திருவாரூர் ஆழித்தேரோட்ட திருவிழா வரும் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற உள்ளதாக திருவாரூர் தியாகராஜர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பஞ்சபூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குவது திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலாகும். மேலும் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது திருவாரூர் தேர். ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
அலங்கரிக்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொறுத்தப்பட்டுள்ளது. இந்த தேர் மேல் பகுதி 4 அடுக்குகளாக மூங்கில் மற்றும் சவுக்கு மரங்களை கொண்டு கட்டப்பட்டு கீற்று வேய்ந்து, 7 ஆயிரத்து 500 சதுர அடி கொண்ட தேர் சீலைகளால் அலங்கரிக்கப்படுகிறது.
மிக பிரமாண்டமான ஆழித்தேரின் தியாகராஜா சுவாமி வீற்றிருக்க 4 வீதிகளில் வீதியுலா வரும் அழகும் காண்போரை வியக்க வைக்கும். ஆழித்தேர் திருவிழா அஸ்த நட்சத்திரத்தில் கொடியேறி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேர் திருவிழா நடத்த வேண்டும் என்பது ஆகம விதி கருதப்படுகிறது. அந்த வகையில் வரும் ஏப்ரல் 1ம் தேதி ஆயில்ய நட்சத்திரம் வருவதையொட்டி அன்றைய தினம் தேரோட்டம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இதையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலின் பங்குனி உத்திர விழாவுக்கான பந்தகால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது. இதில் கோவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்க பங்குனி உத்திர பெருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தத்தை செய்து வைத்தனர்.
செய்தியாளர் : ராஜசேகர் - திருவாரூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Tiruvarur