வெளிநாடுகளில் சிவப்பு விளக்கை லைட்டாக கடந்தாலே ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் சின்ன சின்ன விதிமீறல்களுக்கு கூட பெருந்தொகையை அபராதமாக செலுத்த வேண்டியுள்ளதால் அங்குள்ள மக்கள் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றி வருகின்றனர். ஆனால் இந்தியாவில் போக்குவரத்து விதி மீறல் என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.
இந்தியாவில் தற்போது தான் நடப்பு ஆண்டிற்குள் விபத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கையை 50 சதவீதமாக குறைக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து செயலாற்றி வருகிறது. இதற்காக ஹெல்மெட், சீட்பெல்ட் அணிவதன் அவசியம், சிக்னல்களை மதிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரின் வாகன எண்ணை படம் பிடிக்க கூடிய வகையிலான நவீன கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆனால் மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் பல போக்குவரத்து விதிமீறல்களை போலீசாரால் கண்டறிவது கடினம். எனவே இப்போது காவல்துறையினர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வர ஆரம்பித்துள்ளனர். போக்குவரத்து விதிமீறல்கள், விபத்துக்கள், டிராபிக் தொடர்பாக ட்விட்டர், பேஸ்புக் போன்ற சோசியல் மீடியா பக்கங்களில் மக்கள் பதிவிடும் வீடியோக்களுக்கு உடனுக்குடன் பதிலளிப்பதோடு, நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.
Also Read : 630 அடி ஆழத்தில் பூமிக்கு கீழே மறைந்து இருந்த காடு!
தற்போது மும்பையில் போக்குவரத்து விதிகளை அப்பட்டமாக அலட்சியப்படுத்தியதற்கான முன்னுதாரண வீடியோ சோசியல் மீடியாவில் வைரலான நிலையில், அதற்கு மும்பை டிராபிக் போலீஸ் அதிரடி பதிலடி கொடுத்துள்ளனர். ராமன்தீப் சிங் ஹோரா என்பவர்ட் ட்விட்டரில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஒரு ஸ்கூட்டரில் 6 ஆண்கள் பயணிக்கும் அதிர்ச்சி அளிக்க கூடிய காட்சிகள் பதிவாகியுள்ளது. அதில் ஒரு நபர் இடமில்லாததால் கடைசி நபரின் தோள் மீது அமர்ந்து பயணிக்கிறார். இந்த வீடியோ மும்பையின் டிராபிக் நிறைந்த அந்தேரியின் மேற்கில் அமைந்துள்ள ஸ்டார் பஜார் அருகே எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் உடனடியாக தீயாய் பரவியதோடு, போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக கடுமையான விவாதத்தையும் கிளப்பியது. 72 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவை காட்சிப்படுத்திய நபர், உடனடியாக இதனை மும்பை போக்குவரத்து காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திற்கு டேக் செய்துள்ளார்.
Also Read : கடைசி வரை குழப்பும் வேற லெவல் ஆப்டிகல் இல்யூஷன் வீடியோ!
இதற்கு மும்பை போக்குவரத்து போலீசார், "இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி டிஎன் நகர் போக்குவரத்து பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என பதிலளித்துள்ளனர். இந்த பதிவிற்கு காவல்துறையிடம் இருந்து உடனடி பதில் கிடைத்ததை அடுத்து நெட்டிசன்கள் பலரும் மும்பையின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்துவது, வீலிங் செய்வது, ஹெல்மேட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது போன்ற பல புகார்களை பகிர்ந்துள்ளனர்.
இதேபோல் இந்தியாவில் சென்னை, கேரளா, பெங்களூரு, ஐதராபாத் போன்ற பல பகுதிகளிலும் அன்றாடம் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக சோசியல் மீடியாவில் பகிரப்படும் வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.