‘ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணலாம்’ என்ற பொன்மொழிக்கு ஏற்ப நம்மிடம் கை நீட்டி நிற்பவர்களுக்கு நம்மால் முடிந்த ஒரு சில ரூபாய்களை தானமாக வழங்குகிறோம். நல்லெண்ணம் படைத்தவர்கள் கொடுக்கும் அந்த தொகையை சிறுக, சிறுக சேர்த்து வரும் பிச்சைக்காரர்களுக்கு, தன் தேவை போக மீதியுள்ள தொகையை என்ன செய்வது என்று தெரியாது போல. மிகுதியான பணம் சேர்ந்தாலும் வசதியான வாழ்க்கையை அவர்கள் தேடுவதில்லை. எப்போதும் போலவே பிச்சை எடுத்து, எளிய வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கின்றனர். நாட்டில் பல பிச்சைக்காரர்களின் இறப்புக்கு பிறகு, அவர்களது உடைமைகளில் இருந்து பெரும் தொகை மீட்கப்படும் நிகழ்வுகள் அவ்வபோது நிகழுகின்றன.
அப்படியொரு சம்பவம், மேற்கு வங்க மாநிலத்தின் இஸ்லாம்பூர் லோக்நாத் காலனியில் நடைபெற்றிருக்கிறது. இங்குள்ள கனிகா மஹந்தா என்ற பெண் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த இவர், 40 வயதிலேயே இயற்கை எய்தியுள்ளார். கனிகாவின் தாயார் மற்றும் அவரது உடன்பிறந்தவர்கள் என அனைவருமே பிச்சை எடுத்து தான் வாழ்ந்து வருகின்றனர்.
காத்திருந்த அதிர்ச்சி
கனிகா இறந்த பிறகு, அவர் வாழ்ந்த இடத்தில் உறவினர்கள் சோதனையிட்டனர். அப்போது இரும்பு பெட்டி மற்றும் முடிச்சு பைகள் நிறைய சில்லறை காசுகள், 10, 20 என்ற மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் நிறைந்திருந்தன. அவ்வளவு பெரிய தொகையை பார்த்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம் என்று கனிகா வீட்டுக்கு அருகில் வசிக்கும் நிகில் தாஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு, கனிகாவின் குடும்பத்தினர், அக்கம், பக்கத்தினர் என எல்லோருமாக சேர்ந்து பணத்தை எண்ண தொடங்கினர். இதில், ரூ.1.07 லட்சம் சேர்ந்தது. அங்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதால் பணத்தை எண்ணும் பணியை நிறுத்தி, அறை பூட்டப்பட்டது. பிறகு தொடர்ந்து எண்ணுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
Also Read : சிசிடிவியல் வசமாக சிக்கிய சேட்டை பைக்கர் - ஆக்ஷனில் இறங்கிய காவல்துறை
யாருக்கும் பயனில்லாத பணம்
கனிகாவிடம் இவ்வளவு பணம் இருப்பது குறித்து யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இது தெரிந்திருந்தால், நோய் வாய்ப்பட்டிருக்கும் தங்கள் தாயாருக்கும், கனிகாவிற்கும் செலவு செய்திருப்போம் என்று அவரது சகோதரர் பப்லு தெரிவித்தார். தற்போதுள்ள பணத்தில் ஒரு பகுதியை கனிகாவின் இறுதிச் சடங்கு நிகழ்வுக்கு செலவு செய்து விட்டு, எஞ்சியுள்ள பணத்தை அவரது தாயார் மற்றும் சகோதரிகளின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய முடிவு செய்துள்ளனர்.
Also Read : சைக்கிளில் 100 வகையான தோசை விற்பனை... வைரலாகும் ‘தோசை மேன்’ வீடியோ.!
ரூ.8.77 லட்சம் சேர்த்திருந்த மற்றொரு பிச்சைக்காரர்
கடந்த 2019 ஆம் ஆண்டில் மும்பையில் பிர்ஜு சந்திர ஆசாத் என்ற பிச்சைக்காரர் சாலை விபத்தில் இறந்தார். காவல் துறையினர் நடத்திய சோதனையில் அவரிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் அட்டை, வங்கி அக்கவுண்ட் புக் போன்ற ஆவணங்கள் மீட்கப்பட்டன. வீட்டில் மீட்கப்பட்ட ரொக்கத் தொகையான ரூ.1.5 லட்சம் சேர்த்து, அவரிடம் மொத்தம் ரூ.8.77 லட்சம் இருந்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.