர்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து கூறுகின்றனர்”
ஒரு மனிதனுக்கு 70 வயதில் இதை விட இனிமையான தருணம் ஏதாவது இருக்க முடியுமா? இதுகுறித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள அவரது மகன், எனது தந்தையின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருடன் 60 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தவர்கள், அவர்களது குடும்பத்துடன் வந்து சர்ப்ரைஸ் கொடுத்தனர். எனது தந்தை ஆனந்த கண்ணீர் வடித்துவிட்டார். இதனை கண்டு ரசிக்கும் மற்றும் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியானது” என குறிப்பிட்டுள்ளார்.
Also Read : மது போதையில் திருமணம் செய்து கொண்ட 2 ஆண்கள்
நட்பின் ஆழத்தை எடுத்துரைக்கும் இந்த வீடியோ பதிவிட்ட 12 மணி நேரத்திலேயே 15 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகள் மற்றும் வியூஸ்களை குவித்து வருகிறது. உணர்ச்சிப்பூர்வமான இந்த வீடியோவை பார்க்கும் இணையதளவாசிகளில் ஒருவர் "இதை லைக் செய்யுங்கள். நண்பர்களை விட எதுவும் இல்லை" என கருத்து பதிவிட்டுள்ளார். மற்றொருவர் "இது அழகாக இருக்கிறது," என்றும், மேலும் பலர் முதியவரின் 70வது பிறந்தநாளுக்கு தங்களது வாழ்த்துக்களையும் பதிவிட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.