ஆன்லைன் கேம் விளையாட நண்பனிடம் ரூ.75,000 கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி கொடுக்காத காரணத்தால் 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குழந்தைகள், சிறியவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஸ்மார்ட் போனில் மூழ்கி ஆன்லைனே கதி என்று கிடக்கின்றனர். இதில் ஆன்லைனில் விளையாடப்படும் கேம்களுக்கு பலரும் அடிமையாகி தொடர்ச்சியாக பணம் மற்றும் நேரத்தை வீணாக செலவழிக்கின்றனர். இந்நிலையில் சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூரில் 9-ம் வகுப்பு படித்து வந்த ஒரு மாணவன், ஆன்லைன் கேமிங்கிற்கு அடிமையாக இருந்துள்ளான்.
அதுவும் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பல மாதங்கள் லாக்டவுன் நீடித்ததால், 24 மணி நேரமும் ஆன்லைனில் இருந்து கொண்டு கேம்களை விளையாடி வந்துள்ளான். பொழுதுக்கும் ஆன்லைனில் இருப்பதை பார்த்து தாய் கேள்வி கேட்கும்போதெல்லாம், ஆன்லைன் கிளாஸில் பங்கேற்பதாக பொய் சொல்லி வந்துள்ளான்.
ஒரு சில கேம்களில் கூடுதல் அம்சங்களை (additional features) பெற பணம் கட்ட வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட கேம் ஒன்றிற்கு அடிமையாகிய அந்த சிறுவன், அந்த கேமில் அடுத்தடுத்த கட்டத்திற்கு சென்று வெற்றி பெற துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்ட கேமில் இருந்த கூடுதல் அம்சங்களை பணம் கட்டி வாங்க முடிவு செய்துள்ளான்.
எனவே தன் நண்பன் குன்டேவிடம் இதற்காக ரூ.75,000 வரை கடன் பெற்று குறிப்பிட்ட ஆன்லைன் கேமை தொடர்ந்து விளையாடி வந்துள்ளான். ஆயிரக்கணக்கான ருபாய் பணத்தை கடனாக கொடுத்த குன்டே ஜனவரி துவக்கத்தில் இருந்தே சிறுவனிடம் தன்னிடம் வாங்கிய காசை திருப்பி தர கேட்டுள்ளான். ஆனால் சிறுவனோ இதோ தருகிறேன், அதோ தருகிறேன் என்று கூறி நாட்களை கடத்தி வந்துள்ளான். ஒரு கட்டத்தில் சிறுவன் வாங்கிய பணத்தை திருப்பி தரும் முடிவில் இல்லை என்று உணர்ந்தான் கடன் கொடுத்த நண்பன் குன்டே. இதனால் கோவத்தின் உச்சிக்கே சென்று விட்டான்.
Also read... இன்ஸ்டாகிராம் ஃபில்டர்ஸ் போல தோற்றமளிக்க 30,000 டாலர்கள் செலவில் சிகிச்சை செய்துக்கொண்ட இங்கிலாந்து நபர்!
இதனை அடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன் மார்ச் 10 அன்று சிறுவனை மது அருந்த வருமாறு அழைத்த குன்டே, தனி இடம் ஒன்றில் வைத்து சிறுவனிடம் தனக்கு தர வேண்டிய பணத்தை பற்றி மீண்டும் கேட்டுள்ளான். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றியது. சிறுவன் பணத்தை தராமல் ஏமாற்றி வருவதாக ஏற்கனவே மிகுந்த கோவத்தில் இருந்த குன்டே, மறைத்து வைத்திருந்த பிளேடை எடுத்து சிறுவனின் தொண்டையை அறுத்து கொலை செய்துள்ளான்.
பின் கொலை சம்பவத்தை மறைக்க ஒரு கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளான் குன்டே. சிறுவனின் தாய்க்கு போன் செய்து சிறுவனை கடத்தி வைத்துள்ளதாகவும். ரூ.5 லட்சம் தந்தால் விட்டுவிடுவதாக கூறி மிரட்டினான். ஆனால் சிறுவனின் தாய் போலீசிற்கு சென்று விட்டார். பின் சி.சி.டி.வி காட்சிகளின் உதவியால் குற்றவாளியை போலீஸார் கண்டுபிடித்து கைது செய்தனர். விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட குன்டே தான் சிறுவனை கொலை செய்து விட்டதாக கூறி குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளான்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.