திருவாரூர் அரசு பள்ளியில் வகுப்பறை கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடைபெறும் அவலம் தினந்தோறும் அரங்கேறி வருகிறது.
திருவாரூர் அருகே உள்ள இலவங்கார்குடி ஊராட்சியை சேர்ந்த பவித்திர மாணிக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் எல்.கே. ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை என மொத்தம் 430 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.குறிப்பாக காட்டூர்,பவித்திரமாணிக்கம், இலவங்கார்குடி,பெரும்புகலூர், தொழுவனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏழை எளிய குடுபங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் மொத்தமாக ஏழு வகுப்பறை கட்டிடங்கள் உள்ளன. ஒரு வகுப்பறைக்கு 40 பேர் மட்டுமே அமர்ந்து படிக்க இடவசதி உள்ள நிலையில்,ஒவ்வொரு வகுப்பறையிலும் 50க்கும் மேற்பட்ட மாணவர்களை அமர வைத்து பாடங்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பறை கட்டிடம் இன்றி மரத்தடியில் பாடம் நடத்தப்படுகிறது.மழை வரும் நேரங்களில் அருகாமையில் உள்ள காளியம்மன் கோவிலில் மாணவர்கள் அமர வைக்கப்படுகின்றனர்.சிறிய மழை என்றால் பள்ளி வராண்டாவில் இந்த மாணவ மாணவிகள் அமர வைக்கப்படுகின்றனர்.
மேலும் பள்ளியில் உள்ள 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சத்துணவு கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. கட்டிடத்தின் மேற்பகுதி சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. தளவாடப் பொருட்களை வைப்பதற்காக அமைக்கப்பட்ட லாப்டர் சிலாப் எந்த நேரத்திலும் உடைந்து விழும் அபாயத்தில் உள்ளது. மழைக்காலங்களில் மேற்கூரையில் மழை நீர் கசிந்து சத்துணவு கூட்டத்திற்குள் வருவதால் சமைக்க முடியாத சூழல் நிலவுகிறது.
Read More : கிணற்றுக்குள் குதித்த பெண்ணை பத்திரமாக மீட்ட காவலர்களுக்கு பாராட்டு - வைரல் வீடியோ
இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சத்துணவு சாப்பிடுவதால் அவர்கள் அமர்ந்து சாப்பிட இடம் இல்லாமல் மண் தரையில் அமர்ந்து உணவு உண்ண வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.எனவே சத்துணவு கூடத்தை உடனடியாக கல்வித்துறை அதிகாரிகள் பார்வையிட வேண்டும் என்றும் மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இது குறித்து பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் என்பது குறைந்து வரும் நிலையில் இந்த பள்ளியில் 430 மாணவர்கள் பயின்று வருவது என்பது பாராட்டுக்குரிய செய்தியாக உள்ளது. எனவே அவர்களுக்கு உரிய வகுப்பறை கட்டிடம் கட்டித் தர வேண்டும் எனவும்,பள்ளி மாணவ மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை வென்று வரும் நிலையில் இந்த பள்ளியில் விளையாட்டு மைதானம் இல்லை என்பதால் அதனையும் மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி தர வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: School, School students, Tiruvarur