திருவாரூர் மாவட்டம் மேப்பலம் பகுதியைச் சேர்ந்த முருகையன் என்பவரது மகன் நரேஷ் குமார் (வயது 24). இவர் பி.காம் படித்து முடித்துவிட்டு திருவாரூரில் ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் நத்தம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகள் சுஷ்மிதா (வயது 21) என்பவருக்கும் கல்லூரி படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுஷ்மிதாவின் பெரியம்மா வீடு நரேஷ் குமாரின் வீட்டின் அருகில் உள்ளதால் இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த மூன்று வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. சுஷ்மிதா இளங்கலை வரலாறு முடித்துவிட்டு தற்போது பி.எட் படித்து வந்துள்ளார். இந்தநிலையில் காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த காரணத்தினால் சுஷ்மிதா 8 மாத கர்ப்பமாகி உள்ளார். இந்த விவகாரம் சுஷ்மிதாவின் வீட்டிற்கு தெரிய வர அவர்கள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சுஷ்மிதா, நரேஷ்குமார் வீட்டிற்கு வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து பேசி காதலர்கள் இருவரையும் மாலை மாற்றிக் கொள்ள செய்துள்ளனர். மேலும் பிப்ரவரி 12ஆம் தேதி இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது எனவும் ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து சுஷ்மிதா நரேஷ் குமாரின் வீட்டில் கடந்த ஒன்றரை மாதமாக தங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் மூன்று நாட்களில் திருமணம் நடக்கவிருப்பதால் திருமணத்திற்கு தேவையான துணி மற்றும் தாலி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக நரேஷ்குமாரின் அம்மா மற்றும் உறவினர்கள் திருவாரூருக்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனியே இருந்த சுஷ்மிதா, வீட்டிற்கு பின்புறம் உள்ள கூரைக் கொட்டகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. வெளியில் சென்று திரும்பி வந்து பார்த்த நரேஷ் குமார் அழுது கூச்சலிட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சுஷ்மிதாவின் சடலத்தை மீட்டு காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து கொரடாச்சேரி காவல்துறையினர் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது கொலையா அல்லது தற்கொலையா என்கிற கோணத்தில் காவல்துறையினர் நரேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூன்று நாட்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் கர்ப்பிணி பெண் தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதும், பெண்ணின் பெற்றோர் கதறி அழுததும் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
செய்தியாளர் : ராஜசேகர் (திருவாரூர்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Pregnant, Sucide, Tiruvarur